
நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்ததோடு குவாலிஃபயர் 1 போட்டியில் விளையாடவும் தகுதி பெற்றுள்ளது. அந்த வகையில் நேற்று லக்னோ நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ அணியானது 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் குவிக்கவே 228 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற பிரம்மாண்ட இலக்கு பெங்களூரு அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்த போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெறுமா? என்கிற சந்தேகமும் இருந்தது.
ஆனால் இரண்டாம் பாதியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆர்.சி.பி அணியானது லக்னோ அணியின் பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர் கொண்டு 18.4 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்ளை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக ஜிதேஷ் சர்மா 85 ரன்களையும், விராட் கோலி 54 ரன்களையும் குவித்து அசத்தினர்.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் 30 பந்துகளை சந்தித்த விராட் கோலி 10 பவுண்டரியுடன் 54 ரன்கள் குவித்து அசத்திய வேளையில் ஐபிஎல் தொடரில் டேவிட் வார்னரை பின்னுக்கு தள்ளியது மட்டுமின்றி மேலும் 2 முக்கிய சாதனைகளை நிகழ்த்தி அசத்தியுள்ளார். அந்த வகையில் அவர் படைத்த சாதனை யாதெனில் :
இதுவரை ஐபிஎல் தொடரில் அதிக அரைசதங்களை அடித்த வீரர்களின் பட்டியலில் டேவிட் வார்னர் மற்றும் விராட் கோலி ஆகியோர் 62 அரைசதங்களுடன் முதலிடத்தில் இருந்த வேளையில் நேற்று அடித்த அரைசதத்தின் மூலம் 63 அரைசதத்தை பதிவு செய்த விராட் கோலி ஐபிஎல் போட்டிகளில் அதிக அரை சதங்கள் அடித்த வீரர் என்ற முத்திரையை பதித்துள்ளார். அதே போன்று டி20 கிரிக்கெட்டில் உலகளவில் ஒரே அணிக்காக 9000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையும் விராட் கோலி நிகழ்த்தி உள்ளார்.
இதையும் படிங்க : குட்டிக்கரணம் அடித்து கொண்டாடிய ரிஷப் பண்ட்.. 30 லட்சம் அபராதத்தால் நீடிக்காத மகிழ்ச்சி.. பரிதாப விவரம்
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஆர்.சி.பி அணிக்காக விளையாடி வரும் அவர் இதுவரை அந்த அணிக்காக மட்டும் 9030 ரன்களை குவித்துள்ளார். அதேபோன்று ஐபிஎல் வரலாற்றில் 5 சீசனில் 600 ரன்களுக்கு மேல் குவித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையையும் அவர் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.