IND vs SL : மீண்டும் சதமடித்த கிங் விராட் கோலி – ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினை மிஞ்சி மலைக்க வைக்கும் 2 பிரம்மாண்ட உலக சாதனை

Virat Kohli 46
- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 2 – 0* என்ற கணக்கில் முன்னிலை பெற்று ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. அந்த நிலைமையில் ஜனவரி 15ஆம் தேதியன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் துவங்கிய இத்தொடரின் சம்பிரதாய கடைசி போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு பவர் பிளே ஓவர்களில் ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடிய சுப்மன் கில் விரைவாக ரன்களை சேர்த்தார்.

அவருடன் மறுபுறம் சற்று நிதான பேட்டிங்கை வெளிப்படுத்திய ரோகித் சர்மா இலங்கை பவுலர்களை நிதானமாக எதிர்கொண்டார். 16 ஓவர்கள் வரை நிலைத்து நின்று இந்தியாவுக்கு 95 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த இந்த ஜோடியில் சதத்தை நெருங்கிய ரோகித் சர்மா 2 பவுண்டரி 3 சிக்சருடன் 42 (49) ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் வந்த விராட் கோலி தனது ஸ்டைலில் நிதானமாக நின்று பவுண்டரிகளை பறக்க விட்டு ரன்களை சேர்க்க மறுபுறம் சிறப்பாக பேட்டிங் செய்த சுப்மன் கில் முதல் ஆளாக அரை சதமடித்து இந்தியாவை வலுப்படுத்தினார்.

- Advertisement -

அபார சாதனை:
நேரம் செல்ல இலங்கை பவுலர்களை அபாரமாக எதிர்கொண்ட இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு மிகச் சிறந்த தொடக்கத்தை கொடுத்தது. அதே வகையில் அசத்திய அந்த ஜோடியில் விராட் கோலி அரை சதமடிக்க மறுபுறம் ஆரம்பம் முதலே அசத்தலாக பேட்டிங் செய்த சுப்மன் கில் ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய 2வது சதத்தை விளாசி 14 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 116 (97) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அவருக்குப் பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் நல்ல தொடக்கத்தை வீணடிக்காத வகையில் அதிரடியாக பேட்டிங் செய்த நிலையில் மறுபுறம் அதிரடியை அதிகப்படுத்திய விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய 46வது சதத்தை விளாசி அசத்தினார். குறிப்பாக இத்தொடரின் முதல் போட்டியிலேயே சதமடித்திருந்த அவர் இலங்கைக்கு எதிராக மட்டும் ஒட்டுமொத்தமாக தனது கேரியரில் 10 சதங்களை அடித்துள்ளார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக 10 சதங்களை அடித்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

- Advertisement -

இதற்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கரும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக விராட் கோலியும் அதிகபட்சமாக தலா 9 சதங்களை அடித்துள்ளனர். அத்துடன் அவர் அடித்துள்ள 46 சதங்களில் இந்திய மண்ணில் 21 சதங்களை அடித்துள்ளார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட நாட்டில் அதிக சதங்களை அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்த அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் இந்திய மண்ணில் 20 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

இந்த சதங்களை சச்சின் உள்ளிட்ட இதர ஜாம்பவான் வீரர்கள் 300க்கும் மேற்பட்ட இன்னிங்ஸில் அடித்துள்ள நிலையில் விராட் கோலி மட்டும் 268 இன்னிங்ஸ்சில் அடித்து தன்னை கிங் என்று நிரூபித்து 2 மலைக்க வைக்கும் உலக சாதனைகளை படைத்துள்ளார். அந்த வகையில் அவருடன் தொடர்ந்து பேட்டிங் செய்து 3வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஸ்ரேயாஸ் ஐயர் 38 (32) ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் அடுத்து வந்த ராகுல் 7 (6) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். கடைசி நேரத்தில் களமிறங்கிய சூரியகுமார் அதிரடி காட்ட வேண்டிய கட்டாயத்தால் 4 (4) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார்.

இதையும் படிங்க: மீண்டும் புறக்கணித்த தேர்வுக் குழுவை இன்ஸ்டாகிராம் பதிவால் தாக்கிய சர்பிராஸ் கான் – ரசிகர்கள் ஆதங்கம்

ஆனால் மறுபுறம் சதமடித்தும் அவுட்டாகாமல் அடம் பிடித்து கடைசி நேரத்தில் அதிரடியை இரு மடங்கு அதிகப்படுத்திய விராட் கோலி இலங்கை பவுலர்களை பந்தாடி 13 பவுண்டரி 8 சிக்ஸருடன் 166* (110) ரன்களை 150.91 என்ற சிறப்பான ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி இந்தியாவுக்கு சூப்பர் பினிஷிங் கொடுத்தார். அவரது அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்தியா 390/5 ரன்களை விளாசி அசத்திய நிலையில் இலங்கை சார்பில் அதிகபட்சமாக கௌசன் ரஜிதா மற்றும் லகிரு குமாரா ஆகியோர் தலா 2 விக்கெட்களை எடுத்தனர்.

Advertisement