மீண்டும் புறக்கணித்த தேர்வுக் குழுவை இன்ஸ்டாகிராம் பதிவால் தாக்கிய சர்பிராஸ் கான் – ரசிகர்கள் ஆதங்கம்

Sarfaraz-khan-2
- Advertisement -

வரும் ஜூன் மாதம் லண்டன் ஓவலில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற வரும் பிப்ரவரி மாதம் ஆஸ்திரிலியாக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய கிரிக்கெட் அணி களமிறங்குகிறது. 4 போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரில் முதலிரண்டு போட்டிகளுக்கு ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி வழக்கம் போல சில சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சூரியகுமார் யாதவ், இசான் கிசான் ஆகியோர் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்ட போதிலும் சமீப காலங்களில் உள்ளூர் கிரிக்கெட்டில் அதிரடியாக செயல்பட்டு வரும் சர்பராஸ் கான் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது எந்த ரசிகரையுமே திருப்தி படுத்தவில்லை.

அதிலும் குறிப்பாக வங்கதேசத்துக்கு எதிராக இரட்டை சதமடித்த இசான் கிசானும் தற்சமயத்தில் டி20 கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலிக்கும் சூரியகுமார் யாதவும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் செயல்பட்ட காரணத்தால் சம்பந்தமின்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். ஏனெனில் என்னதான் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அட்டகாசமான பார்மில் இருந்தாலும் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர்களுடைய பேட்டிங் சராசரி முறையே 38.76, 44.75 என சுமாராகவே உள்ளது.

- Advertisement -

இன்ஸ்டாகிராம் பதிலடி:
மறுபுறம் உள்ளூர் கிரிக்கெட்டில் அவர்களை விட மும்மடங்கு முரட்டுத்தனமாக செயல்பட்டு வரும் சர்பராஸ் கான் 2019க்குப்பின் 9 சதங்கள் 5 அரை சதங்கள் 3 இரட்டை சதங்கள் 1 முச்சதம் உட்பட 2289 ரன்களை 134.64 என்ற அபாரமான சராசரியில் எடுத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பையிலும் இது வரை 431 ரன்களை 70.51 என்ற சராசரியில் எடுத்துள்ள அவரை தேர்வுக்குழு மீண்டும் புறக்கணித்துள்ளது பல ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் கோபமடைய வைத்துள்ளது.

மேலும் இந்திய டெஸ்ட் அணிக்கு இந்திய உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி கோப்பை செயல்பாடுகளை கருத்தில் கொண்டு தேர்வு செய்யாமல் வெள்ளை பந்து கிரிக்கெட்டை கருத்தில் கொண்டு தேர்வு செய்து சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழு முட்டாள்தனமாக நடந்து கொண்டுள்ளதாக நிறைய ரசிகர்கள் சரமாரியாக விமர்சிக்கிறார்கள். இந்நிலையில் தம்மை புறக்கணித்துள்ள தேர்வுக்குழுவுக்கு உள்ளூர் கிரிக்கெட்டில் தமது செயல்பாடுகள் அடங்கிய புள்ளி விவரங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆதாரத்துடன் பதிவிட்டு சர்பராஸ் கான் மறைமுகமான பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

இதுவரை மும்பை அணிக்காக 30 இன்னிங்ஸில் 2436 ரன்களை 110.73 என்ற அபாரமான சராசரியில் குவித்துள்ள புள்ளி விவரத்தை முதல் பதிவில் பதிவிட்டுள்ள அவர் 80.47 என்ற தன்னுடைய முதல் தர கிரிக்கெட் கேரியரின் ஒட்டு மொத்த பேட்டிங் சராசரியை 2வது பதிவாக பதிவிட்டுள்ளார். அவருடைய 80.47 என்ற பேட்டிங் சராசரி என்பது உலகிலேயே குறைந்தபட்சம் 50 இன்னிங்ஸ் விளையாடிய வீரர்களில் 2வது அதிகபட்ச பேட்டிங் சராசரியாகும்.

குறிப்பாக ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனுக்கு (95.17) பின் உள்ளூர் முதல் தர கிரிக்கெட்டில் அதிக பேட்டிங் சராசரியை கொண்டுள்ள வீரராக அபாரமான சாதனை படைத்துள்ளதை சர்பிராஸ் கான் சுட்டிக்காட்டியுள்ளார். மொத்தத்தில் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டும் தமக்கு வாய்ப்பு கொடுக்கவில்லையே என்ற ஆதங்கத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் தேர்வுக்குழுவுக்கு மறைமுகமான பதிலடி கொடுத்து வாய்ப்பையும் கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: சொந்த அணி வீரர்களுக்கு நீங்களே சப்போர்ட் பண்ணலனா எப்படி? கேப்டன் ரோஹித் மீது அஷ்வின் அதிருப்தி – காரணம் என்ன

அதை பார்க்கும் ரசிகர்கள் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற லட்சியத்துடன் களத்தில் சிறப்பாக செயல்படும் வீரர் இப்படி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாய்ப்பு கேட்கும் அளவுக்கு இந்திய தேர்வுக்குழு, அணி நிர்வாகம் மற்றும் பிசிசிஐ நடந்து கொள்வது மிகவும் வேதனைக்குரியது என்று ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். இருப்பினும் 25 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தலாக செயல்பட்டு வருவதால் விரைவில் இந்திய அணியில் விளையாடு வாய்ப்பு தாமாக தேடி வரும் காலம் நெருங்கி விட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement