இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்தார். ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் சிறப்பாக செயல்பட்டதால் தோனி தலைமையில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். அப்படியே 2017 சாம்பியன்ஸ் ட்ராபி வரை அஸ்வின் 3 வகையான இந்திய அணியிலும் முதன்மை ஸ்பின்னராக இருந்தார்.
ஆனால் அதன் பின் கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி தலையிலான இந்திய அணி நிர்வாகம் அவரை வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் கழற்றி விட்டது. அத்துடன் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருந்தும் வெளிநாட்டு மண்ணில் சரிப்பட்டு வர மாட்டார் என்று கருதும் இந்திய அணி நிர்வாகம் அவரை 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் பெஞ்சில் அமர வைத்தது தோல்வியை கொடுத்தது.
கம்பீர் ஆதங்கம்:
அத்துடன் 2023 உலகக் கோப்பை ஃபைனலிலும் அஸ்வினை எடுக்காதது இந்தியாவின் தோல்விக்கு காரணமானது. அந்த வகையில் 500 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்தும் இதுவரை இந்திய அணியின் பிளேயிங் லெவனில் கூட அஸ்வினுக்கு நிலையான இடம் கிடைக்கவில்லை என்பது தமிழக ரசிகர்களின் ஆதங்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வினின் பேட்டிங் திறமையை இந்தியா சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று கௌதம் கம்பீர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் சுனில் நரேன் போல அஸ்வினிடம் நல்ல பேட்டிங் திறமை இருப்பதாகவும் கம்பீர் மறைமுகமாக தெரிவித்துள்ளார். இது பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் யூடியூப் பக்கத்தில் நேருக்கு நேராக கௌதம் கம்பீர் பேசியது பின்வருமாறு. “100வது டெஸ்ட், 500 விக்கெட்டுகள் போன்ற பல விஷயங்களுக்காக உங்களை நான் வாழ்த்த விரும்புகிறேன். அதே சமயம் நான் கொஞ்சம் ஏமாற்றமாகவும் இருக்கிறேன்”
“ஏனெனில் பேட்டிங்கில் உங்களிடம் இருக்கும் திறமையை இந்த நாடு சரியாக பார்க்கவில்லை. குறிப்பாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில். இதை நான் நீண்ட காலத்திற்கு முன்பாகவே எப்போது சொன்னேன் என்று சரியாக தெரியவில்லை. நீங்கள் இந்திய அணிக்காக பேட்டிங்கில் 5, 6 அல்லது 4வது இடத்தில் கூட விளையாடியிருக்க வேண்டும்”
இதையும் படிங்க: 110மீ சிக்ஸர் மட்டும் நின்னு பேசாது.. தோனியின் ஐபிஎல் சகாப்தம் முடிந்து விட்டதா? வாசிம் அக்ரம் கருத்து
“அது தான் இந்த நாடு தவற விட்ட ஒரு விஷயம் என்று நினைக்கிறேன். அவர்கள் உங்களுடைய பவுலிங் திறமையை பார்த்தனர். ஆனால் பேட்டிங்கில் இருக்கும் திறமையை பார்க்கவில்லை” என்று கூறினார். அவர் கூறுவது போல டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 சதங்களுடன் 3309 ரன்களையும் ஒருநாள் கிரிக்கெட்டில் 707 ரன்களையும் டி20 கிரிக்கெட்டில் 184 ரன்களையும் அடித்துள்ள அஸ்வின் ஓரளவு நல்ல பேட்டிங் திறமையையும் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.



