IND vs PAK : பாக் பவுலர்களை ஊதி தள்ளிய கிங் கோலி – சச்சினின் இரட்டை சாதனையை அதிவேகமாக உடைத்து புதிய உலக சாதனை

Virat Kohli 122
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 10ஆம் தேதி இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்ற முக்கியமான சூப்பர் 4 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு இம்முறை சாகின் அப்ரிடி போன்ற பவுலர்களை திறம்பட எதிர்கொண்ட ரோகித் சர்மா – சுப்மன் கில் ஆகியோர் 121 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கம் கொடுத்தனர். அதில் ரோகித் சர்மா அதிரடியாக 56 ரன்களும் சுப்மன் கில் 58 ரன்களும் எடுத்து பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்து இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்தனர்.

அதை தொடர்ந்து விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் பேட்டிங்கை துவங்கிய போது மழை வந்ததால் செப்டம்பர் 11ஆம் தேதி மீண்டும் ரிசர்வ் நாளில் போட்டி நடைபெற்றது. அதில் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்த விராட் கோலி நிதானமான ரன் குவித்த நிலையில் காயத்திலிருந்து குணமடைந்த கேஎல் ராகுலும் நீண்ட நாட்கள் கழித்து தமக்கே உரித்தான கிளாஸ் நிறைந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி பாகிஸ்தான் பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டார்.

- Advertisement -

சச்சினை முந்திய விராட் கோலி:
அதற்கேற்றார் போல் பாகிஸ்தான் பவுலர்கள் சுமாராக பந்து வீசியதை பயன்படுத்திய இந்த ஜோடி நேரம் செல்ல செல்ல நங்கூரமாகவும் அதிரடியாகவும் செயல்பட்டு கடைசி வரை அவுட்டாகாமல் 50 ஓவர்களில் இந்தியா 356/2 ரன்கள் சேர்க்க உதவியது. அதில் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடிய ராகுல் 12 பவுண்டரி 2 சிக்ஸருடன் 111* (106) ரன்கள் விளாசி அபார கம்பேக் கொடுத்த நிலையில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 9 பவுண்டரி 3 சிக்சருடன் 122* (94) ரன்கள் விளாசினார்.

அந்த வகையில் இப்போட்டியில் அடித்த 122 ரன்களையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர், குமார் சங்ககாரா, ரிக்கி பாண்டிங், ஜெயசூர்யா ஆகியோருக்கு பின் 13,000 ரன்களை கடந்த 5வது வீரர் (13024*) என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். அதை விட 267 இன்னிங்ஸிலேயே இந்த மைல்கல்லை கடந்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 13000 ரன்கள் அடித்த வீரர் என்ற ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் ஆல் டைம் சாதனையை தகர்த்து புதிய வரலாறு படைத்தார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 276 இன்னிங்ஸ்*
2. சச்சின் டெண்டுல்கர் : 321 இன்னிங்ஸ்
3. ரிக்கி பாண்டிங் : 341 இன்னிங்ஸ்
4. குமார் சங்ககாரா : 363 இன்னிங்ஸ்
5. சனாத் ஜெயசூர்யா : 416 இன்னிங்ஸ்

- Advertisement -

அதே போல ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 47 சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 77 சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் மற்றுமொரு சாதனையும் உடைத்த விராட் கோலி புதிய வரலாற்றை எழுதியுள்ளார்.

இதையும் படிங்க: IND vs PAK : என்னையா வேணாம்ன்னு சொன்னீங்க? மாஸ் கம்பேக் கொடுத்த கேஎல் ராகுல் – பாக் பவுலர்களை பந்தாடிய கிங் கோலி

இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் 435 இன்னிங்ஸில் அடித்த 47 சதங்களை விராட் கோலி 267 இன்னிங்ஸிலேயே அடித்துள்ளார். அதே போலவே சர்வதேச கிரிக்கெட்டில் 593 இன்னிங்ஸில் சச்சின் அடித்த 77 சாதனங்களை விராட் கோலி 561 இன்னிங்ஸிலேயே அடித்துள்ளார்.

Advertisement