IND vs WI : ஜேக் காலிஸை மிஞ்சி வரலாறு படைத்த கிங் கோலி – 500வது போட்டியில் வேறு யாரும் படைக்காத தனித்துவ உலக சாதனை

Jacques Kallis Virat Kohli
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியது. அதைத் தொடர்ந்து இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டி ஜூலை 20ஆம் தேதி ட்ரினிடாட் நகரில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துவங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்த நிலையில் இந்திய அணியில் காயமடைந்த சர்துல் தாக்கூருக்கு பதிலாக முகேஷ் குமார் அறிமுகமாக தேர்வானார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கடந்த போட்டியை போலவே இந்த போட்டியிலும் சுமாராக பந்து வீசிய வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்ட ரோகித் சர்மா – யசஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி சீரான ரன் குவிப்பில் ஈடுபட்டது. அதில் அரை சதமடித்த ஜெய்ஸ்வால் 139 ரன்கள் ஓப்பனிங் ஃபார்ட்னர்சிப் அமைத்து மிகச் சிறப்பான துவக்கத்தை கொடுத்த போது 57 ரன்களில் அவுட்டாகி சென்ற நிலையில் அடுத்ததாக வந்த சுப்மன் கில் மீண்டும் 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்

- Advertisement -

கிங் கோலியின் சாதனை:
அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் சிறப்பாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9 பவுண்டரி 2 சிக்சருடன் 80 ரன்களில் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து வந்த ரகானே 8 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் மறுபுறம் களமிறங்கியிருந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தனது தரத்திற்கு நிகரான கிளாஸ் பேட்டிங்கை வெளிப்படுத்தினார். குறிப்பாக கடந்த போட்டியில் பவுண்டரி அடிப்பதற்கே தடுமாறிய அவர் இந்த போட்டியில் கொஞ்சமும் தடுமாறாமல் ஆரம்பம் முதலே கவர் டிரைவ் போன்ற அட்டகாசமான ஷாட்களை அடித்து ரசிகர்களை மகிழ்வித்து அரை சதமடித்தார்.

அவருடன் விளையாடிய ரவீந்திர ஜடேஜா தனது பங்கிற்கு நிதான பேட்டிங்கை வெளிப்படுத்தி 5வது விக்கெட்டுக்கு 106 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 36* ரன்கள் எடுத்த போது நிறைவுக்கு வந்த முதல் நாள் முடிவில் 288/4 ரன்களை எடுத்துள்ள இந்தியாவுக்கு களத்தில் விராட் கோலி 87* ரன்களுடன் விளையாடி வருகிறார். முன்னதாக இப்போட்டியில் களமிறங்கிய அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 500 போட்டிகளில் விளையாடிய 4வது இந்திய வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி, ராகுல் டிராவிட் ஆகியோருக்கு பின் படைத்து உலக அளவில் 10வது வீரர் என்ற பெருமையும் பெற்றார்.

- Advertisement -

மேலும் கடந்த 15 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் 25000க்கும் மேற்பட்ட ரன்களை 50க்கும் மேற்பட்ட சராசரியில் குவித்துள்ள அவர் உலகிலேயே 500 போட்டிகளின் முடிவில் 50க்கும் மேற்பட்ட பேட்டிங் சராசரியை கொண்ட ஒரே வீரர் மற்றும் அதிக ரன்கள் குவித்த வீரர் ஆகிய இரட்டை உலக சாதனைகளை படைத்தார். இந்நிலையில் இந்த போட்டியில் அட்டகாசமான கவர் டிரைவ் விளாசி பவுண்டரியை அடித்து 50 ரன்களை கடந்த அவர் சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய 500வது போட்டியில் அரை சதமடித்த முதல் வீரர் என்ற மற்றுமொரு மாபெரும் உலக சாதனையை படைத்துள்ளார்.

அதாவது சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், ராகுல் டிராவிட், மகிளா ஜெயவர்த்தனே, குமார் சங்ககாரா, சனாத் ஜெயசூர்யா, சாகித் அப்ரிடி, ஜேக் காலிஸ் எம்எஸ் தோனி என இதற்கு முன் வரலாற்றில் தங்களுடைய 500வது போட்டியில் விளையாடிய எஞ்சிய 9 வீரர்களும் 50 ரன்களுக்கும் குறைவாகவே எடுத்து அவுட்டான நிலையில் முதல் முறையாக விராட் கோலி தான் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

- Advertisement -

இது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த 5வது வீரர் என்ற தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஜேக் காலிஸ் சாதனையும் தகர்த்துள்ளார் புதிய வரலாறு படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர் : 34357
2. குமார் சங்கக்காரா : 28016
3. ரிக்கி பாண்டிங் : 27483
4. மகிளா ஜெயவர்த்தனே : 25957
5. விராட் கோலி : 25548*
6. ஜாக் காலிஸ் : 25534
7. ராகுல் டிராவிட் : 24208

இதையும் படிங்க:IND vs WI : அரைசதம் அடிச்சாலும் நான் தப்பு பண்ணிட்டேன். முதல் நாள் ஆட்டத்திற்கு பிறகு பேசிய – யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

அது போக டெஸ்ட் கிரிக்கெட்டில் 4வது இடத்தில் அதிக ரன்கள் குவித்த 5வது வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றார். அந்த பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர் : 13492
2. மகிளா ஜெயவர்த்தனே : 9509 3. ஜாக் காலிஸ் : 9033
4. பிரைன் லாரா : 7535
5. விராட் கோலி : 7097*

Advertisement