IND vs AUS : ஆல் ஏரியாவிலும் கில்லியாக – 3 வகையான கிரிக்கெட்டிலும் யாரும் செய்யாத தனித்துவ உலக சாதனை படைத்த கிங் கோலி

- Advertisement -

உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையை 2 – 1 (4) என்ற கணக்கில் வென்ற இந்தியா சொந்த மண்ணில் தங்களை வலுவான அணி என்பதை மீண்டும் நிரூபித்தது. மறுபுறம் தொடரை இழந்தாலும் முக்கியமான 3வது போட்டியில் அபார வெற்றி பெற்று ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்த ஆஸ்திரேலியா தங்களது நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற்ற திருப்தியுடன் இத்தொடரை நிறைவு செய்தது. அதே சமயம் முக்கியமான கடைசி போட்டி டிராவில் முடிந்தாலும் இலங்கையை நியூசிலாந்து தோற்கடித்த உதவியுடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வதற்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

முன்னதாக கடந்த 2008இல் அறிமுகமாகி கடந்த 15 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் உலகின் அனைத்து நாடுகளிலும் அனைத்து தரமான பவுலர்களுக்கு எதிராக மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து 25000+ ரன்களையும் 75 சதங்களையும் விளாசி நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 2019க்குப்பின் சதடிக்காமல் தடுமாறியதை அனைவரும் அறிவோம். அதனால் பேசாமல் ஓய்வு பெற்று விடுங்கள் என்று நிறைய கிண்டல்கள் எழுந்த நிலையில் இந்திய அணியிலிருந்து நீக்குமாறு நிறைய முன்னாள் வீரர்கள் நன்றி மறந்து அவரை விமர்சித்தார்கள்.

- Advertisement -

கில்லி கிங் கோலி:
ஆனாலும் மனம் தளராமல் போராடிய அவர் கடந்த 2022 ஆசிய கோப்பையில் 1020 நாட்கள் கழித்து முதல் முறையாக டி20 கிரிக்கெட்டில் சதமடித்து தன் மீதான விமர்சனங்களை அடித்து நொறுக்கினார். அதே வேகத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு போராடிய அவர் சமீபத்திய வங்கதேசம் மற்றும் இலங்கை ஒருநாள் தொடர்களில் அடுத்தடுத்த சதங்களை விளாசி அசத்தினார். ஆனாலும் கிரிக்கெட்டின் உயிர்நாடியான டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடிக்காமல் இருந்து வந்த அவர் அந்த கதைக்கும் இத்தொடரில் அகமதாபாத் நகரில் நடைபெற்ற கடைசி போட்டியில் சற்று உடல்நிலை சரியில்லாத போதும் 364 பந்துகளை எதிர்கொண்டு தனது கேரியரின் 2வது மிகப்பெரிய இன்னிங்ஸ் விளையாடி 1205 நாட்கள் கழித்து சதமடித்து 186 ரன்கள் விளாசி முற்றுப்புள்ளி வைத்தார்.

இறுதியில் அப்போட்டி டிராவில் முடிந்தாலும் ஆஸ்திரேலியாவை விட இந்தியாவுக்கு 91 ரன்கள் முன்னிலை பெற்றுக் கொடுத்த காரணத்தால் ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை மொத்தம் 10 ஆட்டநாயகன் விருதுகளை வென்று அசத்தியுள்ளார். அத்துடன் ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட்டில் 38 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ள அவர் டி20 கிரிக்கெட்டில் 15 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார்.

- Advertisement -

இதன் வாயிலாக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என ஒவ்வொரு வகையான சர்வதேச கிரிக்கெட்டிலும் குறைந்தது தலா 10 ஆட்டநாயகன் விருதுகளை வென்ற முதல் வீரர் என்ற தனித்துவமான உலக சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். உலகில் அவரை தவிர்த்து வேறு எந்த வீரரும் 3 வகையான கிரிக்கெட்டிலும் தனித்தனியே தலா 10 ஆட்டநாயகன் விருதுகள் வென்றதே கிடையாது. பொதுவாக 3 வகையான வெவ்வேறு விதமான கிரிக்கெட்டிலும் சேர்ந்தார் போல் தொடர்ந்து சிறப்பாக விளையாடுவதே மிகப்பெரிய சவாலாகும்.

ஆனால் அதற்கேற்றார் போல் தன்னை வளைத்து உட்படுத்திக்கொண்டு கடந்த 15 வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வரும் விராட் கோலி உலகில் வேறு யாரும் படைக்காத இந்த தனித்துவமான சாதனையைப் படைத்து தன்னை ஜாம்பவான் வீரர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். மொத்தம் 58 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ள அவர் நவீன கிரிக்கெட்டில் இந்தியாவின் மேட்ச் வின்னராக ஆல் ஏரியாவிலும் கில்லியாக செயல்பட்டு வருவது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.

இதையும் படிங்க:பொதுவா அவங்க எங்கள நாக் அவுட் பண்ணுவாங்க ஆனா இப்போ காலை வாராம காப்பாற்றியதற்கு நன்றி – டிராவிட் மகிழ்ச்சி பேட்டி

மொத்தத்தில் தற்போது 3 வகையான கிரிக்கெட்டிலும் சதமடித்து முழுமையான பார்முக்கு திரும்பியுள்ள அவர் ஜூன் மாதம் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் கடந்த முறை கேப்டனாக தவற விட்ட கோப்பையை இம்முறை சாதாரண வீரராக சிறப்பாக செயல்பட்டு இந்தியாவிற்கு பெற்றுக் கொடுப்பாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement