பொதுவா அவங்க எங்கள நாக் அவுட் பண்ணுவாங்க ஆனா இப்போ காலை வாராம காப்பாற்றியதற்கு நன்றி – டிராவிட் மகிழ்ச்சி பேட்டி

Rahul-Dravid
- Advertisement -

இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் வரும் ஜூன் 7 – 11 வரை வரலாற்றின் 2வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி நடைபெறுகிறது. நவீன கிரிக்கெட்டில் டி20 போட்டிகளின் வருகையால் துவண்டு போன டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்ப்பிக்கும் வகையில் பிரத்தியேகமாக கடந்த 2019இல் ஐசிசி அறிமுகப்படுத்திய இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் முதல் தொடரில் லீக் சுற்றில் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் வரலாற்று வெற்றிகளை பெற்று விராட் கோலி தலைமையில் சக்கை போடு போட்ட இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெற்றது. ஆனால் சௌதம்டன் நகரில் நடைபெற்ற மாபெரும் ஃபைனலில் மழையின் குறுக்கீட்டுக்கு மத்தியில் வழக்கம் போல சொதப்பிய இந்தியாவை தோற்கடித்த நியூசிலாந்து முதல் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.

WTC

- Advertisement -

அப்போதிலிருந்து துவங்கிய 2வது தொடரில் விராட் கோலி கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்த பின் சில தோல்விகளை சந்தித்த இந்தியா கடந்த டிசம்பரில் வங்கதேச மண்ணில் 2 – 0 (2) என்ற கணக்கில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முன்னேறியது. அந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் ஃபைனலுக்கு செல்ல குறைந்தது 3 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்தியா முதலிரண்டு போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்றியது.

ட்ராவிட் நன்றி:
இருப்பினும் 3வது போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றதுடன் கடைசி போட்டியில் இந்தியாவை வெல்ல விடாமல் டிரா செய்தது. ஆனால் அதற்கு முன்பாகவே இந்தியாவுக்கு போட்டியாக இருந்த இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அனல் பறந்த கடைசி நாளில் கடைசி பந்தில் நியூசிலாந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அதனால் ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் மோதுவதற்கு தகுதி பெற மறைமுகமாக உதவிய நியூசிலாந்துக்கு இந்திய ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

இருப்பினும் 2000 நாக் அவுட் டிராபி முதல் 2019 உலகக்கோப்பை, 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரை வரலாற்றில் நடைபெற்ற பெரும்பாலான ஐசிசி தொடர்களில் தங்களை நாக் அவுட் போட்டிகளில் தோற்கடித்து வெளியேற்றிய பெருமையை கொண்ட நியூசிலாந்து இப்போட்டியில் தங்களை மீண்டும் வெளியேற்றும் என்று எதிர்பார்த்ததாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ஆனால் இம்முறை காலை வராமல் உதவி செய்த நியூசிலாந்துக்கு நன்றி தெரிவிக்கும் அவர் இலங்கைக்கு எதிரான போட்டியின் பரபரப்பான கடைசி 5 ஓவர்களை ரசிகர்களைப் போலவே தொலைக்காட்சியில் பார்த்ததாக மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். இது பற்றி அகமதாபாத் போட்டிக்கு பின் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நாங்கள் விளையாடும் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் முடிவுகளை காண முயற்சிக்கிறோம். குறிப்பாக இத்தொடரில் 3 போட்டிகளை வென்று நியூசிலாந்து – இலங்கை தொடரை கணக்கில் எடுக்காமல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை எங்கள் கையிலேயே வைத்திருக்க விரும்பினோம். இருப்பினும் அகமதாபாத் மைதானத்தின் பிட்ச் பார்த்த பின் டாஸ் வெல்வது முக்கியம் என்பதை உணர்ந்தோம். ஆனால் அது கைநழுவி சென்ற போது ஆஸ்திரேலியா முதலிரண்டு நாட்கள் சிறப்பாக பேட்டிங் செய்ததால் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டியின் முடிவை நம்பியிருக்க வேண்டிய நிலைமைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம்”

Dravid

“அதனால் அப்போட்டியை ஆவலுடன் பார்த்த நாங்கள் இலங்கை வெல்லக்கூடாது என்று நம்பினோம். மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2 வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் தொடர் என்பதுடன் அதில் அனைத்து அணிகளும் 6 தொடர்களில் விளையாட வேண்டும் என்பதால் நீங்கள் மற்ற அணிகளின் வெற்றிகளை சார்ந்திருக்க வேண்டும் என்பது இயற்கையாகவே ஏற்படக்கூடிய நிலைமையாகும். இதில் நல்ல அம்சம் என்னவெனில் பொதுவாக எங்களை ஐசிசி தொடர்களில் நாக் அவுட் செய்து வரும் நியூசிலாந்து இம்முறை சிறிய உதவி செய்துள்ளது”

இதையும் படிங்க:வீடியோ : 2 ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தாமாக சென்று – ஜெர்ஸியை பரிசளித்து மனதையும் வென்ற கிங் கோலி

“அதற்கு அவர்களுக்கு நாங்கள் நன்றியை தெரிவிக்கிறோம். அப்போட்டியில் டிராவுக்கு பதில் நியூசிலாந்து வெற்றி காண முயற்சித்தது எங்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் எங்களை அமைதிப்படுத்திக் கொண்ட நாங்கள் உணவு இடைவெளியில் கடைசி 5 – 6 அவர்களை பார்த்தோம்” என்று கூறினார்.

Advertisement