வீடியோ : 2 ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தாமாக சென்று – ஜெர்ஸியை பரிசளித்து மனதையும் வென்ற கிங் கோலி

Usman Khawaja Virat kohli
Advertisement

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடிய ஆஸ்திரேலியா 2 – 1 (4) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் பட் கமின்ஸ், டேவிட் வார்னர் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் விலகியதால் 4 – 0 (4) என்ற கணக்கில் ஒயிட் வாஷ் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் கொதித்தெழுந்து 3வது போட்டியில் மிகச் சிறப்பான வெற்றி பெற்று தங்களது நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றது.

IND vs AUS

மேலும் அஹமதாபாத் நகரில் நடைபெற்ற கடைசி போட்டியில் 480 ரன்கள் குவித்து மிகச் சிறப்பாக செயல்பட்ட அந்த அணி 2வது இன்னிங்ஸில் 175/2 ரன்கள் குவித்து இந்தியாவை வெற்றி பெற விடாமல் போட்டியை டிரா செய்தது. அந்த வகையில் தோற்றாலும் போராடி தோற்கும் ஆஸ்திரேலியர்கள் என்பதை நிரூபித்த அந்த அணி கோப்பையை வெல்ல முடியவில்லை என்றாலும் திருப்திகரமாக இத்தொடரை முடித்துள்ளது. மறுபுறம் 2017, 2018/19, 2020/21, 2023* என அடுத்தடுத்து 4 தொடர்களை வென்று கிரிக்கெட்டின் அசுரன் ஆஸ்திரேலியாவை தொடர்ந்து தோற்கடித்து வரும் இந்தியா தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

- Advertisement -

மனதையும் வென்ற கிங் கோலி:
மேலும் இந்த போட்டியில் வெல்ல முடியாமல் போனாலும் இலங்கையை நியூசிலாந்து தோற்கடித்ததால் வரும் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆஸ்திரேலியாவுடன் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்துவதற்கு இந்தியா தகுதி பெற்றது. அகமதாபாத் நகரில் நடைபெற்ற கடைசி போட்டியில் 1205 நாட்கள் கழித்து 2019க்குப்பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடிக்காமல் இருந்த கதைக்கு 186 ரன்கள் விளாசி முற்றுப்புள்ளி வைத்த இந்தியாவின் நம்பிக்கை நாயகன் விராட் கோலி ஆட்டநாயகன் விருது வென்றார்.

குறிப்பாக சற்று உடல் சரியில்லாத நிலையிலும் 364 பந்துகள் எதிர்கொண்டு தனது கேரியரில் 2வது மிகப்பெரிய இன்னிங்ஸ் விளையாடி இந்தியாவுக்கு 91 ரன்கள் முன்னிலை பெற்றுக் கொடுத்த அவர் ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளினார். அந்த நிலையில் இதே போட்டியில் ஆஸ்திரேலியாவுக்காக 422 பந்துகளை சந்தித்து இந்திய மண்ணில் அதிக பந்துகளை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனை படைத்து 180 ரன்கள் குவித்த உஸ்மான் கவாஜாவை பாராட்டும் வகையில் தன்னுடைய கையொப்பமிட்ட ஜெர்சியை போட்டியின் முடிவில் விராட் கோலி தாமாக சென்று பரிசளித்தார்.

- Advertisement -

அதை சற்றும் எதிர்ப்பாராத உஸ்மான் கவாஜா அதை கையில் வாங்கி மிகுந்த ஆவலுடன் பார்த்தார். குறிப்பாக பல வீரர்களும் ரசிகர்களும் ஆட்டோகிராப் மற்றும் ஜெர்ஸியை வாங்குவதற்காக காத்துக் கிடக்கும் நிலையில் தமக்கு தாமாக முன்வந்து அதை அன்பு பரிசாக கொடுத்த விராட் கோலிக்கு உஸ்மான் கவாஜா மனதார நன்றி தெரிவித்தார். அதே போல் ஆஸ்திரேலியாவின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அலெக்ஸ் கேரியையும் அதே இடத்தில் நேரடியாக சந்தித்த விராட் கோலி தன்னுடைய கையொப்பமிட்ட மற்றொரு ஜெர்சியை அன்பு பரிசாக வழங்கினார்.

அதற்கு அவரும் நன்றி தெரிவித்த நிலையில் தங்களது வீரர்களுக்கு தாமாக வந்து இந்த மறக்க முடியாத பரிசுகளை கொடுத்த விராட் கோலியை ஆஸ்திரேலிய ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பாராட்டி நன்றி தெரிவித்து வருகிறார்கள். இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் அடுத்தடுத்து நடைபெற்றாலும் ஐபிஎல் தொடருக்கு பின் லண்டனில் வரும் ஜூன் 7 முதல் 11 வரை நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்காக தான் அனைவரும் இப்போது முதலே ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க:IND vs AUS : அடுத்தமுறை எனக்கு வயசாயிடும். முடியுமானு பாக்கலாம் – ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் வெளிப்படை

அதில் கடந்த முறை ஃபைனல் வரை முன்னேறி நியூசிலாந்திடம் கோப்பையை கோட்டை விட்ட இந்தியா இம்முறை உலகின் நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலியாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை முத்தமிடுமா என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement