
ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் இந்திய ரசிகர்களை மகிழ்வித்து கோலாகலமாக நிறைவு பெற்றுள்ளது. அதில் சென்னையில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் ஹைதராபாத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா சாம்பியன் பட்டம் வென்றது. அதனால் 2012, 2014க்குப்பின் 3வது கோப்பையை வென்ற கொல்கத்தா அந்த அணி மும்பை மற்றும் சென்னை அணிகளை தொடர்ந்து 2வது வெற்றிகரமான ஐபிஎல் அணியாக வரலாறு படைத்தது.
மறுபுறம் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வெற்றியை கோட்டை விட்ட ஹைதராபாத் 2016க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. அதைத் தொடர்ந்து கோப்பையை வென்ற கொல்கத்தா அணிக்கு 20 கோடி பரிசும் தோல்வியை சந்தித்த ஹைதராபாத் அணிக்கு 12.50 ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது. அதே போல இதர வீரர்களுக்கான பரிசு தொகையும் வழங்கப்பட்டது.
கிங் கோலி சாதனை:
அதில் பெங்களூரு அணிக்காக விளையாடிய இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 15 போட்டிகளில் 741 ரன்களை 61.75 என்ற அபாரமான சராசரியில் குவித்தார். அதனால் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த அவர் ஆரஞ்சு தொப்பியை வென்றார். அதற்காக ஃபைனல் முடிந்ததும் 10 லட்சம் பரிசுத் தொகையுடன் ஆரஞ்சு தொப்பி விராட் கோலிக்கு பரிசாக வழங்கப்பட்டது.
அதை விராட் கோலியின் சார்பாக கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றுக் கொண்டார். முன்னதாக கடந்த 2016 சீசனில் 973 ரன்கள் விளாசிய விராட் கோலி ஒரு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து ஆரஞ்சு தொப்பியை வென்றதை ரசிகர்களால் மறக்க முடியாது. தற்போது இந்த ஆரஞ்சு தொப்பியையும் சேர்த்து விராட் கோலி மொத்தம் 2 ஆரஞ்சு தொப்பிகளை வென்றுள்ளார்.
இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆரஞ்சு தொப்பிகளை வென்ற முதல் இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர், ராபின் உத்தப்பா, கேஎல் ராகுல், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில் ஆகிய இந்திய வீரர்கள் தலா 1 மமுறை ஆரஞ்சு தொப்பியை வென்றதே முந்தைய சாதனையாகும். ஆனாலும் ஆர்சிபி அணி கோப்பையை வெல்லத் தவறியதால் விராட் கோலி ஏமாற்றத்தையே சந்தித்தார்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2024 பரிசுத்தொகை : கோப்பை வென்ற கொல்கத்தா, வெளியேறிய ராஜஸ்தான் அணிக்கு பரிசு எவ்வளவு.. முழு விவரம்
இருப்பினும் கடந்த உலகக் கோப்பையில் 765 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்த அவர் தற்போது ஐபிஎல் தொடரிலும் ஆரஞ்சு தொப்பியை வென்றுள்ளார். அந்த வகையில் அடுத்ததாக நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பைக்கு முன் அவர் உச்சகட்ட ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு பலத்தை கொடுக்கும் அம்சமாக பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து விரைவில் அமெரிக்காவுக்கு பயணிக்கும் விராட் கோலி உலகக் கோப்பையில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.