பகையுடன் முறைப்பு, கை கொடுத்துக் கொள்ளாத கங்குலி – விராட் கோலி, நேரலையில் அம்பலமான மோதல் – நடந்தது என்ன

- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 15ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 20வது லீக் போட்டியில் டெல்லியை 23 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பெங்களூரு தன்னுடைய 2வது வெற்றியை பதிவு செய்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்து பெங்களூரு 20 ஓவர்களில் 174/6 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 6 பவுண்டரி 1 சிக்சருடன் 50 (34) ரன்கள் எடுக்க டெல்லி சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் மற்றும் மிட்சேல் மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

அதை தொடர்ந்து 175 ரன்களை துரத்திய டெல்லி மீண்டும் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளில் இழந்து 20 ஓவரில் 151/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. டேவிட் வார்னர் 19, பிரிதிவி ஷா 1, மிட்சேல் மார்ஷ் 0, அக்சர் படேல் 21 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 50 (38) ரன்கள் எடுக்க பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக விஜய் குமார் 3 விக்கெட்களை எடுத்தார். அதனால் பரிதாபமாக தோற்ற டெல்லி 2013க்குப்பின் 10 வருடங்கள் கழித்து தங்களுடைய முதல் 5 போட்டிகளில் தொடர் தோல்விகளை பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடுகிறது.

- Advertisement -

அம்பலமான மோதல்:
அதை விட இப்போட்டி முடிந்ததும் இரு அணிகளை சேர்ந்தவர்களும் வழக்கம் போல வரிசையாக சென்று கை கொடுத்தனர். ஆனால் அப்போது டெல்லி அணியின் இயக்குனராக இருக்கும் முன்னாள் இந்திய கேப்டன் சௌரவ் கங்குலியும் பெங்களூரு நட்சத்திர வீரர் மற்றும் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலியும் ஒருவருக்கொருவர் கை கொடுத்துக் கொள்ளாமல் முகத்துக்கு முகத்தையும் பார்ப்பதை தவிர்த்து விலகிச் சென்றது இந்திய ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

முன்னாதாக 2017 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவின் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி உலகக் கோப்பை வெல்லவில்லை என்பதற்காக கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். அதனால் 2021 டி20 உலக கோப்பையுடன் டி20 கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்வதாக அறிவித்தார். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக துபாயில் முதல் முறையாக உலக கோப்பையில் தோற்றதால் அதிருப்தியடைந்த பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழுவினர் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு 2 வகையான கேப்டன்கள் தேவையில்லை என்ற கருத்துடன் விராட் கோலியின் ஒருநாள் கேப்டன்ஷிப் பதவியை வலுக்கட்டாயமாக பறித்து ரோகித் சர்மாவிடம் ஒப்படைத்தனர்.

- Advertisement -

அதனால் ஏமாற்றமடைந்த விராட் கோலி வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக இருந்தும் பணிச்சுமையை காரணமாக காட்டி திடீரென டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியையும் ராஜினாமா செய்தார். அப்போது விராட் கோலி டி20 கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக அப்போதைய பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்தார். இருப்பினும் தம்மிடம் யாரும் அப்படி கேட்டுக் கொள்ளவில்லை என்று கூறிய விராட் கோலி ஒருநாள் கேப்டன்ஷிப் பதவி பறிப்பதை பற்றி 2 மணி நேரங்கள் முன்பாகவே தம்மிடம் தெரிவிக்கப்பட்டதாக உண்மையை உடைத்தார்.

அதற்கு பதில் சொல்வதற்கு எதுவுமில்லை என்று தெரிவித்த கங்குலி நேரம் வரும் போது பிசிசிஐ பார்த்துக் கொள்ளும் என்று தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்தார். அப்போதிலிருந்தே விராட் கோலியின் கேப்டன்ஷிப் பதவி பறிபோவதற்கு கங்குலி தான் காரணம் என்று விமர்சித்த அவரது ரசிகர்கள் பிசிசிஐ தலைவர் பதவியை இழந்த போது கொண்டாடினர்.

- Advertisement -

அந்த நிலையில் கங்குலி ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக இல்லை ஆனால் விராட் கோலியை பிடிக்காதவராக இருந்தார் என்றும் அதனால் நாங்கள் தான் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து நீக்கியதாகவும் தேர்வுக்குழு தலைவராக இருந்த சேட்டன் சர்மா சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியின் ரகசிய கேமராவில் உண்மையை உளறினார். அதனால் கங்குலி – கோலி ஆகியோரிடையே மோதல் என்று வதந்திகளாக வந்த செய்திகள் உண்மையானது.

இதையும் படிங்க: IPL 2023 : வேறுயெந்த வீரரும் படைக்காத சாதனையை ஐ.பி.எல் தொடரில் நிகழ்த்திய விராட் கோலி – விவரம் இதோ

அந்த நிலையில் இப்போட்டியில் பவுண்டரி எல்லை அருகே கேட்ச் பிடித்த விராட் கோலி அங்கே அமர்ந்திருந்த கங்குலியை முறைத்துப் பார்த்தார். இறுதியில் இருவரும் கைகொடுத்து கொள்ளாதது அவர்களிடைய மோதல் என்பதை நேரலையில் மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement