IND vs PAK : ஹபீஸ் – ஜம்சேத் 11 வருட சாதனையை தூளாக்கி ஆசிய கோப்பையில் புதிய வரலாற்றை எழுதிய விராட் கோலி – கேஎல் ராகுல்

KL Rahul Virat Kohli 2
- Advertisement -

இலங்கையின் கொழும்பு நகரில் இருக்கும் ஆர் பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெற்ற ஆசிய கோப்பை 2023 தொடரின் முக்கியமான சூப்பர் 4 போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ஷாஹீன் அப்ரிடி போன்ற பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு 121 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச் சிறந்த துவக்கம் கொடுத்த கேப்டன் ரோகித் சர்மா 56 ரன்களும் சுப்மன் கில் 58 ரன்களும் குவித்து அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி ஆட்டமிழந்தனர்.

அவர்களை தொடர்ந்து விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்திய போது மழை ரத்து செய்த போட்டி செப்டம்பர் 11ஆம் தேதி மீண்டும் ரிசர்வ் நாளில் நடைபெற்றது. அதில் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்த விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவருமே அரை சதம் கடந்து பாகிஸ்தான் பவுலர்களுக்கு பெரிய சவாலை கொடுத்தனர். நேரம் செல்ல செல்ல நங்கூரமாக நின்று கடைசி வரை அவுட்டாகாமல் அடம் பிடித்த இந்த ஜோடியில் இருவருமே சதமடித்து மிரட்டினார்கள்.

- Advertisement -

சாதனை ஜோடி:
அதில் காயத்தில் இருந்து குணமடைந்து விளையாடிய கேஎல் ராகுல் தாம் ஃபார்முக்கு திரும்பி விட்டேன் என்பதை நிரூபிக்கும் வகையில் கிளாஸ் நிறைந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி 12 பவுண்டரி 2 சிக்ஸருடன் 111* (106) ரன்கள் விளாசி தன்னுடைய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். மறுபுறம் தமக்கு மிகவும் பிடித்த பாகிஸ்தானுக்கு எதிராக மீண்டும் அசத்திய விராட் கோலி 9 பவுண்டரி 3 சிக்சருடன் 122* (94) ரன்கள் விளாசி அதிவேகமாக 13,000 ரன்கள் அடித்த வீரர் போன்ற சில உலக சாதனைகளையும் படைத்தார்.

அந்த வகையில் 18வது ஓவரில் ஜோடி சேர்ந்து ரிசர்வ் நாளை கடந்து 50 ஓவர்கள் வரை நிலைத்து நின்று கடைசி வரை அவுட்டாகாமல் பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்ட அந்த ஜோடி 233 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. அதன் வாயிலாக ஆசிய கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட போட்டியில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்கள் குவித்த ஜோடி என்ற பாகிஸ்தானின் முகமது ஆபீஸ் – நாசர் ஜம்ஷேத்தின் 11 வருட ஆல் டைம் சாதனையை உடைத்த அந்த ஜோடி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

- Advertisement -

அந்த பட்டியல்:
1. விராட் கோலி – கேஎல் ராகுல் (இந்தியா) : 233, பாகிஸ்தானுக்கு எதிராக, 2023*
2. முகமது ஹபீஸ் – நாசர் ஜம்சேத் (பாகிஸ்தான்) : 224, இந்தியாவுக்கு எதிராக, 2012
3. சோயப் மாலிக் – யூய்ஸ் கான் (பாக்கிஸ்தான்) : 223, ஹாங்காங்கிற்கு எதிராக, 2004
4. பாபர் அசாம் – இப்திகார் அகமது (பாகிஸ்தான்) : 214, நேபாளுக்கு எதிராக, 2023

இதையும் படிங்க: IND vs PAK : பாக் பவுலர்களை ஊதி தள்ளிய கிங் கோலி – சச்சினின் இரட்டை சாதனையை அதிவேகமாக உடைத்து புதிய உலக சாதனை

முன்னதாக உலகக் கோப்பைக்கு முன்பாக இந்தியாவின் மிடில் ஆர்டர் மிகவும் பலவீனமாக இருப்பதாக யுவராஜ் சிங் போன்ற முன்னாள் வீரர்கள் கவலை தெரிவித்திருந்தனர். அந்த நிலைமையில் கடந்த போட்டியில் இஷான் கிசான் – ஹர்திக் பாண்டியா அசத்தியதை போல இம்முறை விராட் கோலி – ராகுல் அசத்தியுள்ளது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement