IPL 2023 : உங்கள விட வினோத் காம்ளி நல்லா ஸ்டார்ட் பண்ணி காணாம போய்ட்டாரு கவனமாக இருங்க – இளம் வீரரை எச்சரித்த கபில் தேவ்

Kapil-Dev
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் மிகச் சிறப்பாக செயல்பட்ட எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை – ஹர்திக் பாண்டியா தலைமையிலான நடப்பு சாம்பியன் குஜராத்தை மே 28இல் நடைபெறும் மாபெரும் இறுதி போட்டியில் எதிர்கொள்கிறது. அதில் குஜராத் அணி இந்தளவுக்கு சிறப்பாக ஃபைனலுக்கு தகுதி பெற அதன் நம்பிக்கை நட்சத்திர தொடக்க வீரர் சுப்மன் கில் பேட்டிங் துறையில் 851* ரன்கள் விளாசி அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து ஆரஞ்சு தொப்பியை வென்று முக்கிய பங்காற்றி வருகிறார்.

Gill 1

- Advertisement -

கடந்த 2018 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் தொடர்நாயகன் விருது வென்று அசத்திய அவர் 2019இல் சர்வதேச அளவில் அறிமுகமாகி 2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் பதிவு செய்த மறக்க முடியாத காபா வெற்றியில் 91 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றினார். அதே போல கடந்த ஐபிஎல் தொடரில் முதல் வருடத்திலேயே குஜராத் கோப்பையை வெல்வதற்கு 483 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய காரணத்தால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்து வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற அடுத்தடுத்த ஒருநாள் தொடர்களில் தொடர் நாயகன் விருது வென்று இந்தியாவை வெற்றி பெற வைத்த அவர் கடந்த டிசம்பரில் வங்கதேச மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் சதமடித்தார்.

காம்ளி மாதிரி ஸ்டார்ட்:
அத்துடன் கடந்த பிப்ரவரியில் நியூசிலாந்துக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் முதல் சதமடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமும் விளாசிய அவர் சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரிலும் சதமடித்தார். அப்படி டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அசத்துவதால் சச்சின், விராட் கோலி ஆகியோருக்கு பின் இந்திய பேட்டிங் துறையின் அடுத்த சூப்பர் ஸ்டாராக போற்றப்படுகிறார்.

Sachin-and-Gill

இந்நிலையில் வினோத் காம்ப்ளி இதை விட அட்டகாசமான துவக்கத்தை பெற்றும் காணாமல் போனதாக தெரிவிக்கும் ஜாம்பவான் கபில் தேவ் இன்னும் சில வருடங்கள் இதே போல அசத்துவதற்கு முன்பாக சச்சின், விராட் கோலியுடன் அவரை ஒப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டில் அவர் பேசியது பின்வருமாறு. “சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ராகுல், டிராவிட், லக்ஷ்மன், வீரேந்திர சேவாக், விராட் கோலி வரிசையில் பேட்டிங்கின் அரசனாக அவர்களது கால் தடத்தை பின்பற்றுவது போல் சுப்மன் கில் செயல்படுகிறார்”

- Advertisement -

“ஆனால் அப்படி பெரிய அளவில் பாராட்டுவதற்கு முன்பாக அவருக்கு நான் இன்னும் ஒரு சீசன் கொடுக்கிறேன். நிச்சயமாக அவரிடம் நல்ல திறமை இருந்தாலும் இப்போதே இந்த பெரிய ஒப்பீடுகள் தேவையில்லை. எனவே இன்னும் ஒரு சீசனில் அவர் அசத்தினால் கவாஸ்கர், சச்சின், கோலி வரிசையில் வந்துள்ளார் என்று பாராட்டலாம். குறிப்பாக பவுலர்கள் உங்களுடைய வீக்னசை கண்டுபிடித்த பின்னும் நீங்கள் 3 – 4 சீசன்கள் தொடர்ந்து அசத்தினால் உண்மையாக மகத்தானவர் என்று சொல்லலாம். ஏனெனில் தற்போது உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் கில் எவ்வளவு நாட்கள் இதை தொடர முடியும் என்பதை நாம் பார்க்க வேண்டும்”

kapil dev

“அதிலும் ஏதோ ஒரு கட்டத்தில் சரிவை சந்திக்கும் போது அதிலிருந்து மீண்டெழுகிறாரா என்பதை பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக சூரியகுமாரை பாருங்கள். அவர் ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டாகியும் தற்போது அபார கம்பேக் கொடுத்துள்ளார். எனவே இந்த உச்சகட்ட ஃபார்ம் முடிந்ததும் அதிலிருந்து அவர் கொடுப்பாரா என்பதை நான் பார்க்க விரும்புகிறேன். அதே சமயம் நல்ல தரமான அவரது திறமையில் நான் சந்தேகப்படவில்லை”

இதையும் படிங்க:IPL 2023 : கில், விராட், டு பிளேஸிஸ் இல்ல – என்னோட டாப் 5 பேட்ஸ்மேன்கள் இவங்க தான், தரமான பட்டியலை வெளியிட்ட சேவாக்

“ஆனால் ஒப்பிடுகள் இல்லாமல் ஒருவரின் கேரியரை இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன். அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் வினோத் காம்ப்ளி இதை விட சிறப்பான துவக்கம் பெற்றார். எனவே கேள்வி என்னவெனில் தம் முன்னே இருக்கும் இந்த சவால்களை கில் தொடர்ந்து கையாள்வாரா? குறிப்பாக இந்த வயதிலேயே கிடைத்த இவ்வளவு பெரிய பாராட்டையும் புகழையும் சமாளித்து அவரால் நிலைக்க வைக்க முடியுமா” என்று கூறினார்.

Advertisement