உலக கோப்பைக்கு தேர்வாகாத டீம்’கிட்ட தோத்துட்டீங்களே, ரொம்ப வலிக்குது – இந்தியாவை ஓப்பனாக தாக்கியதாக முன்னாள் வீரர்

- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வந்த டி20 கிரிக்கெட் தொடரை 3 – 2 (5) என்ற கணக்கில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் டி20 போட்டிகளில் இன்னும் நாங்கள் வீழ்ந்துவிடவில்லை என்பதை நிரூபித்து கோப்பையை முத்தமிட்டு அசத்தியுள்ளது. மறுபுறம் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் இல்லாத நிலைமையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் இத்தொடரில் களமிறங்கிய இந்தியா முதலிரண்டு போட்டிகளில் 2016க்குப்பின் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து பின்னடைவுக்குள்ளானது. இருப்பினும் அதற்கடுத்த 2 போட்டிகளில் வென்று தொடரை சமன் செய்த இந்தியா வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசிப் போட்டியில் தோல்வியை சந்தித்தது.

இதன் வாயிலாக தற்போது ஐசிசி டி20 போட்டிகளுக்கான தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக திகழும் இந்தியா பலவீனமான அணியாக கருதப்படும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2016க்குப்பின் முதல் முறையாக ஒரு டி20 தொடரில் தோல்வியை சந்தித்து தலை குனிந்துள்ளது. அதே போல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தோல்வியை சந்தித்த இந்தியா ஒரு குறிப்பிட்ட டி20 தொடரிலும் முதல் முறையாக 3 தோல்விகளை பதிவு செய்து வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது.

- Advertisement -

மனசு வலிக்குது:
அது போக அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக கடந்த 2006க்குப்பின் 17 வருடங்கள் கழித்து முதல் முறையாக 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா தோற்றுள்ளது. இத்தனைக்கும் ஒரு காலத்தில் அடுத்தடுத்த சாம்பியன் பட்டங்களை வென்று உலகை மிரட்டி வந்த வெஸ்ட் இண்டீஸ் தற்போது கத்துக்குட்டியாக மாறியுள்ளதை அனைவரும் அறிவோம். குறிப்பாக 2023 உலக கோப்பைக்கு முதல் முறையாக தகுதி பெறாத அந்த அணி 2022 டி20 உலக கோப்பையிலும் நேரடியாக தகுதி பெறாமல் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியது.

மறுபுறம் தரவரிசையில் நம்பர் ஒன் தனியாக திகழும் இந்தியாவில் சீனியர்கள் இல்லாமல் போனாலும் ஐபிஎல் 2023 தொடரில் சிறப்பாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருக்கும் நட்சத்திர வீரர்கள் நிறைந்திருக்கின்றனர். ஆனாலும் அவர்களால் இந்த சாதாரண இருதரப்பு தொடரில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவை தலைநிமிர வைக்க முடியவில்லை என்பது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பைக்கு தகுதி பெறாத அணியிடம் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது ஏமாற்றமளிப்பதாக தெரிவிக்கும் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் நீண்ட காலமாகவே நமது நாடு மோசமாக செயல்பட்டு வருவதாக மீண்டும் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக சமீப காலங்களில் வங்கதேசத்தில் தோற்றது உட்பட சாதாரண அணிகளுக்கு எதிராகவே இந்தியா திண்டாடுவதாக தெரிவிக்கும் அவர் நாட்டுக்காக வெற்றி பெற வேண்டும் என்ற பசியும் நெருப்பும் இப்போதைய அணியில் இல்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனாலும் ஓரிரு அற்ப வெற்றிகளை பதிவு செய்யும் போது அதை உலகக் கோப்பையை வென்றது போல் கொண்டாடும் மாயையில் நாம் வாழ்ந்து வருவதாக ரசிகர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் அவர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டது பின்வருமாறு.

“வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்தியா மிகமிக சாதாரண அணியாகவே இருக்கிறது. அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக டி20 உலக கோப்பைக்கு தகுதி பெறாமல் திண்டாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் நாம் வங்கதேசத்தில் நடந்த ஒருநாள் தொடரிலும் தோற்றோம். எனவே முட்டாள்தனமான அறிக்கைகளை மட்டும் வெளியிடுவதற்கு பதிலாக அவர்கள் சுய பரிசோதனை செய்வார்கள் என்று நம்புகிறேன்”

இதையும் படிங்க:IND vs WI : சொல்வதற்கு வார்த்தைகளே இல்ல, எங்க மக்கள் ரொம்ப ஏங்கிட்டாங்க – இந்தியாவை வீழ்த்திய வெ.இ கேப்டன் நெகிழ்ச்சி பேட்டி

“50 ஓவர் மட்டுமில்லாமல் வெஸ்ட் இண்டீஸ் கடந்த 2022 டி20 உலக கோப்பைக்கும் தகுதி பெறவில்லை. அவர்களுக்கு எதிராக இந்தியா மோசமாக செயல்படுவதை பார்ப்பது வேதனையாக இருக்கிறது. அது கம்பளத்தின் கீழ் இருக்கும் சுமாரான செயல்முறையை துலக்குகிறது. தற்போதைய அணியில் வெற்றிக்கான பசியும் நெருப்பும் இல்லை. நாம் ஒரு மாயையில் வாழ்கிறோம்” என்று ரசிகர் எழுப்பிய கேள்விக்கும் பதிலளித்து ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement