IND vs WI : சொல்வதற்கு வார்த்தைகளே இல்ல, எங்க மக்கள் ரொம்ப ஏங்கிட்டாங்க – இந்தியாவை வீழ்த்திய வெ.இ கேப்டன் நெகிழ்ச்சி பேட்டி

Rovman Powell
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வந்த 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் 2016க்குப்பின் முதல் முறையாக அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பத்திலே முன்னிலை பெற்றது. இருப்பினும் அதற்கடுத்த 2 போட்டிகளில் வென்று பதிலடி கொடுத்த இந்தியா தொடரை சமன் செய்தது. ஆனாலும் ஆகஸ்ட் 13ஆம் தேதி அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் 3 – 2 (5) என்ற கணக்கில் கோப்பையை வென்று டி20 கிரிக்கெட்டில் நாங்கள் இன்னும் சாய்ந்து விடவில்லை என்பதை காட்டியது.

அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியாவை பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு 20 ஓவர்களில் 165/9 ரன்களுக்கு கட்டுப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ரொமாரியா செஃபார்ட் 4 விக்கெட்டுகள் சாய்த்தார். மறுபுறம் சுமாராக செயல்பட்ட இந்தியா சார்பில் அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் போராடி 61 ரன்களும் திலக் வருமா 27 ரன்களும் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 166 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் ப்ரெண்டன் கிங் அதிரடியாக 85* ரன்கள் நிக்கோலஸ் பூரான் 47 ரன்களும் எடுத்த உதவியால் 18 ஓவரிலேயே வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

- Advertisement -

நெகிழ்ச்சி பேட்டி:
அதன் வாயிலாக 2016க்குப்பின் முதல் முறையாக இந்தியாவுக்கு எதிராக ஒரு டி20 தொடரை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து 2006க்குப்பின் 17 வருடங்கள் கழித்து ஒரு 5 போட்டிகள் கொண்ட தொடரிலும் வெற்றி கண்டுள்ளது. 1975, 1979 வருடங்களில் சாம்பியன் பட்டங்களை வென்று ஒரு காலத்தில் உலகையே மிரட்டிய அந்த அணி தற்போது கத்துக்குட்டியாக மாறி 2023 உலக கோப்பைக்கு தகுதி பெறாமல் மெகா வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

அப்படிப்பட்ட இந்த சூழ்நிலையில் டி20 தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இந்தியாவை வீழ்த்தியதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை என்று தெரிவிக்கும் கேப்டன் ரோவ்மன் போவல் இது பற்றி போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு. “இந்த தருணத்தை வார்த்தைகளால் விவரிப்பது கடினமாக இருக்கிறது. அதற்கான உரிச்சொற்களை கூட இங்கே வைக்க முடியவில்லை. நேற்று மாலை நாங்கள் அமர்ந்து ஒரு மீட்டிங் நடத்தினோம். கரீபியன் உள்ள மக்கள் ஏதோ ஒரு நல்ல விஷயத்திற்காக இயங்குகிறார்கள். இதற்கான பாராட்டுக்கள் பயிற்சியாளர் குழுவை சேரும்”

- Advertisement -

“ஏனெனில் அடுத்தடுத்த தோல்விகளால் நாங்கள் பதற்றமடைந்திருப்போம். இருப்பினும் என்னுடைய திட்டங்கள் நன்றாக இருந்தது. மேலும் நான் எப்போதுமே தனிநபர் செயல்பாடுகளை அதிகமாக விரும்புபவன். ஏனெனில் ஒரு வீரர் சிறப்பாக செயல்பட்டால் அது அணிக்கு நன்மையை ஏற்படுத்தும். அந்த வகையில் சிறப்பாக செயல்படுமாறு நாங்கள் கேட்டுக் கொண்டதை ஏற்றுக்கொண்டு நிக்கோலஸ் பூரான் இந்த 5 போட்டிகளில் வந்து விளையாடினார். அனைத்து போட்டிகளிலும் அனைவராலும் சிறப்பாக செயல்பட முடியாது”

“எனவே குறைந்தது 3 போட்டிகளில் அசத்துங்கள் என்று நாங்கள் அவரிடம் கேட்டுக் கொண்டோம். அதே போல பவரான இந்திய பேட்டிங் வரிசையை கட்டுப்படுத்தும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்ட எங்களுடைய பவுலர்களுக்கும் பாராட்டுக்கள். அதை விட தோல்வி சமயங்களில் ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றிகள். ஏனெனில் நாங்கள் வீழ்ந்த போது அவர்கள் மைதானத்தில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்தனர். அதுவே எங்களுக்கு உத்வேகமாக இருந்தது. எனவே எங்களுக்கு ஆதரவு கொடுத்து அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க:ஒரே ஓவரில் 19 ரன்கள், மீண்டும் வெற்றிக்கு போராடிய திலக் வர்மா – ரோஹித்தின் வாழ்நாள் சாதனையை உடைத்து அபாரம்

அவர் கூறுவது போல 2022 டி20 உலக கோப்பையில் நேரடியாக தகுதி பெறாமல் முதல் சுற்றுடன் வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்க்கு இந்த வெற்றி மிகப்பெரிய ஆறுதலாகவும் உத்வேகமாகவும் அமையும் என்றே சொல்லலாம். குறிப்பாக அடுத்த வருடம் தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 2024 டி20 உலக கோப்பைக்கு இது அவர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும் என்றால் மிகையாகாது.

Advertisement