வெஸ்ட் இண்டீஸ் எதிராக நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் 3 – 2 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்துள்ள இந்தியா தலை குனிந்து நாடு திரும்பியுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. குறிப்பாக ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் இல்லாத நிலைமையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இதே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெறும் 2024 டி20 உலக கோப்பைக்கு தேவையான இளம் வீரர்களை கண்டறியும் நோக்கத்தில் இளம் படையுடன் களமிறங்கிய இந்தியா முதலிரண்டு போட்டிகளில் தோற்று பின்னடைவை சந்தித்தாலும் அதற்கடுத்த 2 போட்டியில் வென்று தொடரை சமன் செய்தது.
ஆனால் ஆகஸ்ட் 15ஆம் தேதி ப்ளோரிடாவில் நடைபெற்ற கடைசி போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா 2016க்குப்பின் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஒரு டி20 தொடரில் தோற்றது மட்டுமல்லாமல் வரலாற்றில் முதல் முறையாக 5 போட்டிகள் கொண்ட ஒரு டி20 தொடரிலும் தோல்வியை சந்தித்தது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 165/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக இத்தொடரில் ஆரம்பம் முதலே போராடிய சூரியகுமார் யாதவ் 61 ரன்களும் திலக் வர்மா 27 ரன்களும் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ரொமாரியா செஃபார்ட் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.
கவலையற்ற பாண்டியா:
அதை துரத்திய வெஸ்ட் இண்டீஸை ப்ரெண்டன் கிங் 85* ரன்களும் நிக்கோலஸ் பூரான் 47 ரன்களும் ஷாய் ஹோப் 22* ரன்களுக்கு எடுத்து 18 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் சந்தித்த தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து பழி தீர்த்தனர். மறுபுறம் உலக கோப்பைக்கு தகுதி பெறாத வெஸ்ட் இண்டீஸிடம் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா தோற்றது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. இந்நிலையில் டாஸ் வென்றும் பேட்டிங்கில் கடைசி நேரத்தில் கோட்டை விட்டதாக தெரிவிக்கும் கேப்டன் பாண்டியா அதற்கான காரணத்தை சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று அதிரடியாக பேசியுள்ளார்.
மேலும் 2024 உலகக் கோப்பைக்கு தேவையான வீரர்களை கண்டறியும் பயணத்தில் இது போன்ற தோல்விகள் நன்மைக்கே என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு. “நான் பேட்டிங் செய்ய வந்த போது இருந்த முக்கிய தருணத்தை நாங்கள் சரியாக பயன்படுத்தாமல் தவற விட்டோம். இருப்பினும் நாங்கள் எங்களுக்கே சவால் விடுவோம் என்று நம்புகிறேன். நாங்கள் இன்னும் சிறப்பாக முன்னேற முயற்சிக்கிறோம் என்பது நல்ல நல்லதாகும். அதனால் இந்த தோல்வியைப் பற்றி நாங்கள் விவரிக்க வேண்டிய அவசியமில்லை”
“மேலும் தோல்விக்கான காரணங்கள் பற்றி கண்டறிய அதிக அளவு நேரம் எங்களிடம் இருக்கிறது. சில நேரங்களில் இது போன்ற தோல்விகள் நல்லதாகும். ஏனெனில் இதனால் நாங்கள் நிறையவற்றை கற்றுள்ளோம். குறிப்பாக இளம் வீரர்கள் நல்ல கேரக்டரை காண்பித்தார்கள். தொடர்ந்து வந்து புதியவற்றை முயற்சித்த அவர்களுக்கு பாராட்டுக்கள். இது பெரிய வெற்றியை பெறுவதன் செயலுக்கான ஒரு பகுதியாகும். இதைத்தான் இந்த தருணத்தில் நான் உணர்கிறேன். இது ஒன்றும் ராக்கெட் சைன்ஸ் கிடையாது. இது என்னுடைய தைரியமான உள்ளுணர்வுகளாகும்”
இதையும் படிங்க:ஒரே ஓவரில் 19 ரன்கள், மீண்டும் வெற்றிக்கு போராடிய திலக் வர்மா – ரோஹித்தின் வாழ்நாள் சாதனையை உடைத்து அபாரம்
“அதாவது இந்த தொடரில் இளம் வீரர்கள் உள்ளே வந்து கையை உயர்த்தும் அளவுக்கு சிறப்பாக செயல்படுவதை விட வேறு மகிழ்ச்சியான உணர்வு எனக்கு இருக்க முடியாது. அனைவருக்கும் பெரிய நன்றி. 2024 டி20 உலக கோப்பை இங்கே நடைபெறும். அப்போது எங்களுடைய எண்கள் பெரிதாக இருக்கும்” என்று கூறினார். அதாவது திலக் வர்மா, ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்கள் இத்தொடரில் கிடைத்தது மகிழ்ச்சி என்று தெரிவிக்கும் பாண்டியா தோல்வியால் 2024 உலக கோப்பையில் அசத்துவதற்கு தேவையான பாடங்களைக் கற்றுள்ளதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.