நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் 3 – 2 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. ஏனெனில் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக இருக்கும் இந்தியா 2022 டி20 உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறாமல் முதல் சுற்றுடன் வெளியேறி தற்சமத்தில் பலவீனமாக இருக்கும் வெஸ்ட் இண்டீஸிடம் 2016க்குப்பின் முதல் முறையாக ஒரு தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது. அது போக டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தோற்றுள்ள இந்தியா அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 2006க்குப்பின் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒரு தொடரில் தோற்றுள்ளது.
முன்னதாக இந்த தொடரில் பந்து வீச்சு ஓரளவு சிறப்பாக இருந்தும் பேட்டிங்கில் சூரியகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோரை இஷான் கிசான், கில், கேப்டன் பாண்டியா, சஞ்சு சம்சான் ஆகிய முக்கிய பேட்ஸ்மேன்கள் யாருமே தொடர்ந்து அசத்தாத காரணத்தாலேயே இந்தியாவுக்கு தோல்வி கிடைத்தது. இருப்பினும் இந்த படுதோல்விக்கு மத்தியில் ஒரே ஆறுதலாக திலக் வர்மா மட்டுமே அமைந்தார் என்றால் மிகையாகாது. ஏனெனில் ஹைதராபாத்தை சேர்ந்த அவர் கடந்த 2 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறப்பாக செயல்பட்டு இத்தொடரில் அறிமுகமானார்.
போராடிய திலக் வர்மா:
அதில் முதலிரண்டு போட்டிகளில் சவாலான மைதானங்களில் இதர வீரர்கள் தடுமாறிய போது 39, 51 என அதிகபட்ச ஸ்கோர் அடித்து வெற்றிக்கு போராடிய அவர் 3வது போட்டியில் 49* ரன்கள் அடித்து வெற்றியில் பங்காற்றினார். அதே போல 4வது போட்டியில் வாய்ப்பு பெறாத அவர் கடைசி போட்டியில் தொடக்க வீரர்கள் ஏமாற்றியதால் 17/2 என ஆரம்பத்திலேயே சரிந்து தடுமாறிய இந்தியாவுக்கு களமிறங்கி அல்சாரி ஜோசப் வீசிய 6வது ஓவரில் 0, 4, 6, 4, 4, 1 என அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்டு 19 ரன்கள் விளாசினார்.
அதன் பின் சற்று நிதானமாக விளையாடிய அவர் இறுதியில் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 27 (18) ரன்கள் எடுத்து மீண்டும் வெற்றிக்காக போராடியே ஆட்டமிழந்தார். குறிப்பாக பவர் பிளே முடிய போகிறது என்பதை தெரிந்து அந்த கடைசி ஓவரில் வெளுத்து வாங்கிய அவர் அதன் பின் சூரியகுமாருடன் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மிகவும் முதிர்ச்சியுடன் செயல்பட்டார் என்றே சொல்லலாம். அந்த வகையில் இத்தொடரில் 20 வயதில் அறிமுகமாகி சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் ஏற்கனவே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 20 வயதில் ஒரு போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையை உடைத்திருந்தார்.
அந்த வரிசையில் தற்போது இந்த டி20 தொடரில் மொத்தம் 7 சிக்சர்கள் அடித்துள்ள திலக் வர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 20 வயதிற்குள் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர் என்ற ரோகித் சர்மாவின் வாழ்நாள் சாதனையையும் உடைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2006இல் அறிமுகமான ரோகித் சர்மா தன்னுடைய 20 வயதுக்குள் இந்தியாவுக்காக விளையாடிய சர்வதேச டி20 போட்டிகளில் அதிகபட்சமாக 4 சிக்சர்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும்.
இதையும் படிங்க:IND vs WI : இந்த தனித்துவம் போதுமா? இந்தியாவை தலைகுனிய வைத்த கேப்டனாக பாண்டியா மோசமான சாதனை – வெளுக்கும் ரசிகர்கள்
அது மட்டுமல்லாமல் இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையும் திலக் வர்மா பெற்றுள்ளார். சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன் போன்ற அனுபவ வீரர்களை மிஞ்சும் வகையில் 5 இன்னிங்ஸில் 173 ரன்களை 57.66 என்ற சராசரியில் குவித்து அவர் இந்த தொடர் முழுவதும் அசத்தியுள்ளார். மொத்தத்தில் 20 வயதிலேயே சீறிப்பாயும் காளையாக சவாலான மைதானங்களில் இந்தியாவின் வெற்றிக்கு போராடிய அவர் நிச்சயமாக வரும் காலங்களில் பெரிய அளவில் அசத்தி வெற்றிகளில் பங்காற்றுவார் என்று உறுதியாக நம்பலாம்.