இளம் வீரர்கள் பாவம், 8 வருசம் சொதப்பியும் வாய்ப்பு பெறும் நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி – நட்சத்திர வீரரை தாக்கிய வெங்கடேஷ் பிரசாத்

venkatesh-prasad
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 3 போட்டிகளை வென்று 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் முனைப்புடன் இந்தியா களமிறங்கியுள்ளது. முன்னதாக இத்தொடரில் கேப்டன் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கப் போவது யார் என்ற விவாதம் ஒரு மாதத்துக்கு முன்பாகவே எழுந்தது. ஏனெனில் 2019 வாக்கில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிரந்தரமான இடத்தை பிடித்த கேஎல் ராகுல் நாளடைவில் அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தடவலாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக 2022 ஐபிஎல் தொடருக்கு பின் சந்தித்த காயத்துக்குப் பின் பார்மை இழந்த அவர் ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் சுமாராக செயல்பட்டது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அதன் காரணமாக ரசிகர்களைப் போலவே அதிருப்தியடைந்த பிசிசிஐயும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அவருடைய துணை கேப்டன்ஷிப் பதவி மற்றும் ஓப்பனிங் இடத்தை பறித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைசி முறையாக வாய்ப்பு கொடுத்துள்ளது. ஆனால் கடந்த மாதம் வங்கதேசம் மண்ணில் காயமடைந்த ரோகித் சர்மாவுக்கு பதில் இந்தியாவை வழி நடத்திய அவர் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் கொஞ்சம் கூட வெற்றியில் பங்காற்றாமல் மீண்டும் சொதப்பலாகவே செயல்பட்டார்.

- Advertisement -

ரொம்ப அதிர்ஷ்டசாலி:
மறுபுறம் அதே வங்கதேச தொடரில் முதல் முறையாக சதமடித்த சுப்மன் கில் சமீபத்திய இலங்கை மற்றும் நியூசிலாந்து ஒருநாள், டி20 தொடர்களில் அடுத்தடுத்த சதங்களை விளாசி உச்சகட்ட பார்மில் ஜொலித்து வருகிறார். அதனால் திருமணம் முடித்த கையுடன் தேனிலவுக்கு சென்று பொறுமையாக வாருங்கள் என்று ராகுலை விமர்சித்த இந்திய ரசிகர்கள் அவருக்கு வாய்ப்பு கொடுக்குமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால் மீண்டும் துணை கேப்டன் என்ற ஒரே காரணத்துக்காக இத்தொடரில் வாய்ப்பு பெற்றுள்ள ராகுல் நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் மீண்டும் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக தடவலாகவே செயல்பட்டு 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இருப்பினும் முதல் போட்டியில் இந்தியா வென்று விட்டதால் மீண்டும் அவருக்கு 2வது போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 2014இல் அறிமுகமாகி 8 வருடங்களில் 46 போட்டிகளில் விளையாடியும் 34 என்ற சுமாரான சராசரியை கொண்டுள்ள நீங்கள் தொடர்ந்து வாய்ப்பு பெறுவதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டுமென கேஎல் ராகுலை முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் நேரடியாக தாக்கியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி தனது ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “கேஎல் ராகுலின் திறமை மற்றும் செயல்பாடுகளில் எனக்கு நிறைய மரியாதை உள்ளது. ஆனால் அதற்கேற்றார் போல் அவரது செயல்பாடுகள் இல்லாமல் மிகவும் மோசமாக இருப்பது சோகத்தை கொடுக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் 8 வருடங்களுக்கு மேல் 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியும் வெறும் 34 பேட்டிங் சராசரியை கொண்டுள்ளது மிகவும் சுமாரானது”

“வரலாற்றில் குறிப்பாக தற்சமயத்தில் டாப் ஃபார்மில் இந்தியாவுக்காக விளையாட காத்திருக்கும் நிறைய வீரர்களுக்கு மத்தியில் இவ்வளவு வாய்ப்புகளை வேறு வீரர்கள் பெற்றதாக எனக்கு தோன்றவில்லை. சுப்மன் கில் அசத்தலான ஃபார்மில் இருக்கிறார். முதல் தர கிரிக்கெட்டில் மலை போல ரன்களை குவித்து வரும் சர்பராஸ் கான் ராகுலுக்கு பதிலாக விளையாட தகுதியானவர். இருப்பினும் இங்கே சிலர் முடிவின்றி வாய்ப்புகளை பெறுவதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்கிறார்கள். ஆனால் சிலர் சிறப்பாக செயல்பட்டும் வாய்ப்பு பெறுவதற்கு மறுக்கப்படுகிறார்கள்”

- Advertisement -

“ஆனாலும் அவர் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளது நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளது. சிறந்த கிரிக்கெட் மூளையை கொண்ட அஸ்வின் துணை கேப்டனாக இருக்க வேண்டும். இல்லையென்றால் புஜாரா அல்லது ஜடேஜா இருக்கலாம். டெஸ்ட் போட்டிகளில் ராகுலை விட மயங்க அகர்வால், விஹாரி ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். ராகுலின் தேர்வு செயல்பாடுகளை பொறுத்ததல்ல மாறாக விருப்பத்தின் அடிப்படையிலானது. அவர் 8 வருடங்களாக தொடர்ந்து தொடர்ச்சியற்ற செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்”

இதையும் படிங்க: IND vs AUS : ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இருந்து முழுவதுமாக விலகிய இந்திய வீரர் – வெளியான தகவல்

“சாத்தியமான ஐபிஎல் நிகழ்வுகளை இழக்கும் வாய்ப்பு ஏற்படும் என்பதால் அவரைப் பற்றி முன்னாள் வீரர்கள் பேசுவதற்கு மறுக்கின்றனர். குறிப்பாக ஒரு ஐபிஎல் அணியின் கேப்டனை அவர்கள் விமர்சிக்க விரும்புவதில்லை. ஒரு காலத்தில் நலம் விரும்புவர்களாக இருந்த விமர்சகர்கள் இப்போது உண்மையைச் சொல்ல விரும்புவதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement