இந்த திட்டம் ஜெயிக்க கூடாதுன்னு கடவுள வேண்டிக்கிறேன் – இலங்கை மற்றும் வங்கதேசத்தை விமர்சித்த வெங்கடேஷ் பிரசாத்

Venkatesh Prasad 2
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் டாப் 2 அணிகளாக கருதப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இலங்கையின் கண்டி நகரில் மோதிய லீக் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சூப்பர் 4 தகுதி பெற்றுள்ள இவ்விரு அணிகளும் மீண்டும் செப்டம்பர் 10ஆம் தேதி இலங்கையின் கொழும்பு நகரில் மோத உள்ளன. ஆனால் அங்கேயும் 90% போட்டி நாளன்று இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிய வருவதால் அப்போட்டி நடைபெறுவதில் பெரிய சிக்கல் ஏற்பட்டது.

இருப்பினும் அப்போட்டியும் ரத்து செய்யப்பட்டால் தங்களுக்கு மிகப்பெரிய அழுத்தம் ஏற்படும் என்று ஒளிபரப்பு நிறுவனங்கள் ஆசிய கவுன்சிலிடம் அதிருப்தியை வெளிப்படுத்தின. அதன் காரணமாக இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் மழை வந்து பாதிப்பு ஏற்படுத்தும் பட்சத்தில் செப்டம்பர் 11ஆம் தேதி ரிசர்வ் நாள் கடைபிடிக்கப்படும் என்று ஆசிய கவுன்சில் நேற்று அறிவித்தது. ஆனால் இலங்கை, வங்கதேசம் போன்ற எஞ்சிய அணிகள் மோதும் போட்டிகளும் இதே மைதானத்தில் நடைபெறும் போது மழை பெய்வதற்கான வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

வெங்கடேஷ் பிரசாத் விளாசல்:
அப்படியிருந்தும் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் பெரிய முன்னுரிமை கொடுத்துள்ள ஆசிய கவுன்சில் இந்தியா – இலங்கை, இந்தியா – வங்கதேசம் போன்ற மற்ற போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ரிசர்வ் நாளை அறிவிக்காதது தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நடப்பு சாம்பியன் இலங்கை மதிக்கப்படவில்லை என்று அந்நாட்டு ரசிகர்களும் நாங்கள் ஐசிசி அங்கீகாரம் பெற்ற அணி இல்லையா என்று வங்கதேச ரசிகர்களும் விமர்சித்து வருகின்றனர்.

சொல்லப்போனால் இந்த முடிவு ஒருதலைபட்சமாக இருப்பதாக இந்திய ரசிகர்களும் ஆசிய கவுன்சிலை விமர்சிப்பதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் இந்த முடிவு வெட்கக்கேடானது என்று தெரிவிக்கும் முன்னாள் இந்திய வீரர் வெங்கடேஷ் பிரசாத் செப்டம்பர் 11ஆம் தேதியும் மழை வந்து ஆசிய கவுன்சில் ரிசர்வ் நாள் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வதாக ட்விட்டரில் வெளிப்படையாக விமர்சித்துள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“இந்த செய்தி உண்மை என்றால் வெட்கமற்றது. குறிப்பாக எஞ்சிய 2 அணிகளை கேலி செய்துள்ள அவர்கள் வித்தியாசமான விதிகளுடன் போட்டியை நடத்துவது நெறிமுறையற்றது. நீதி என்பது முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டால் மட்டுமே நியாயமாக இருக்கும். இதனால் 2வது நாளிலும் மழை பொழியட்டும் இந்த மோசமான திட்டங்கள் வெற்றியடையாமல் போகட்டும்” என்று கூறினார். இருப்பினும் இது போன்ற விமர்சனங்களால் ஆசிய கவுன்சில் கொடுத்த அழுத்தத்தின் பெயரில் இலங்கை மற்றும் வங்கதேச வாரியங்கள் தாங்கள் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்று ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ளன.

இதையும் படிங்க: IND vs PAK : இந்தியா – பாக் சூப்பர் 4 போட்டி நடைபெறும் பிரேமதாசா மைதானம் எப்படி? புள்ளிவிவரம் – பிட்ச், வெதர் ரிப்போர்ட்

அதற்கு வெங்கடேஷ் பிரசாத் மீண்டும் விமர்சித்துள்ளது பின்வருமாறு. “நியாயமற்ற காரணத்திற்காக கொடுக்கப்பட்ட இந்த அழுத்தத்திற்கு ஏன் நீங்கள் உட்பட்டீர்கள்? இதற்கு நீங்கள் ஏன் சம்மதம் தெரிவிக்க வேண்டும்? உங்கள் சொந்த அணிக்கு ஃபைனல் செல்லும் வாய்ப்பு கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை. இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடக்கட்டும் என்று ஆதரவு தெரிவிப்பதில் என்ன பெருந்தன்மை. இதற்கான காரணத்தை தயவு செய்து விளக்க முடியுமா” என்று கூறியுள்ளார்.

Advertisement