
தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி ஏற்கனவே இந்திய கிரிக்கெட் அணிக்காக கடந்த 2021-ஆம் ஆண்டு அறிமுகமாகி இருந்தாலும் அதன் பின்னர் அவரது மோசமான ஃபார்ம் மற்றும் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். ஆனாலும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் தனது கம்பேக் வாய்ப்பிற்காக காத்திருந்தார். அந்த வகையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அணியில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவருக்கு இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக மாறிய கம்பீர் உடனடியாக கம்பேக் கொடுக்கும் வாய்ப்பை வழங்கியிருந்தார்.
அந்த வகையில் இந்த மீண்டும் டி20 அணிக்கு திரும்பியிருக்கும் வருண் சக்கரவர்த்தி அடுத்தடுத்த தொடர்களில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறார். குறிப்பாக தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அனைத்து ஆட்டங்களிலும் பங்கேற்ற அவர் 12 விக்கெட் கைப்பற்றி இருந்தார்.
நேற்று இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற கடைசி போட்டியில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் இந்த நான்காவது போட்டியிலும் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மொத்தமாக இந்த தொடரில் 4 போட்டிகளில் விளையாடியவர் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இனியும் தொடர்ந்து இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் நேற்றைய இந்த போட்டி முடிந்த பின்னர் பேசிய வருண் சக்கரவர்த்தி கூறுகையில் : உண்மையிலேயே கடைசி இரண்டு போட்டியில் விளையாடியது மிகவும் சவாலாக இருந்தது. ஏனெனில் கடைசியாக நாங்கள் விளையாடிய இரண்டு மைதானங்களும் அளவில் சிறியவை என்பதனால் பேட்ஸ்மேன்கள் அதிக ஆதிக்கம் செலுத்த முடியும்.
இருந்தாலும் நான் சில சிக்ஸர்களை விட்டுக் கொடுத்த போதும் விக்கெட் எடுக்க முடியும் என்கிற நம்பிக்கை இருந்தது. மைதான எல்லைகள் சிறிதாக இருந்ததால் பேட்ஸ்மேன்கள் தவறான ஒரு ஷாட் ஆடினால் நிச்சயம் விக்கெட் கிடைக்கும் என்று நினைத்தோம். இந்த தொடரில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் சென்றது பலனளித்தது. நானும் பிஷ்னாய் இருவரும் மிகச் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து பந்துவீசி இருந்தோம்.
இதையும் படிங்க : உண்மையா சொல்லனும்னா எங்களால் எதுவும் பண்ண முடியல.. தோல்விக்கு பிறகு – எய்டன் மார்க்ரம் வருத்தம்
இறுதியாக இந்த தொடரில் நாங்கள் வெற்றி பெற்றது மகிழ்ச்சி. பேட்ஸ்மேன்கள் எனது பந்துவீச்சை அடிக்காமல் இருக்க நான் பெரும்பாலும் ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசினேன். ஏனெனில் சின்ன எல்லைகள் இருக்கும் மைதானத்தில் அவர்களது ஆர்க்கில் பந்து வீசினால் நிச்சயம் பந்து வெளியே செல்லும் என்பதாலே இந்த யுக்தியை பயன்படுத்தினேன் என்றும் வருண் சக்கரவர்த்தி கூறியது குறிப்பிடத்தக்கது.