சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை தென்னாப்பிரிக்க அணியானது தற்போது மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் இழந்துள்ளது. ஜோகன்னஸ்பர்க் நகரில் நேற்று நடைபெற்ற இந்த தொடரின் நான்காவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்தியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 283 ரன்கள் குவித்தது.
இந்திய அணி வெற்றிக்கு தகுதியான அணிதான் :
பின்னர் 284 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 135 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் மீண்டும் ஒரு தோல்வியை சந்தித்து இருந்தது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் கூறுகையில் : உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் இந்திய அணி மூன்று துறையிலுமே இந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடினர். அதன் காரணமாகவே அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
அவர்கள் பெற்ற இந்த வெற்றிக்கு உண்மையிலேயே அவர்கள் தகுதியானவர்கள் தான். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறையிலுமே அவர்கள் எங்களை அழுத்ததிற்குள் வைத்து மிக எளிதாக இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர். இந்தப் போட்டியில் கைக்கு கிடைத்த கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டோம். அதோடு உதிரி வகையிலும் பல்வேறு ரன்களை தவற விட்டுள்ளோம்.
இப்படி பல தவறுகள் எங்களது அணியிடமிருந்து நடந்ததாலே தோல்வியை சந்தித்துள்ளோம். இருந்தாலும் 2026-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்காக வலுவான அணியை கட்டமைக்க முடியும் என்று நினைக்கிறோம்.
இதையும் படிங்க : எந்த ரகசியமும் இல்ல.. தெ.ஆ அணியை அடித்து நொறுக்க இதுவே காரணம்.. தொடரின் வெற்றிக்கு பிறகு – சூரியகுமார் பேட்டி
இனிவரும் தொடர்களில் நிச்சயம் எங்களது அணியின் வீரர்கள் தங்களது திறனை வெளிக்கொணர்ந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நினைக்கிறேன். ஆனாலும் இந்த தொடரில் எங்களது அணியின் சார்பாக மார்க்கோ யான்சன் மற்றும் ஜெரால்டு கோட்ஸே ஆகிய இருவரும் தங்களது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினர் என எய்டன் மார்க்ரம் கூறியது குறிப்பிடத்தக்கது.



