
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அத்தொடரில் பாகிஸ்தானை 3 முறை எதிர்கொண்ட இந்தியா ஹாட்ரிக் வெற்றிகளைப் பெற்று 9வது முறையாக ஆசியக் கோப்பையில் வென்றது. ஆனால் அந்தக் கோப்பையை பாகிஸ்தான் வாரியத் தலைவர் மோசின் நக்வி இதுவரை இந்திய அணியிடம் கொடுக்கவில்லை.
ஏனெனில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் நிகழ்த்திய தாக்குதலில் 26 இந்திய சுற்றுலாப் பயணிகள் இயற்கை எய்தினர். அதற்கு பதிலடியாக ஆசியக் கோப்பையில் லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி கைகுலுக்காமல் வெளியேறியது. அதே போல இறுதிப் போட்டியின் முடிவில் நடந்த பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சரான நக்வி கைகளால் கோப்பையை வாங்க மாட்டோம் என்று இந்திய அணி தெரிவித்து விட்டது.
அப்போது ஆசிய கவுன்சில் தலைவராகவும் இருக்கும் நக்வி வேறு யாரிடமாவது கொடுத்து கோப்பையைக் கொடுப்பார் என்ற நம்பிக்கையுடன் அணியினர் காத்திருந்தனர். ஆனால் இந்தியா எப்படி வெற்றியைக் கொண்டாடுகிறார்கள் என்பதைப் பார்ப்பதற்காக அவர் கோப்பையை கையோடு எடுத்துச் சென்றார். அதற்காக அசராத இந்திய அணி கோப்பையை கையில் இருப்பது போலவே கொண்டாடி பாகிஸ்தான் வாரியத் தலைவருக்கு பதிலடிக் கொடுத்தனர்.
குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பை வென்ற பின் மல்யுத்த வீரர் ரிக் ஃபிளைர் போல இந்திய கேப்டன் ரோஹித் சர்மா நடந்து வந்து கோப்பையை வாங்கி கொண்டாடியதை மறக்க முடியாது. அதே போல கையில் கோப்பை இருப்பது போல் சூரியகுமார் யாதவ் நடந்து வந்து இந்திய வீரர்களுடன் சேர்ந்து வெற்றியைக் கொண்டாடினார்.
இந்நிலையில் அப்படி கொண்டாடும் ஐடியாவை அர்ஷ்தீப் சிங் கொடுத்ததாக இந்திய வீரர் வருண் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். இது பற்றி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “உண்மையில் அது அர்ஷ்தீப் ஐடியா. நாங்கள் கோப்பைக்காக காத்திருந்தோம். ஆனால் அந்த நிலைமை எப்படி மாறும் என்பது எங்களுக்குத் தெரியும். கோப்பை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நான் நின்றேன்”
இதையும் படிங்க: டாப் 5-ல் இருந்து வெளியேறிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால்.. முன்னேற்றம் கண்ட முகமது சிராஜ் – விவரம் இதோ
“நாங்கள் அனைவரும் கோப்பையைக் காட்டுவதற்காக காத்திருந்தோம். ஆனால் கடைசியில் எனக்கு தேநீர் கோப்பை தான் கிடைத்தது” என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் மற்றொரு இந்திய வீரர் சஞ்சு சாம்சன். “கோப்பை இல்லாமல் கொண்டாடியது வினோதமாக கொஞ்சம் இருந்தது. ஆனால் எங்களுடைய அணியில் நாங்கள் நேர்மறையான சூழ்நிலையைக் கொண்டிருந்தோம். அதனால் எங்களிடம் எதுவுமே இல்லை என்றாலும் அனைத்தும் இருப்பது போல் நாங்கள் கொண்டாடியிருப்போம். கடைசியில் அதுவே நடந்தது” என்று கூறினார்.