எனது தந்தை இந்தியாவை தோற்கடித்தது போல் நானும் ஆசிய கோப்பையில் தோற்கடிப்பேன் – இளம் பாக்வீரர் நம்பிக்கை

shaheen-afridi
Advertisement

வரும் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை 2022 ஆசிய கோப்பை ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற உள்ளது. வரும் அக்டோபரில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் டி20 தொடராக நடைபெறும் இந்த தொடரில் 6 அணிகள் களமிறங்குகின்றன. வரலாற்றில் நடைபெற்ற 14 ஆசிய தொடர்களில் 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் இந்தியா கடைசியாக கடந்த 2018இல் இதே துபாயில் நடைபெற்ற 50 ஓவர் ஆசிய கோப்பையை ரோகித் சர்மா தலைமையில் வென்று இம்முறை நடப்பு சாம்பியனாக களமிறங்குகிறது. அந்த வகையில் இந்தியா தனது முதல் போட்டியில் வரும் ஆகஸ்ட் 28இல் பரம எதிரியான பாகிஸ்தானை துபாயில் எதிர்கொள்கிறது.

INDvsPAK

இதே மைதானத்தில் கடைசியாக இவ்விரு அணிகளும் மோதிய போது மிகச் சிறப்பாக செயல்பட்ட பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையாக உலகக் கோப்பையில் இந்தியாவை மண்ணைக் கவ்வ வைத்து சரித்திர வெற்றி பெற்றது. அதன் காரணமாக வெற்றிகரமான வலுவான அணியாக இருந்தாலும் இப்போதும் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடிக்கும் என்று அந்நாட்டு ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் சவால் விடுத்து வருகின்றனர்.

- Advertisement -

தந்தையை போல்:
இருப்பினும் கடந்த வருடம் இந்தியா தோல்வியடைவதற்கு முக்கிய பங்காற்றிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சாஹீன் அப்ரிடி கடைசி நேரத்தில் இந்த தொடரிலிருந்து காயத்தால் வெளியேறியுள்ளது பாகிஸ்தானுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் அவர் விலகியதால் தோல்வியிலிருந்து இந்தியா தப்பித்து விட்டதாக வக்கார் யூனிஸ் போன்ற முன்னாள் வீரர்களும் பாகிஸ்தான் ரசிகர்களும் தம்பட்டம் அடித்து வருகின்றனர். அதற்கு ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் படேல் என 2 முக்கிய பவுலர்கள் காயத்தால் ஏற்கனவே விலகிய போது நாங்கள் உங்களைப் போல் கீழ்தரமாக பேசவில்லை என்று இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இப்படி போட்டித் துவங்குவதற்கு முன்பே அனல் பற்றியுள்ள இந்தப் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் தனது தந்தையைப் போல் மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவை தோற்கடிப்பேன் என்று இளம் பாகிஸ்தான் வீரர் உஸ்மான் காதர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இவரின் தந்தையான அப்துல் காதர் 1977 – 1993 வரையிலான காலகட்டத்தில் உலக அளவில் மிகச்சிறந்த லெக் ஸ்பின்னர்களில் ஒருவராக பாகிஸ்தானின் நிறைய வெற்றிகளில் பங்காற்றினார்.

- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக:
67 டெஸ்ட் போட்டிகளில் 236 விக்கெட்டுகளையும் 104 ஒருநாள் போட்டிகளில் 132 விக்கெட்களையும் எடுத்துள்ள அவர் வரலாற்றில் பாகிஸ்தான் கண்ட மிகச்சிறந்த லெக் ஸ்பின்னராக போற்றப்படுகிறார். குறிப்பாக இந்தியாவுக்கு எதிராகவும் நிறைய போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ள இவர் கடந்த 1982இல் கராச்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்களை எடுத்து இன்னிங்ஸ் மற்றும் 86 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் பெரிய வெற்றியை சுவைக்க முக்கிய பங்காற்றினார். கடந்த 2019இல் 63 வயதில் மாரடைப்பால் காலமான தனது தந்தை வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டதை போல் தாமும் இந்த ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்பட முயற்சிக்கப் போவதாக உஸ்மான் காதர் கூறியுள்ளார்.

தனது தந்தையைப் போலவே சுழற்பந்து வீச்சாளராக இதுவரை 18 டி20 போட்டிகளில் பாகிஸ்தானுக்காக விளையாடியுள்ள அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “என்னுடைய தந்தை இந்தியாவுக்கு எதிராக சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் அவருடைய கால் தடத்தில் நானும் பயணித்து சிறப்பாக செயல்பட விரும்புகிறேன். ஒருவேளை ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால் நிச்சயம் அதில் சிறப்பாக செயல்படுவேன்.

- Advertisement -

அதற்காக ஆவலுடன் காத்திருக்கும் நான் அதில் மிகச் சிறப்பாக செயல்பட்டு அந்த வாய்ப்பை பொன்னாக மாற்ற முயற்சிப்பேன். அந்த வாய்ப்புக்காக ஏற்கனவே உடலளவிலும் மனதளவிலும் நான் தயாராக உள்ளேன்” என்று கூறினார். சமீபத்திய நெதர்லாந்து தொடரில் 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்த பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்திருந்த இவர் தென் ஆப்பிரிக்க சுழல் பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிரை போல் பந்துவீச முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : IND vs PAK : ஆசியக்கோப்பை தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய நட்சத்திர வீரர் – பெரிய இழப்புதான்

இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “நெதர்லாந்துக்கு எதிராக பாகிஸ்தானின் சிறப்பான செயல்பாடுகளை போல் இந்த ஆசிய கோப்பையில் இந்தியா உட்பட அனைத்து அணிகளுக்கு எதிராகவும் நாங்கள் நல்ல முடிவுகளை எதிர்பார்க்கிறோம். என்னுடைய பந்துவீச்சில் குறைந்த ரன்களை கொடுக்க கடுமையாக முயற்சித்து வருகிறேன். ஒரே ஓவரில் நிறைய வித்தியாசங்களைக் காட்டி குறைவான ரன்களை கொடுக்கும் இம்ரான் தாகிரை நான் பின்பற்ற திட்டமிட்டுள்ளேன்” என்று கூறினார்.

Advertisement