
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. இந்த தொடரில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா போன்ற அனைத்து அணிகளுக்கும் ஆஸ்திரேலியா சிம்ம சொப்பனமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே பல கோப்பைகளை அலமாரியில் அடுக்கி வைத்துள்ள ஆஸ்திரேலியா ஐசிசி தொடரில் எப்போதுமே அபாரமாக செயல்படக்கூடிய அணியாக பார்க்கப்படுகிறது.
அந்த வரிசையில் இம்முறை மிட்சேல் மார்ஷ் தலைமையில் பட் கமின்ஸ், மிட்சேல் ஸ்டார்க், டிராவிஸ் ஹெட், மார்கஸ் ஸ்டோனிஸ் போன்ற நட்சத்திர வீரர்களுடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது. இந்த வீரர்களில் பெரும்பாலானவர்கள் 2024 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். ஆனால் டேவிட் வார்னர் மற்றும் கிளன் மேக்ஸ்வெல் ஆகியோர் தடுமாற்றமான ஃபார்மில் இருக்கின்றனர் என்றே சொல்லலாம்.
ஐபிஎல் சம்மந்தமில்ல:
குறிப்பாக வெறும் 52 ரன்களை 5.78 என்ற படுமோசமான சராசரியில் எடுத்த கிளன் மேக்ஸ்வெல் ஆர்சிபி அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அந்த வகையில் மிடில் ஆர்டரில் விளையாடக்கூடிய அவர் மோசமான ஃபார்மில் இருப்பது ஆஸ்திரேலியாவுக்கு கவலையளிக்கக் கூடிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு ஐபிஎல் ஃபார்ம் பொருத்தமற்றது என உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார். எனவே மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியாவுக்காக அற்புதமாக விளையாடுவார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி மேற்கு ஆஸ்திரேலியன் பத்திரிகையில் அவர் பேசியுள்ளது பின்வருமாறு. “ஐபிஎல் ஃபார்ம் முற்றிலும் சம்பந்தப்பட்டது. மேக்ஸ்வெல் மீண்டும் மீண்டும் தம்முடைய தரத்தை நிரூபித்தவர்”
“நீண்ட காலமாக நன்றாக விளையாடிய எந்த வீரருக்கும் களத்திற்கு செல்லும் ஒவ்வொரு முறையும் அசத்த முடியாது என்பது நன்றாக தெரியும். மிடில் ஆர்டரில் நீங்கள் விளையாடும் போது கொஞ்சம் ரிஸ்க் எடுத்து விளையாட வேண்டும். ஆனால் டி20 கிரிக்கெட்டில் அது எளிதல்ல. இருப்பினும் இந்த உலகக் கோப்பையில் ஒரு நல்ல இன்னிங்ஸ் நன்றாக விளையாடினால் அவர் மீண்டும் வந்து விடுவார்”
இதையும் படிங்க: ரோஹித் அந்த தப்பை செய்யக்கூடாது.. நாட்டுக்காக விராட் கோலி தன்னை மாத்திக்கனும்.. மஞ்ரேக்கர் கோரிக்கை
“எனவே கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பது முக்கியமல்ல. அதற்காக அவர் தன்னுடைய ஆட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. தொடர்ந்து விளையாடி அவர் தன்னுடைய ஆட்டத்தை கண்டெடுப்பார்” என்று கூறினார். அவர் கூறுவது போல ஐபிஎல் தொடரை விட மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் எப்போதுமே நன்றாக செயல்பட்டு வருகிறார். அதனால் ஆர்சிபி ரசிகர்களை ஏமாற்றினாலும் அவர் ஆஸ்திரேலிய ரசிகர்களை ஏமாற்ற மாட்டார் என்றே சொல்லலாம்.