ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சர்வதேச டி20 கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை நிர்ணயிக்கப் போகும் இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ளது. கடைசியாக தோனி தலைமையில் 2007 டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றது. அதன் பின் ஐபிஎல் தொடரில் கிடைத்த பல தரமான வீரர்களுடன் களமிறங்கியும் இந்தியா 2வது கோப்பையை வெல்ல முடியாமல் தவிக்கிறது.
குறிப்பாக நவீன கிரிக்கெட்டில் நட்சத்திரங்களாக கருதப்படும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஐசிசி தொடர்களில் லீக் சுற்றில் அபாரமாக செயல்படுகின்றனர். ஆனால் முக்கியமான நாக் அவுட் சுற்றில் அவர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறுவது கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் இந்தியாவின் தோல்விக்கு முதன்மை காரணமாக அமைந்து வருகிறது.
சஞ்சய் மஞ்ரேக்கர் கோரிக்கை:
இந்நிலையில் 2022 டி20 உலகக் கோப்பை செமி ஃபைனலில் இங்கிலாந்துக்கு எதிராக மெதுவாக விளையாடிய தவறை ரோஹித் சர்மா மீண்டும் செய்யக்கூடாது என்று சஞ்சய் மஞ்ரேர்க்கர் கொண்டுள்ளார். அதே போல அப்போட்டியில் 40 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தது போல் நாக் அவுட் போட்டிகளில் விராட் கோலி நங்கூரமாக விளையாடுவதற்கு பதிலாக அதிரடியாக விளையாட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “2 வருடங்களுக்கு முன்பாக அடிலெய்ட் நகரில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற செமி ஃபைனலில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 168 ரன்கள் மட்டுமே எடுத்தது. குறிப்பாக முதல் 10 ஓவரில் அவர்கள் 62 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அந்த நேரத்தில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய சீனியர்கள் அதிக பந்துகளை எதிர்கொண்டனர்”
“ரோஹித் சர்மா 28 பந்தில் 27 ரன்களும் விராட் கோலி 40 பந்தில் 50 ரன்கள் எடுத்து 18வது ஓவரில் ஆட்டமிழந்தார். அங்கேயே இந்தியா தோல்வியை சந்தித்தது. நல்லவேளையாக ஹர்திக் பாண்டியா 33 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஓரளவு நல்ல இலக்கை நிர்ணயிக்க உதவினார். ஆனால் இங்கிலாந்து ஆச்சரியமின்றி 16 ஓவரில் 10 விக்கெட்டுகளை வைத்து இலக்கை சேசிங் செய்தது”
இதையும் படிங்க: அந்த 2 பேரையும் ஒன்னா சேர்த்தா.. அவர் நாட்டுக்காக உ.கோ ஜெயிச்சு கொடுப்பாரு.. ஹர்பஜன் கோரிக்கை
“எனவே ரோகித் – விராட் ஆகியோர் செமி ஃபைனலில் அதே தவறை செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இருப்பினும் தற்போது அதிகப்படியான வெளிப்புற விமர்சனங்களால் 2 வருடங்களுக்கு முன்பிருந்ததை விட விராட் கோலி முன்னேற்றத்தை சந்தித்துள்ளார். ஆனால் நாக் அவுட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட்டின் நலனுக்காக அவர் நங்கூரமாக விளையாடுவதை விட வேகமாக பேட்டிங் செய்ய முயற்சிக்க வேண்டும்” என்று கூறினார்.



