வீடியோ : 36 பந்தில் சதம் – கிறிஸ் கெயில் உலக சாதனையை உடைத்த பாக் வீரர் – உலக சாதனை படைத்த பிஎஸ்எல் போட்டி

Usman Khan PSL
- Advertisement -

பாகிஸ்தானின் பிரபல பிஎஸ்எல் டி20 தொடரின் 2023 சீசன் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஒரு வருடமாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட தார் ரோட் போல பிட்ச் அமைக்கப்பட்டிருந்ததால் உலக அளவில் கிண்டல்களுக்கு உள்ளான பாகிஸ்தானில் இத்தொடரில் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக வேண்டுமென்றே மீண்டும் அதே போன்ற பிட்ச்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதனால் கடந்த சில தினங்களாக பாபர் அசாம் தலைமையிலான பெசாவர் அணி அடித்த 240+ ரன்களை அடுத்தடுத்த போட்டிகளில் 2 எதிரணிகள் அசால்டாக சேசிங் செய்து சாதனை படைத்தன. அந்த நிலையில் மார்ச் 11ஆம் தேதியன்று ராவில்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 28வது லீக் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குயிட்டா கிளாடியேட்டர்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய முல்தான் அணிக்கு கேப்டன் முகமது ரிஸ்வான் – உஸ்மான் கான் ஆகியோர் இணைந்து பிளாட்டான பிட்ச்சில் குயிட்டா பவுலர்களை முதல் ஓவரிலிருந்தே சரமாரியாக அடித்து நொறுக்கினார்கள். குறிப்பாக முதல் 5 ஓவர்களிலேயே 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் கட்டுக்கடங்காத காட்டாறு போல எதிரணி பவுலர்களை துவம்சம் செய்த உஸ்மான் கான் வெறும் 36 பந்தியே சதமடித்து பிஎஸ்எல் தொடரில் அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற சாதனை படைத்தார்.

- Advertisement -

முரட்டு போட்டி:
நேற்று முன்தினம் தமது அணியை சேர்ந்த தென்னாப்பிரிக்க வீரர் ரிலீ ரோசவ் பாபர் அசாம் அணிக்கு எதிராக 41 பந்துகளில் அதிவேகமாக சதமடித்து சாதனை படைத்திருந்தார். அதை அடுத்த 24 மணி நேரத்தில் சுக்கு நூறாக உடைத்த அவர் எதிரணி பவுலர்களை சூறையாடி வெறும் 10 ஓவரில் 157 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து 12 பவுண்டரி 9 சிக்சர்களைப் பறக்க விட்டு 120 (43) ரன்ளை விளாசி ஆட்டமிழந்தார். இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் முதல் 10 ஓவரில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற கிறிஸ் கெயில் சாதனையும் உடைத்த அவர் புதிய உலக சாதனை படைத்தார்.

இதற்கு முன் கடந்த 2013 ஐபிஎல் தொடரில் புனேவுக்கு எதிராக ருத்ர தாண்டவமாடிய கிறிஸ் கெயில் முதல் 10 ஓவரில் 105 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். அவருக்கு பின் வந்த ரிலீ ரோசவ் 15 (9) ரன்களில் அவுட்டானலும் மறுபுறம் தனது பங்கிற்கு 6 பவுண்டரி 2 சிக்சரை பறக்க விட்ட முகமது ரிஸ்வான் 55 (29) ரன்கள் எடுக்க இறுதியில் டிம் டேவிட் 43* (25) ரன்களும் கைரன் பொல்லார்ட் 23* (14) ரன்களும் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்தனர். அதனால் 20 ஓவரில் 262/3 ரன்கள் குவித்த முல்தான் அணி பிஎஸ்எல் தொடரில் அதிகப்படுத்த ஸ்கோர் பதிவு செய்த அணியாக தனது சொந்த சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தது.

- Advertisement -

இதற்கு முன் கடந்த சில தினங்களுக்கு முன் இதே குயிட்டா அணிக்கு எதிராக 245/3 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். சுமாராக பந்து வீசிய குயிட்டா அணி சார்பில் அதிகபட்சமாக குவால்ஸ் அகமது 2 விக்கெட்டுகளை எடுத்தாலும் 77 ரன்களை வாரி வழங்கினார். குறிப்பாக 9 சிக்ஸர்களை கொடுத்த அவர் டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள் கொடுத்த பவுலர் என்ற மோசமான உலக சாதனை படைத்தார். இதற்கு முன் கடந்த 2014ஆம் ஆண்டு நார்த் வெஸ்ட் அணிக்காக எதிராக நமிபியா பவுலர் பிரெடல் வெசல்ஸ் 8 சிக்ஸர்கள் கொடுத்ததே முந்தைய சாதனையாகும்.

அதை தொடர்ந்து 263 என்ற கடினமான இலக்கை துரத்திய குயிட்டா அணியும் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற வகையில் முரட்டுத்தனமான பேட்டிங்கை வெளிப்படுத்தியும் 20 ஓவரில் 253/8 ரன்கள் எடுத்து போராடி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அந்த அணிக்கு ஒமைர் யூசுப் 67 (36), இப்திகர் அஹமத் 53 (31) என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் போராடியும் ஜேஸன் ராய் 6, மார்ட்டின் கப்தில் 37, முகமது ஹபீஸ் 1 என நட்சத்திர பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறியது வெற்றியை கொடுக்கவில்லை.

இதையும் படிங்க:IND vs AUS : டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய பேட்ஸ்மேன்கள் இணைந்து படைத்த அற்புதமான சாதனை – விவரம் இதோ

அப்படி மொத்தமாக இரு அணிகளும் சேர்ந்து 515 ரன்கள் விளாசிய இந்த போட்டி டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிகபட்ச ரன்கள் குவித்த போட்டியாகவும் உலக சாதனை படைத்தது. இதற்கு முன் கடந்த 2022இல் தென்னாபிரிக்காவின் சிஎஸ்ஏ டி20 தொடரில் டைட்டன்ஸ் – நைட்ஸ் அணிகள் மோதிய போட்டியில் 501 ரன்கள் குவிக்கப்பட்டதே முந்தைய சாதனையாகும்.

Advertisement