இந்தியாவில் பிரபலமான சயீத் முஸ்தாக் அலி 2025 டி20 கோப்பை உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் நவம்பர் 26ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஜிம்கானா மைதானத்தில் எலைட் குரூப் சி பிரிவில் இடம் வகிக்கும் சர்வீசஸ் மற்றும் குஜராத் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய சர்வீசஸ் 20 ஓவரில் போராடி 182/9 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கௌரவ் கோச்சார் 60 (37), அருண் குமார் 29 (22) ரன்கள் எடுத்தார்கள். குஜராத்துக்கு அதிகபட்சமாக ஹேமங் பட்டேல் 2, அர்சன் நாக்வஸ்வாலா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள். அடுத்ததாக 183 ரன்களை துரத்திய குஜராத்துக்கு கேப்டன் உர்வில் பட்டேல் சர்வீசஸ் பவுலர்களை அடித்து நொறுக்க ஆரம்பித்தார்.
31 பந்தில் சதம்:
அவருடன் எதிர்புறம் ஆர்யா தேசாய் தம்முடைய பங்கிற்கு ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். ஒவ்வொரு ஓவருக்கும் 10க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த அந்த ஜோடியை கட்டுப்படுத்த முடியாமல் சர்வீசஸ் பவுலர்கள் திணறினார்கள். அந்தளவுக்கு பட்டாசாக விளையாடிய அந்த ஜோடியில் கேப்டன் உர்வில் பட்டேல் வெறும் 31 பந்துகளில் சதத்தை அடித்தார்.
அவருடன் 174 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஆர்யா தேசாய் 6 பவுண்டரி 3 சிக்சருடன் அரை சதத்தை அடித்து 60 (35) ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த ரிப்போன் பட்டேல் டக் அவுட்டானாலும் மறுபுறம் சர்வீசஸ் பவுலர்களை பந்தாடிய உர்வில் பட்டேல் 12 பவுண்டரி 10 சிக்சர்களை பறக்க விட்டு 119* (37) ரன்களை 321.62 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி ஃபினிஷிங் கொடுத்தார். அவரது மிரட்டலான ஆட்டத்தால் 12.3 ஓவரிலேயே 183/2 ரன்களை எடுத்த குஜராத் 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.
சாதனை தகர்ப்பு:
சர்வீசஸ் அணிக்கு அதிகபட்சமாக மோகித் ரதி 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. இப்போட்டியில் 31 பந்துகளில் 100 ரன்கள் அடித்த உர்வில் பட்டேல் சயீத் முஸ்தாக் அலி கோப்பையில் 2வது வேகமான சதத்தை அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். இதற்கு முன் 2018 தொடரில் இமாச்சலப்பிரதேசத்துக்கு எதிராக டெல்லிக்காக ரிஷப் பண்ட் 32 பந்துகளில் சதமடித்ததே முந்தைய சாதனை.
இதையும் படிங்க: மறுபடியும் இந்தியா தோத்தா.. ரிட்டையராகி போய்டலாம்னு 2012லயே சத்தியம் பண்ணேன்.. அஸ்வின் பேட்டி
ஏற்கனவே சயீத் முஸ்தாக் கோப்பை வரலாற்றில் வேகமான சதத்தை அடித்த வீரர்களாக உர்வில் பட்டேல் மற்றும் அபிஷேக் ஷர்மா (தலா 28 பந்துகளில்) ஆகியோர் சாதனைப் படைத்துள்ளனர். அதனாலேயே கடந்த வருடம் சிஎஸ்கே அணிக்காக வாங்கப்பட்ட உர்வில் பட்டேல் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளில் அதிரடியாக விளையாடிய நம்பிக்கையைக் கொடுத்தார். தற்போது 31 பந்துகளில் சதத்தை விளாசி நல்ல ஃபார்ம் இருக்கும் அவர் துவண்டு கிடக்கும் சிஎஸ்கே அணிக்கு 2026 ஐபிஎல் தொடரில் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்படுவதற்கான அறிகுறியை காண்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



