இந்தியாவில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. உலக கோப்பை முடிந்த சில தினங்களிலேயே இந்த தொடர் நடைபெற உள்ளதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை இந்திய அணியானது உலக கோப்பை போட்டிகளில் தற்போது தான் விளையாடி முடித்துள்ளது என்பதன் காரணமாக அந்த அணியில் விளையாடிய பல வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக களமிறங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அதன்படி இந்த ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 15 பேர் கொண்ட இந்திய அணியும் நேற்று அறிவிக்கப்பட்டது. அதேபோன்று ஆஸ்திரேலிய அணியிலும் பல முன்னணி வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு மேத்யூ வேட் தலைமையில் அந்த அணி இந்த டி20 தொடரை எதிர்கொள்ள உள்ளது.
நாளை மறுநாள் நவம்பர் 23-ஆம் தேதி துவங்கும் இந்த டி20 தொடரானது டிசம்பர் 3-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரானது இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு தொடங்கும்? எந்த சேனலில் ரசிகர்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம் என்பது குறித்த தெளிவான தகவலை இங்கு வழங்கியுள்ளோம். அதன்படி இந்த தொடரின் 5 டி20 போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று இந்தியாவில் இந்த தொடரானது நடந்தாலும் இம்முறை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்த தொடருக்கான ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றவில்லை. அதன் காரணமாக இந்த இந்தியா ஆஸ்திரேலியா டி20 தொடரை ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் ஆங்கிலத்தில் நீங்கள் பார்க்க முடியும். அதேபோன்று தமிழில் பார்க்க விரும்புவோர் கலர்ஸ் தொலைக்காட்சியின் மூலம் கண்டுகளிக்கலாம்.
இதையும் படிங்க : இந்தியாவுல எத்தனையோ பிட்ச் இருந்தும் பைனல் மேட்ச்ச ஏன் அங்க வச்சீங்க – கொந்தளித்த ரசிகர்கள்
மேலும் இந்த போட்டிகளை ஆன்லைனில் கண்டுகளிக்க விரும்புவோர் ஜியோ சினிமா ஆப் மூலமாக இலவசமாக கண்டுகளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. உலகக்கோப்பை தொடருக்கு அடுத்து இந்திய அணி விளையாடும் முதல் தொடர் என்பதனாலும், அடுத்த டி20 உலக கோப்பை தொடருக்காக இந்திய அணி தற்போதே தயாராகும் என்பதாலும் இந்த தொடரில் இந்திய வீரர்களின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பதை எதிர்பார்த்து ரசிகர்களும் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.