வம்பிழுந்த பஞ்சாப் கேப்டனை எக்ஸ்ரே எடுக்கும் அளவுக்கு பந்தால் தாக்கிய இளம் எக்ஸ்பிரஸ் பவுலர் – தேவையா இது?

Umran Malik Mayank AGarwal
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் 69 போட்டிகளின் முடிவிலேயே புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு குஜராத், ராஜஸ்தான், லக்னோ மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் தகுதி பெற்றன. அதன் காரணமாக நேற்று மே 22-ஆம் தேதி நடைபெற்ற 70-வது மற்றும் கடைசி லீக் போட்டியில் ஏற்கனவே பிளே ஆப் சுற்றை இழந்த ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் சந்தித்தன. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்த சம்பிரதாய போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் தைரியமாக பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் 20 ஓவர்களில் வெறும் 157/8 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கேன் வில்லியம்சன் இல்லாத நிலையில் புவனேஸ்வர் குமார் தலைமை வகித்த அந்த அணிக்கு அதிகபட்சமாக இளம் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 43 (32) ரன்கள் எடுத்தார். அந்த அளவுக்கு பந்துவீச்சில் அட்டகாசமாக செயல்பட்ட பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ஹர்ப்ரீட் ப்ரார் மற்றும் நேதன் எலிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

பஞ்சாப் ஆறுதல்:
அதை தொடர்ந்து 158 என்ற சுலபமான இலக்கை துரத்திய பஞ்சாப்புக்கு ஜானி பேர்ஸ்டோ 23 (15) சர்பராஸ் கான் 19 (10) ஷிகர் தவான் 39 (32) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கணிசமான அதிரடியான ரன்களை எடுத்தனர். இறுதியில் ஜிதேஷ் சர்மா 19 (7) ரன்களும் லியம் லிவிங்ஸ்டன் அதிரடியாக 2 பவுண்டரி 5 சிக்சருடன் 49* (22) ரன்களும் எடுத்து மிரட்டல் பினிசிங் கொடுத்தார். அதனால் 15.1 ஓவரிலேயே 160/5 ரன்கள் எடுத்த பஞ்சாப் எளிதான வெற்றி பெற்று பங்கேற்ற 14 போட்டிகளில் 7-வது வெற்றியை பதிவு செய்து ஆறுதல் வெற்றியுடன் இந்த வருட ஐபிஎல் தொடரை நிறைவு செய்தது.

முன்னதாக இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 154/5 என்ற நிலையில் இருந்தபோது கடைசி ஓவரை ஆஸ்திரேலியாவின் நாதன் எலிஸ் வீசிய நிலையில் 3-வது பந்தில் வாஷிங்டன் சுந்தர் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். 4-வது பந்தில் ஜெகதீசன் சுசித் டக் அவுட்டாக 5-வது பந்து நோ-பால் காரணமாக ப்ரீ ஹிட் என்ற போதிலும் புவனேஸ்வர் குமார் ரன் அவுட்டானார். அதனால் 156/8 என்ற நிலையில் இருந்த பஞ்சாப்க்கு கடைசி பந்தை எதிர்கொள்ள உம்ரான் மாலிக் வந்தார்.

- Advertisement -

தேவையா இது:
கடைசி பந்து நோ-பாலாக இருக்காது என அசால்ட்டாக இருந்த அவர் திடீரென்று ஒரு பந்துக்காக களமிறக்க வேண்டிய அவசியம் வந்ததால் அவசர அவசரமாக பேட்டிங் செய்ய வந்தார். ஆனால் கடைசி பந்தை வேகமாக முடித்து விட்டு சேசிங் செய்ய போகலாம் என்ற எண்ணத்தில் பவுண்டரி அருகே இருந்த பஞ்சாப் கேப்டன் மயங்க் அகர்வால் உம்ரான் மாலிக் உள்ளே நுழைந்த போது “வேகமாக ஓடி வர வேண்டியதுதானே” என்பது போல் ஒருசில வார்த்தைகளை உபயோகப்படுத்தியதாக தெரிகிறது.

அதனால் கடுப்பான உம்ரான் மாலிக் பஞ்சாப் சேசிங் செய்யும்போது 7-வது ஓவரில் சர்ப்ராஸ் கானை 19 ரன்களில் அவுட் செய்த பின் பேட்டிங் செய்ய வந்த மயங்க் அகர்வாலை முதல் பந்திலேயே அசுர வேகத்தால் தாக்கினார். அந்தப் பந்து அவரின் பேட்டையும் தாண்டி விலா எலும்பு பகுதிகளை பதம் பார்த்ததால் நிலைகுலைந்த மயங்க் அகர்வால் களத்திலேயே விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவர்கள் சோதித்த நிலையில் வலி நிவாரணிகளை எடுத்துக் கொண்டு தொடர்ந்து பேட்டிங் செய்த அவர் அடுத்த ஓவரில் வாஷிங்டன் சுந்தர் வீசிய பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

- Advertisement -

எக்ஸ்பிரஸ் உம்ரான்:
வெறும் 22 வயது மட்டுமே நிரம்பியுள்ள உம்ரான் மாலிக் இந்த வருடம் ஒவ்வொரு போட்டியிலும் அசால்டாக 150 கி. மீ வேகப் பந்துகளை வீசி எதிரணிகளை அச்சுறுத்தி பல ஜாம்பவான்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார். அதிலும் 157 கி. மீ வேகப்பந்தை வீசிய அவர் ஐபிஎல் வரலாற்றில் அதி வேகமான பந்தை வீசிய இந்திய பவுலர் என்ற சாதனை படைத்துள்ளார்.

அந்த அளவுக்கு எக்ஸ்பிரஸ் வேகத்தில் பந்து வீசி வரும் அவருக்கு ஐபிஎல் முடிந்ததும் நடைபெறும் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பும் நேற்று மாலைதான் தேடி வந்தது. அதனால் மேலும் மகிழ்ச்சியுடன் இருந்த அவரிடம் இப்படி வம்பிழுத்து அடிவாங்குவது தேவையா என்று மயங்க் அகர்வால் பற்றி ரசிகர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க : விரைவில் மாற்றம் நிகழும். இந்திய அணியில் இடம்பெறாத விரக்தியில் – வருத்தத்தை பதிவிட்ட இளம்வீரர்

இது பற்றி போட்டி முடிந்த பின் மயங்க் அகர்வால் பேசியது பின்வருமாறு. “அனேகமாக எக்ஸ்ரே எடுக்க செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த சமயத்தில் அவர்கள் நோபால் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்பதால் அவர் தயாராகவில்லை. அதனால் அவரிடம் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு வந்தீர்களா என்று கேட்டேன். அப்போதுதான் காயத்தில் தப்ப முடியும்” என்று கூறினார்.

Advertisement