பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 தொடரில் மே மூன்றாம் தேதி நடைபெற்ற 51வது லீக் போட்டியில் மும்பையை 24 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வீழ்த்தியது. வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா மிகவும் போராடி 170 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. குறிப்பாக முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்ததால் 57/5 என ஆரம்பத்திலேயே கொல்கத்தா திணறியது.
ஆனால் அப்போது அற்புதமாக விளையாடிய மணிஷ் பாண்டே 42, வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக 70 (52) ரன்களும் எடுத்து கொல்கத்தாவை காப்பாற்றினர். மும்பை சார்பில் அதிகபட்சமாக துசாரா மற்றும் பும்ரா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த மும்பைக்கு ரோஹித் சர்மா 13, இசான் கிசான் 11, திலக் வர்மா 4, கேப்டன் பாண்டியா 1 ரன்களில் அவுட்டாகி மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தனர்.
கங்குலியின் ரசிகன்:
அதனால் 71/6 என ஆரம்பத்திலேயே தோல்வியின் பிடியில் சிக்கிய மும்பைக்கு கடைசியில் சூரியகுமார் யாதவ் 56, டிம் டேவிட் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் 18.5 ஓவரிலேயே மும்பையை 145 ரன்களுக்கு சுருட்டி வெற்றி பெற்ற கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனால் 8வது தோல்வியை பதிவு செய்த மும்பை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை 99% இழந்துள்ளது.
மறுபுறம் வான்கடே மைதானத்தில் 12 வருடங்கள் கழித்து வென்ற கொல்கத்தாவின் வெற்றிக்கு 70 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய வெங்கடேஷ் ஐயர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் தாதா சௌரவ் கங்குலியின் மிகப்பெரிய ரசிகரான தமக்கு அவர் கொடுத்த சில ஆலோசனைகள் பேட்டிங்கில் பெரிய அளவில் முன்னேற உதவியதாக வெங்கடேஷ் ஐயர் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தொழில்முறை கிரிக்கெட்டர் போல என்னுடைய இன்னிங்ஸை வேகப்படுத்துவதில் நான் வளைவுத் தன்மையுடன் இருக்க வேண்டும். இந்த வருடம் மனிஷ் பாண்டே 4 – 5 முறை பேட்டிங் செய்வதற்காக காத்திருந்தார். ஆனால் இன்று தான் அவருக்கு பேட்டிங் செய்யும் நேரம் கிடைத்தது. அந்த நேரத்தில் நிதானமாக விளையாடுவது அவசியமாக இருந்தது”
இதையும் படிங்க: 24 ரன்ஸ்.. போராடிய சூர்யகுமார்.. 12 வருடம் கழித்து கொல்கத்தா சாதனை வெற்றி.. பாண்டியா படையின் கதை முடிந்ததா?
“அப்போது நேரம் எடுத்து பிட்ச்க்கு தகுந்தார் போல் நாம் அட்ஜஸ்ட் செய்வோம் என்று அவரிடம் சொன்னேன். பந்து கொஞ்சம் நின்று வந்தது. இந்த பிட்ச் இருதலைப் பட்சமாக இருந்தது. இன்று அணிக்காக தேவைப்பட்ட சூழ்நிலையில் நான் இருந்ததாக உணர்ந்தேன். நான் தாதா சௌரவ் கங்குலியின் மிகப்பெரிய ரசிகன். அவரிடம் என்னுடைய பேட்டிங் ஸ்டேன்ஸ் மற்றும் டெக்னிக்கல் சம்பந்தமான ஆலோசனைகளை கேட்டேன். அது இனிப்பான உரையாடலாக இருந்தது” என்று கூறினார்.