ஐபிஎல் தொடரின் 2024 சீசனில் மே மூன்றாம் தேதி நடைபெற்ற 51வது லீக் போட்டியில் மும்பையை 24 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வீழ்த்தியது. வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடந்த அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா போராடி 170 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 70, மணிஷ் பாண்டே 42 ரன்கள் எடுத்தனர்.
மும்பை சார்பில் பும்ரா மற்றும் நுவான் துசாரா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த மும்பை அணிக்கு இசான் கிசான் 13, ரோஹித் சர்மா 11, கேப்டன் பாண்டியா 1, திலக் வர்மா 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 71/6 என தடுமாறிய மும்பைக்கு சூரியகுமார் யாதவ் 56 டிம் டேவிட், 24 ரன்கள் எடுத்து போராடினார்கள்.
12 வருட வெற்றி:
இறுதியில் 18.5 ஓவரிலேயே அந்த அணியை 145 ரன்களுக்கு சுருட்டி வெற்றி பெற்ற கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் ஸ்டார்க் 4, வருண் சக்கரவர்த்தி 2, சுனில் நரேன் 2, ரசல் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இதனால் 12 வருடங்கள் கழித்து மும்பையை அதனுடைய சொந்த ஊரான வான்கடே மைதானத்தில் தோற்கடித்து கொல்கத்தா வெற்றி கண்டது. மறுபுறம் இந்த தோல்வியால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை 99% மும்பை கோட்டை விட்டது.
இந்நிலையில் 12 வருடங்கள் கழித்து இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கு சில திட்டங்களை வகுத்ததாக தமிழக வீரர் வரும் சக்கரவர்த்தி கூறியுள்ளார். மேலும் சுனில் நரேன் கொல்கத்தா அணியின் லெஜெண்ட் என்று பாராட்டும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “12 வருடங்களாக வெற்றி பெறாத வான்கடேவில் தற்போது வென்றுள்ளது நல்ல உணர்வை கொடுக்கிறது. டிம் டேவிட் பேட்டிங் செய்த போது வெறும் ஒரு விக்கெட் மட்டுமே வெற்றியின் குறுக்கே இருந்தது”
“170 ரன்கள் கட்டுப்படுத்துவதற்கு போதுமான இலக்கு அல்ல. இரவு நேரத்தில் பனி இருந்தது. ஆனால் நாங்கள் எங்களுடைய உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு விளையாடினோம். இப்போட்டிக்காக நாங்கள் விரிவாக திட்டமிட்டது பலனளித்தது. பனியன் காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்பின்னர்களுக்கு பெரிய உதவி கிடைக்கவில்லை. பிட்ச்சில் பந்து நின்று வருவதாக எங்களுடைய பேட்ஸ்மேன்கள் எங்களிடம் சொன்னார்கள்”
இதையும் படிங்க: தாதா கங்குலி கொடுத்த அந்த அட்வைஸ் தான் என்னோட பேட்டிங்க்கு காரணம்.. ஆட்டநாயகன் வெங்கடேஷ் பேட்டி
“ஆனால் நான் பந்து வீச வந்த போது அப்படி எதுவும் இல்லை. சுனில் நரேன் லெஜெண்ட். தொடர்ந்து ஒரே மாதிரியாக பந்து வீசும் அவருடன் சேர்ந்து நான் பந்து வீசுவது நன்றாக இருக்கிறது. முதல் இன்னிங்ஸில் வெங்கடேஷ் மற்றும் பாண்டே ஆகியோர் சேர்ந்து தோளில் சுமந்து வந்த இப்போட்டியில் வென்றது சிறப்பானது. பஞ்சாப்புக்கு எதிராக அதிக ரன்கள் கொடுத்து சந்தித்த தோல்விக்குப்பின் நாங்கள் கம்பேக் கொடுத்துள்ளோம்” என்று கூறினார்.