மலிங்கா சாதனையை சமன் செய்து பாராட்டு மழையில் நனையும் இளம் வீரர் – இந்திய அணியில் இடம் உறுதி

Umran Malik Last Over
- Advertisement -

அசத்தலாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 17-ம் தேதி நடைபெற்ற 28-வது லீக் போட்டியில் பஞ்சாப்பை பதம் பார்த்த ஹைதராபாத் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Livinstone Sharukhan

- Advertisement -

ஷிகர் தவான் 8 (11), ப்ரப்சிம்ரன் சிங் 14 (11), ஜானி பேர்ஸ்டோ 12 (10), ஜிதேஷ் சர்மா 11 (8) போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 61/4 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக லியம் லிவிங்ஸ்டன் மட்டும் அதிரடியாக வெறும் 33 பந்துகளில் 5 பவுண்டரி 4 சிக்சர்களை பறக்கவிட்டு 60 ரன்களை விளாசி காப்பாற்றினார்.

முன்னேறும் ஹைதெராபாத்:
அதை தொடர்ந்து 152 என்ற சுலபமான இலக்கை துரத்திய ஹைதராபாத் அணிக்கு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் கேன் வில்லியம்சன் 3 (9) அவுட்டாகி ஏமாற்றினாலும் மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 31 (25) ரன்கள் எடுத்து அவுட்டானார். அவருடன் விளையாடிய ராகுல் திரிப்பாதி அதிரடியாக 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 34 (22) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த நிலையில் 77/3 என இரு அணிகளுக்கும் வெற்றி சமமாக இருந்த போது ஜோடி சேர்ந்த ஐடன் மார்க்ரம் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் அதிரடியாக ரன்களை குவித்து தங்கள் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

SRH Nicholas Pooran

இதில் நிக்கோலஸ் பூரன் தலா 1 பவுண்டரி மற்றும் சிக்சர் உட்பட 35* (30) ரன்கள் எடுக்க அவருடன் அதிரடி காட்டிய ஐடன் மார்க்ரம் 27 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 41* ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் நல்ல பினிஷிங் கொடுத்தார். இதனால் 18.5 ஓவர்களில் 152 ரன்கள் எடுத்த ஹைதராபாத் அபார வெற்றி பெற்றது. இதனால் முதல் வாரத்தில் 2 அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியடைந்து 10-வது இடத்தில் திண்டாடிய ஹைதராபாத் இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 4-வது வெற்றியை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியது.

- Advertisement -

மிரட்டும் உம்ரான் மாலிக்:
முன்னதாக இந்த போட்டியில் ஹைதராபாத் சார்பில் அபாரமாக பந்துவீசிய உம்ரான் மாலிக் 4 விக்கெட்டுகளையும் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும் சாய்த்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதில் ஒரே ஓவரில் அதிரடியாக 3 விக்கெட்டுகள் எடுத்த இளம் வீரர் உம்ரான் உம்ரான் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். ஆம் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்த போது மிரட்டலாக ரன்களை குவித்த லிவிங்ஸ்டன் ஒரு வழியாக 19-வது ஓவரின் கடைசி பந்தில் அவுட்டானார்.

அப்போது 151/6 என்ற நிலையில் பஞ்சாப் இருந்தபோது கடைசி ஓவரை உம்ரான் மாலிக் அதிரடியாக வீசி 2-வது பந்தில் ஓடின் ஸ்மித் 13 (15), 4-வது பந்தில் ராகுல் சஹர் 0 (0), 5-வது பந்தில் அரோரா 0 (0) என அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுக்க கடைசி பந்தில் அர்ஸ்தீப் சிங் ரன் அவுட்டானதால் கடைசி ஓவரில் மேற்கொண்டு 1 ரன்களைக் கூட எடுக்க முடியாத பஞ்சாப் வெறும் 151 ரன்களுக்கு ஆல்-அவுட்டடாகி தோல்வி அடைந்தது. இதனால் ஐபிஎல் வரலாற்றிலேயே 1 ரன் கூட எடுக்காமல் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்த முதல் அணி என்ற பரிதாபத்திற்கு பஞ்சாப் உள்ளானது.

- Advertisement -

விவேகம் போதுமா:
அந்த அளவுக்கு அதுவும் கடைசி ஓவரில் மிரட்டலான துல்லியம் நிறைந்த அதிவேகமான பந்துகளை வீசிய உம்ரான் மாலிக் 1 ரன் கூட கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை எடுத்தார். இதன் வாயிலாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 20-வது ஓவரை மெய்டன் ஓவராக வீசிய பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஜாம்பவான் லசித் மலிங்கா, இர்பான் பதான், ஜெயதேவ் உனட்கட் ஆகியோருடன் அவர் பகிர்ந்து கொண்டார். இதிலும் குறிப்பாக ஐபிஎல் வரலாற்றில் கடைசி ஓவரில் மெய்டன் ஓவராக வீசியதுடன் அதில் விக்கெட்டுகளையும் எடுத்த பந்துவீச்சாளர் என்ற அபார சாதனையை மலிங்காவுடன் (2009, டெக்கான் அணிக்கு எதிராக, டர்பன்) உம்ரான் மாலிக் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த வெறும் 22 வயது மட்டுமே நிரம்பிய இவர் கடந்த வருடத்திலிருந்து அசால்டாக 145+ கி.மீ வேகப்பந்துகளை வீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததால் 4 கோடிக்கு அவரை ஹைதராபாத் தக்க வைத்தது. அந்த வகையில் இந்த வருடமும் 150 கி.மீ வேகப்பந்துகளை வீசி அனைவரின் கவனத்தை மீண்டும் ஈர்த்து வரும் அவர் முதல் ஒருசில போட்டிகளில் வேகத்திற்கு ஈடாக ரன்களை வாரி வழங்கியதால் விமர்சனத்திற்கும் உள்ளானார்.

இதையும் படிங்க : பழைய பார்முக்கு திரும்பிய பவர்ஃபுல் புவி! ஐபிஎல் கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்தி அசத்தல் – விவரம் இதோ

ஆனால் கடைசி 2 போட்டிகளில் விவேகத்துடன் கூடிய வேகத்தை கையில் எடுத்துள்ள அவர் 30 ரன்களுக்கு மேல் கொடுக்காமல் குறைந்த எக்கனாமியில் பந்துவீசி தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து பாராட்டுகளை அள்ளி வருகிறார்.

Advertisement