போன வருடம் அம்பி – இந்த வருடம் அந்நியன்! பட்டைய கிளப்பும் உமேஷ் யாதவ் 2 புதிய ஐபிஎல் வரலாற்று சாதனை

PBKS vs KKR Umesh
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 1-ஆம் தேதியன்று நடைபெற்ற 8-வது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த அந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு கேப்டன் மயங்க் அகர்வால் ஒரு ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார். ஆனால் அடுத்து களமிறங்கிய இலங்கை வீரர் ராஜபக்சா வெறும் 9 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்களை பறக்க விட்டு சரவெடியாக வெடித்து 31 ரன்களை 344.44 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட் விகிதத்தில் விளாசினார்.

chahar

- Advertisement -

சொதப்பிய பஞ்சாப்:
இதனால் 43/2 என ஓரளவு நல்ல நிலையில் இருந்த பஞ்சாப் அதன்பின் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சொதப்பியது. ஏனெனில் அடுத்ததாக ஷிகர் தவான் 16 ரன்களில் அவுட்டாக நடுவரிசையில் களமிறங்கிய லியம் லிவிங்ஸ்டன் 19 ரன்களிலும் ராஜ் பாபா 11 ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். போதாகுறைக்கு அடுத்து வந்த தமிழக வீரர் சாருக்கான் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்ததால் 92/6 என திடீரென பஞ்சாப் தடுமாறியது.

இறுதியில் ககிஸோ ரபாடா 16 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 25 ரன்கள் விளாசி ஓரளவு காப்பாற்றிய போதிலும் இதர வீரர்கள் சொதப்பியதால் 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பஞ்சாப் வெறும் 137 ரன்களுக்கு சுருண்டது. கொல்கத்தா சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை தொடர்ந்து 138 என்ற சுலபமான இலக்கை துரத்திய கொல்கத்தா தொடக்க வீரர் அஜிங்கியா ரஹானே 12 ரன்களிலும் வெங்கடேஷ் ஐயர் 3 ரன்களிலும் அவுட்டானதால் 38/2 என சுமாரான தொடக்கம் பெற்றது.

Russell 70

காப்பாற்றிய மிரட்டல் ரசல்:
இதை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 15 பந்துகளில் 5 பவுண்டரி உட்பட 26 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த நித்திஸ் ராணா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதனால் 51/4 என தடுமாறிய கொல்கத்தா அணியின் வெற்றி திடீரென கேள்விக்குறியான நிலையில் வந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த அதிரடி வீரர் ஆண்ட்ரே ரசல் சந்தித்த முதல் பந்திலிருந்தே பவுண்டரியும் சிக்சர்களையும் பறக்கவிட்டார்.

- Advertisement -

அவருக்கு உறுதுணையாக நின்ற இங்கிலாந்தைச் சேர்ந்த சாம் பில்லிங்ஸ் 23 பந்துகளில் 21* ரன்கள் எடுக்க மறுபுறம் பஞ்சாப் பந்துவீச்சாளர்களை பறக்கவிட்ட ரசல் வெறும் 31 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 8 இமாலய சிக்ஸர்கள் உட்பட 70* ரன்களை 225.81 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் விளாசி தனி ஒருவனாக வெற்றியை உறுதி செய்தார். இவரின் அதிரடியால் 14.3 ஓவரில் 141/4 ரன்களை எடுத்த கொல்கத்தா 33 பந்துகள் மீதம் வைத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றியை ருசித்தது. இதனால் இந்த தொடரில் அந்த அணி இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் 2-வது வெற்றியை பதிவு செய்து 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

அந்நியனாக உமேஷ் யாதவ்:
இந்த போட்டியில் 4 ஓவர்களை வீசி 1 மெய்டன் ஓவர் உட்பட 23 ரன்களை கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து கொல்கத்தாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய இந்திய வீரர் உமேஷ் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இதுமட்டுமல்லாமல் இந்த வருடம் ஆரம்பம் முதலே அதிரடியாக பந்து வீசி வரும் அவர் இதுவரை பங்கேற்று 3 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை சாய்த்து அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்து வீச்சாளர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து அவர்களுக்கு வழங்கப்படும் ஊதா தொப்பியை வென்று சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

1. இப்போட்டியில் 4 விக்கெட்டுகளை சாய்த்த அவர் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை எடுத்து பந்துவீச்சாளர் என்ற சுனில் நரேன் சாதனையை உடைத்து புதிய வரலாற்று சாதனை படைத்தார். அத்துடன் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

Umesh Yadav

ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்களின் பட்டியல் இதோ:
1. உமேஷ் யாதவ் : 33 – பஞ்சாப்க்கு எதிராக
2. சுனில் நரேன் : 32 – பஞ்சாப்க்கு எதிராக
3. லசித் மலிங் : 31 – சென்னைக்கு எதிராக

- Advertisement -

2. இது மட்டுமல்லாமல் இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் வென்ற அவர் ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற வீரர் என்ற புதிய வரலாற்று சாதனையும் படைத்துள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிராக இதுவரை 6 ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ள அவர் அந்த அணிக்கு எதிராக ஐபிஎல் தொடரில் அதிக ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

Russell Umesh Yadhav

ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற வீரர்களின் பட்டியல் இதோ:
1. உமேஷ் யாதவ் : 6 – பஞ்சாப்க்கு எதிராக
2. யூசுப் பதான் : 5 – டெக்கான் சார்ஜர்ஸ்க்கு எதிராக
3. கிறிஸ் கெயில் : 5 – கொல்கத்தாவுக்கு எதிராக

மொத்தத்தில் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் மிரட்டலாக செயல்பட்டு வரும் உமேஷ் யாதவ் கடந்த சில வருடங்களாக மோசமாக செயல்பட்டதால் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தார். அதே காரணமாக இந்திய ஒருநாள், டி20 அணியில் இருந்து தூக்கி எறியப்பட்ட அவர் டெஸ்ட் அணியிலும் நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். மேலும் அதே காரணத்தால் ஐபிஎல் தொடரில் பெரும்பாலும் வாய்ப்பு கிடைக்காமல் திண்டாடி வந்த அவர் கடந்த 2021 ஐபிஎல் தொடரில் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார்.

இதையும் படிங்க : பிட்ச் உருவாக்குவதை ஐபிஎல் பார்த்து கத்துக்கோங்க! பாகிஸ்தான் வாரியத்தை விமர்சித்த முன்னாள் பாக் வீரர்

அப்படி அம்பியாக இருந்த அவர் இந்த வருடம் வெறும் 3 போட்டியில் மட்டுமே விளையாடி 8 விக்கெட்டுகளை எடுத்து ஊதா நிற தொப்பியை வென்று அந்நியனாக எதிரணிகளை மிரட்ட தொடங்கியுள்ளது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைக்கிறது.

Advertisement