கடைசி நேரத்தில் பிரான்சிஸ்கோவை நொறுக்கி வெற்றியை பறித்த டேனியல் சாம்ஸ் – சூப்பர் கிங்ஸ் பிளே சென்றதா?

MLC TSK
- Advertisement -

அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் 2023 டி20 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதில் ஜூலை 25ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 6:00 மணிக்கு நார்த் கரோலினா நகரில் நடைபெற்ற 14வது லீக் போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் ஆகிய அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற சான் பிரான்சிஸ்கோ முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 20 ஓவர்களில் 171/8 ரன்கள் எடுத்து அசத்தியது.

அந்த அணிக்கு தொடக்க வீரர் ஃபின் ஆலன் 4 (3) ரன்களில் அவுட்டானாலும் மற்றொரு தொடக்க வீரர் மேத்தியூ வேட் அதிரடியாக 4 பவுண்டரி 3 சிக்சருடன் 49 (30) ரன்கள் எடுத்தார். அவருடன் மிடில் ஆர்டரில் சடாப் கான் 20 (23) ரன்களும் சைதன்யா பிஷ்னோய் அதிரடியாக 3 பவுண்டரி 2 சிக்சருடன் 35 (21) ரன்களும் கேப்டன் ஆரோன் ஃபின்ச் 19 (10) ரன்களும் எடுக்க டெக்ஸாஸ் சார்பில் அதிகபட்சமாக ஜெரால்டு கோட்சி 4 விக்கெட்டுகளும் டேனியல் சாம்ஸ் மற்றும் மிட்சேல் சாட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் சாய்த்தனர்.

- Advertisement -

அசத்தல் டெக்சாஸ்:
அதைத்தொடர்ந்து 173 ரன்களை துரத்திய டெக்ஸாஸ் அணிக்கு கேப்டன் டு பிளேஸிஸ் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்த ஓவரிலேயே அடுத்ததாக வந்த கோடி செட்டி 4 (5) ரன்களில் ஆட்டமிழந்ததால் 11/2 என தடுமாறிய அந்த அணிக்கு அடுத்து வந்த டேவிட் மில்லருடன் இணைந்து மீட்டெடுக்க முயற்சித்த மற்றொரு தொடக்க வீரர் டேவோன் கான்வே 30 (27) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களிலேயே டேவிட் மில்லர் 10 (8) ரன்களிலும் அடுத்ததாக வந்த மிட்சேல் சாட்னர் 7 (9) ரன்களிலும் பெவிலியன் திரும்பினர்.

அதன் காரணமாக 13 ஓவரில் 92/5 என சரிந்த டெக்சாஸ் அணியின் வெற்றி கேள்விக்குறியான போது 4வது இடத்தில் களமிறங்கி நிதானமாக விளையாடிய மிலிந்த் குமார் வெற்றிக்காக போராடினார். அவருடன் கடைசி நேரத்தில் டேனியல் சாம்ஸ் சற்று அதிரடியாக விளையாடி சரிவை சரி செய்ய முயற்சித்தார். குறிப்பாக சடாப் கான் வீசிய 17வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் கடைசி நேரத்தில் போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்தினார்.

- Advertisement -

அந்த வகையில் 6வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்த இந்த ஜோடியில் மிலிந்த் குமார் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 52 (41) ரன்களில் முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே 2 பவுண்டரி 4 சிக்சருடன் டேனியல் சாம்ஸ் 42 (18) ரன்களை 233.32 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி வெற்றியை உறுதி செய்து அவுட்டானார். அதை வீணடிக்காமல் அடுத்ததாக வந்த கால்வின் சேவேஜ் 7* (2) ரன்கள் எடுத்ததால் 19.1 ஓவரிலேயே 172/7 ரன்கள் எடுத்த டெக்சாஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி சிறப்பான வெற்றி பெற்றது.

மறுபுறம் பேட்டிங்கில் பெரிய ரன்களை எடுக்க தவறிய சான் பிரான்சிஸ்கோ சார்பில் அதிகபட்சமாக ஹரிஷ் ரவூப், சடாப் கான் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தும் வெற்றி காண முடியவில்லை. இந்த வெற்றிக்கு 2 விக்கெட்டுகள் மற்றும் 42 (18) ரன்கள் எடுத்து கருப்பு குதிரையாக செயல்பட்ட டேனியல் சாம்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். மேலும் இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் முதல் தோல்வியை பதிவு செய்த சான் பிரான்சிக்கோ 3 வெற்றிகளைப் பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுள்ளது.

இதையும் படிங்க:IND vs WI : டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்படி நடப்பது எனக்கு இதுவே முதல்முறை – ஆட்டநாயகன் சிராஜ் மகிழ்ச்சி

மறுபுறம் தன்னுடைய 5 போட்டிகளில் 3வது வெற்றியை பதிவு செய்த டெக்ஸாஸ் 6 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகிக்கும் அந்த அணி டு பிளேஸிஸ் தலைமையில் இந்த தொடரிலும் அசத்துவது சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement