டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக கேட்ச்களை பிடித்த டாப் 10 தரமான ஃபீல்டர்களின் பட்டியல்

Rahul Dravid Catch
- Advertisement -

கிரிக்கெட் என்பது அணி விளையாட்டு என்ற நிலைமையில் அதில் வெற்றி பெறுவதற்கு களமிறங்கும் 11 வீரர்களின் பங்களிப்பும் இன்றியமையாத ஒன்றாகும். அதிலும் 2 பேர் மட்டும் வெற்றிக்கு பங்காற்ற கூடிய பேட்டிங்கைவிட பந்துவீச்சின் போது அணியில் உள்ள 11 பேரும் வெற்றிக்கு மிகச் சிறப்பாக செயல்படுவது அவசியமான ஒன்றாகும். அதில் ஒருவர் தடுமாறி சொதப்பினாலும் எஞ்சிய 10 வீரர்களின் மொத்த போராட்டமும் வீணாகி இறுதியில் தோல்வி பரிசாகக் கிடைத்து விடும். இந்த கூற்றுக்கான உண்மையான அர்த்தத்தை மிகச் சிறப்பாக பந்துவீசும் பவுலரிடம் சிக்கும் வகையில் பேட்ஸ்மேன்கள் அவுட்டாவதற்கு ஏற்றவாறு கொடுக்கும் கேட்ச்சை மைதானத்தின் நாலா புறங்களிலும் பரவியிருக்கும் பீல்டர்களில் ஒருவரை நோக்கி செல்லும் போது அதை அவர் கச்சிதமாக பிடிக்காமல் தவற விடும்போது புரிந்து கொள்ள முடியும்.

ஏனெனில் வரலாற்றில் நிறைய போட்டிகளில் அதுபோன்ற தவறை செய்யும் அணிக்கு தண்டனையாக அதிர்ஷ்டமாக தப்பும் அந்த பேட்ஸ்மேன் அதன்பின் பெரிய அளவில் ரன்களை எடுத்து கைக்குக் கிடைத்த வெற்றியையும் பறித்து விடுவார்கள். அந்த வகையில் கிரிக்கெட்டில் கேட்ச் பிடிப்பது என்பது பீல்டர்களின் இன்றியமையாத கடமையானாலும் அதை கச்சிதமாக பிடிப்பதில் அவர்களுக்கும் ஏராளமான சவால்கள் உள்ளன. பவுண்டரி எல்லையின் அருகில் இருக்கும் போது சூரிய வெளிச்சம் மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தக் கூடியது என்றால் ஸ்லிப் பகுதியில் இருக்கும் போது வேகப்பந்து வீச்சாளர்கள் எதிர்கொண்டு பேட்ஸ்மேன் கொடுக்கும் கேட்ச்கள் காற்றை சீவிக்கொண்டு அதிரடியான வேகத்தில் வந்து சவாலை ஏற்படுத்தும்.

- Advertisement -

அதேபோல் சுழல் பந்துவீச்சாளர்களால் கிடைக்கும் கேட்ச் தாறுமாறாக திரும்பி கணிக்க முடியாத வகையில் வரும். இவை அனைத்தையும் கச்சிதமாக சரியான முறையில் விரல்களை பயன்படுத்தி பிடிக்க தவறினால் காயமடைந்து விளையாட முடியாத நிலைமையும் ஏற்படும். இப்படி சவாலான அம்சங்களை கடந்து சவால் மிகுந்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பீல்டர்களாக அதிக கேட்ச்களை பிடித்து தங்களது அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய டாப் 10 வீரர்களை பற்றி பார்ப்போம்:

10. ராஸ் டெய்லர் 163: நவீன கிரிக்கெட்டில் மிகச் சிறந்த நியூசிலாந்து பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படும் இவர் நாட்டுக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார். அதேபோல் பெரும்பாலும் ஸ்லிப் பகுதியில் பீல்டராக நிற்கும் இவர் 212 இன்னிங்சில் 163 கேட்ச்களை பிடித்து இப்பட்டியலில் 10-வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

9. பிரையன் லாரா 164: கிரிக்கெட் கண்ட மகத்தான இடதுகை பேட்ஸ்மேனாக போற்றப்படும் இவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ளார். பீல்டராகவும் 241 இன்னிங்ஸ்சில் 164 கேட்ச்களை பிடித்துள்ள அவர் அதிக கேட்ச்களை பிடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரராகம் இந்த வரலாற்று பட்டியலில் 9-வது இடம் பிடிக்கிறார்.

8. கிரேம் ஸ்மித் 169: டெஸ்ட் வரலாற்றில் அதிக வெற்றிகளை குவித்த கேப்டனாக சாதனை படைத்துள்ள இவர் டேல் ஸ்டைன், மொர்கல் போன்ற மகத்தான வேகப்பந்து வீச்சாளர்களிடம் சிக்கும் பேட்ஸ்மேன்கள் கொடுக்கும் கேட்ச்களை ஸ்லிப் பகுதியில் கச்சிதமாக பிடிப்பதில் சிறந்தவர். அந்தவகையில் 225 இன்னிங்சில் 169 கேட்ச்களைப் பிடித்துள்ள அவர் இந்த பட்டியலில் 8-வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

7. ஸ்டீபன் பிளமிங் 171: நியூசிலாந்தின் மகத்தான கேப்டன் மற்றும் பேட்ஸ்மேனாக 90களில் அபாரமாக செயல்பட்ட இவர் 199 இன்னிங்ஸ்களில் 171 கேட்ச்களை பிடித்து வரலாற்றில் அதிக கேட்ச்களை பிடித்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையுடன் இப்பட்டியலில் 7-வது இடம் பிடிக்கிறார்.

6. அலஸ்டர் குக் 175: டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்களை எடுத்த முதல் இங்கிலாந்து பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் அசத்திய இவர் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் என்ற 2 மகத்தான வேகப்பந்து வீச்சாளர்களிடம் தடுமாறி பேட்ஸ்மேன்கள் கொடுக்கும் கேட்ச்களை சிறப்பாக பிடித்தவர். அந்த வகையில் 300 இன்னிங்சில் 175 கேட்ச்களை பிடித்துள்ள இவர் வரலாற்றின் சிறந்த இங்கிலாந்து பீல்டராகவும் இப்பட்டியலில் 6-வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

5. மார்க் வாக் 181: 90களில் மிகச்சிறந்த ஸ்லீப் பீல்டர்களில் ஒருவராக அசத்திய இவர் தனது சகோதரர் மற்றும் கேப்டன் ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கு நிறைய வெற்றிகளை பெற்று கொடுத்தார். மொத்தம் 245 இன்னிங்ஸ்சில் 181 கேட்ச்களை பிடித்துள்ள அவர் இந்தப் பட்டியலில் 5-வது இடம் பிடிக்கிறார்.

4. ரிக்கி பாண்டிங் 196: இந்தப் பட்டியலில் இருக்கும் பெரும்பாலானவர்கள் ஸ்லிப் பகுதியில் கேட்ச்களை பிடிப்பதில் கெட்டிக்காரர்கள் என்றால் இவர் கவர், மிட் விக்கெட் திசையில் உள்வட்டத்திற்குள் நின்று சூப்பர்மேனை கேட்ச்களை போலத்தாவிப் பிடிப்பதில் கில்லாடியாவார். அந்த வகையில் வரலாற்றில் 328 இன்னிங்ஸ்களில் 196 கேட்ச்களை பிடித்துள்ள இவர் சிறந்த ஆஸ்திரேலிய பீல்டராக இப்பட்டியலில் 4-வது இடம் பிடிக்கிறார்.

3. ஜேக் காலிஸ் 200: பேட்டிங் பவுலிங்கில் மட்டுமல்லாமல் பீல்டிங்கிலும் 315 இன்னிங்சில் 200 கேட்ச்களை பிடித்துள்ள காரணத்தாலேயே இவரை உலகின் மிகச் சிறந்த ஆல்-ரவுண்டர் என்று அனைவரும் போற்றுகிறார்கள். அந்த வகையில் இவர் வரலாற்றில் சிறந்த தென்னாப்பிரிக்க பீல்டராகவும் அசத்தியுள்ளார்.

2. மகிளா ஜெயஸ்வர்தனே 205: ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுக்களை எடுத்து உலக சாதனை படைத்ததில் இவரின் பங்கு அளப்பரியதாகும். ஏனெனில் அவரின் மிகச்சிறந்த பார்ட்னராக ஸ்லிப் பகுதியில் அழகாக காட்சிகளை பிடிக்கக்கூடிய இவர் 270 இன்னிங்சில் 205 கேட்ச்களை பிடித்து வரலாற்றில் மிகச்சிறந்த இலங்கை பீல்டராக அசத்தியுள்ளார்.

1. ராகுல் ட்ராவிட் 210: எதிரணி பவுலர்கள் வேகமாக ஓடி வந்து போடும் பந்துகளை அப்படியே சுவரைப் போல தடுத்து நிறுத்தி ஏராளமான வெற்றிகளை இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்த காரணத்தாலேயே இவரை பெருஞ்சுவர் என்று அனைவரும் போற்றுகின்றனர்.

அதேபோல் ஃபீல்டராகவும் குறிப்பாக ஸ்லீப் பகுதியில் பேட்ஸ்மேன்கள் கொடுக்கும் கேட்ச் பந்துகள் இவரை தாண்டிச் செல்வது கடினமான ஒன்றாகும். அந்த வகையில் 301 இன்னிங்ஸ்சில் 210 கேட்ச்களை பிடித்துள்ள இவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக கேட்ச்களை பிடித்த பீல்டராக உலக சாதனை படைத்துள்ளார்.

Advertisement