வேற வழியே இல்லை.. ஆர்சிபி ஜெய்க்கனும்ன்னா அந்த 2 வெளிநாட்டு பவுலர்களை கொண்டு வரனும்.. டாம் மூடி

Tom Moody
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் முதல் கோப்பையை வெல்லும் கனவுடன் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வழக்கம் போல தடுமாறி வருகிறது. சென்னைக்கு எதிரான முதல் போட்டியிலேயே 174 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ந்து 16வது வருடமாக தோல்வியை சந்தித்த அந்த அணி 2வது போட்டியில் பஞ்சாப்பை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஒருவேளை அந்தப் போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்திருந்தால் பெங்களூரு தோல்வியை சந்தித்திருக்கும் என்றே சொல்லலாம். ஏனெனில் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக நடந்த 3வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு திணறலாக விளையாடி 183 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. கேப்டன் டு பிளேஸிஸ், மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

2 மாற்றம் வேணும்:
அதிகபட்சமாக மீண்டும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி நங்கூரமாக விளையாடி 83* (59) எடுத்தார். ஆனால் 183 ரன்களை துரத்திய கொல்கத்தாவுக்கு பில் சால்ட் 30, சுனில் நரேன் 47, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 39*, வெங்கடேஷ் 50 ரன்கள் அடித்து எளிதாக வெற்றி பெற வைத்தனர். குறிப்பாக பெங்களூரு திணறலாக பேட்டிங் செய்த அதே பிட்ச்சில் வெளுத்து வாங்கிய கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் 16.5 ஓவரில் அசால்டாக கொல்கத்தாவை வெற்றி பெற வைத்தனர்.

அதிலும் குறிப்பாக பகுதி நேர பேட்ஸ்மேனான சுனில் நரேன் 2 பவுண்டரி 5 சிக்ஸருடன் 47 (22) ரன்களை 213.64 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ஆர்சிபி பவுலர்களை பிரித்து மேய்ந்தார். அந்தளவுக்கு ஆர்சிபி பவுலர்கள் சுமாராக பந்து வீசி வள்ளலாக செயல்பட்டு வெற்றியை தாரை வார்த்தனர். அதனால் இந்த பவுலிங்கை வைத்துக் கொண்டு ஆர்சிபி கோப்பையை வெல்ல முடியாது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

- Advertisement -

இந்நிலையில் பவுலிங் கூட்டணியை சரி செய்து வெற்றி பாதைக்கு திரும்ப லாக்கி பெர்குசன், ரீஸ் டாப்லி ஆகிய 2 வெளிநாட்டு பவுலர்களை பிளேயிங் லெவனில் கொண்டு வாருங்கள் என்று பெங்களூரு அணிக்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மற்றும் பயிற்சியாளர் டாம் மூடி ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: முஸ்பிகர் ரஹீமை முந்திய இந்தியாவின் விராட் கோலி.. டி20 கிரிக்கெட்டில் தனித்துவமான உலக சாதனை

“2 ஸ்பெசலிஸ்ட் வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் விளையாடுவதை தவிர்த்து ஆர்சிபி’க்கு வேறு வழியே இல்லை. பெர்குசன் விளையாட வேண்டும். டாப்லி கண்டிப்பாக பந்து வீச்சை துவக்க வேண்டும்” என்று கூறினார். தற்போதைய நிலைமையில் அல்சாரி ஜோசப் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் வெளிநாட்டு பவுலர்களாக விளையாடி வருகின்றனர். அவர்களை கழற்றி விட்டு பெர்குசன் மற்றும் டாப்லி விளையாட வேண்டும் என்று டாம் மூடி தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement