ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர வீரர் விராட் கோலி 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து அசத்தி வருகிறார். இருப்பினும் அதை கொஞ்சம் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுப்பதால் பெங்களூரு அணியின் தோல்விக்கு விராட் கோலி தான் காரணம் என்று ஒருதரப்பினர் தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்றனர். அதே காரணத்தால் 2024 டி20 உலகக் கோப்பையிலும் விராட் கோலி தேர்வு செய்யப்படக்கூடாது என்ற கருத்துக்களும் காணப்பட்டன.
குறிப்பாக குஜராத்துக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி கடைசியில் வெறும் 118 ஸ்ட்ரைக் ரேட்டில் அவுட்டானார். அது பெங்களூரு அணியின் தோல்விக்கு முக்கிய காரணமானது. எனவே இது போன்ற ஆட்டத்தை யாருமே எதிர்பார்க்க மாட்டார்கள் என்று விராட் கோலியை முன்னாள் ஜாம்பவான் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் நேரலையில் விமர்சித்திருந்தார்.
என்ன கோலி இதெல்லாம்:
அதற்கு “நான் யாருக்காகவும் விளையாடவில்லை. அணிக்காகவும் ஆதரவு கொடுக்கும் ரசிகர்களுக்காகவும் விளையாடுகிறேன்” என்று மற்றொரு போட்டியின் முடிவில் விராட் கோலி நேரடியாகவே பதிலடி கொடுத்தார். இந்நிலையில் பொதுவாக விராட் கோலியை போன்ற வீரர்கள் அணிக்கு வெளியே காணப்படும் விமர்சனங்களை பற்றி கவலைப்படுவதில்லை என்று சொல்வார்கள் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அப்படி விமர்சனங்களை பற்றி கவலைப்படாத நீங்கள் இப்படி பதிலடி கொடுப்பதற்கான காரணம் என்ன என்று அவருக்கு கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் மெதுவாக விளையாடினாலும் உங்களைப் பற்றி எதுவும் சொல்லக்கூடாதா என்று விராட் கோலியை விளாசும் கவாஸ்கர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் பேசியது பின்வருமாறு.
“ஸ்ட்ரைக் ரேட் 118இல் இருந்த போது மட்டுமே வர்ணனையாளர்கள் கேள்வி எழுப்பினர். நான் அதிகப் போட்டிகளை பார்ப்பதில்லை. எனவே இதைப்பற்றி மற்ற வர்ணனையாளர்கள் என்ன கூறினார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் நீங்கள் 14 அல்லது 15வது ஓவரில் 118 ஸ்ட்ரைக் ரேட்டில் அவுட்டாகி விட்டு அதை பாராட்டுமாறு சொன்னால் அது கொஞ்சம் வித்தியாசமானது”
இதையும் படிங்க: அடப்பாவமே இதென்ன ஷிகர் தவானுக்கு ஏற்பட்ட நிலைமை.. சி.எஸ்.கே அணிக்கெதிரான போட்டியிலும் – ஏமாறப்போகும் ரசிகர்கள்
“பொதுவாக இது போன்ற பையன்கள் “நாங்கள் வெளிப்புற சத்தத்தை பற்றி கவலைப்படுவதில்லை” என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட நீங்கள் ஏன் வெளிப்புற சத்தத்திற்கு இப்படி அதிரடி கொடுக்க வேண்டும்? நாங்களும் கொஞ்சம் கிரிக்கெட்டை விளையாடியுள்ளோம். எங்களிடம் நிகழ்ச்சி நிரல் இல்லை. நாங்கள் பார்ப்பதை பற்றி மட்டுமே பேசுகிறோம். எங்களிடம் சொந்த விருப்பு வெறுப்புகள் இருக்க வேண்டிய அவசியமில்லை எங்களுக்கு வெறுப்பு வெறுப்பு இருந்தாலும் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை பற்றி மட்டுமே பேசுகிறோம்” என்று கூறினார்.