ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 2024 சீசன் விரைவில் கோலாகலமாக துவங்க உள்ளது. அந்த தொடரில் எம்எஸ் தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் முறையாக கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. கடந்த வருடம் 41 வயதிலும் முழங்கால் வலியை தாண்டி சிறப்பாக கேப்டன்ஷிப் செய்த அவர் ஐந்தாவது கோப்பையை வெல்ல உதவினார்.
மேலும் 5 கோப்பைகளை வென்ற அவர் ஐபிஎல் வரலாற்றின் வெற்றிகரமான கேப்டன் என்ற ரோகித் சர்மாவின் சாதனையும் சமன் செய்தார். முன்னதாக 2013ஆம் ஆண்டு மும்பையின் கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா 2015, 2017, 2019, 2020 ஆகிய வருடங்களில் மொத்தம் 5 கோப்பைகளை வென்று குறுகிய காலத்திலேயே தோனியை மிஞ்சி வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்தார்.
ரோஹித்தை விட பெஸ்ட்:
அதனால் இந்தியாவுக்காக 3 ஐசிசி கோப்பைகளை வென்ற தோனியை விட ரோகித் சர்மா தான் சிறந்த கேப்டன் என்று மும்பை ரசிகர்கள் பேசுவது வழக்கமாகும். இந்நிலையில் ரோஹித்தை விட 2008 முதல் கேப்டனாக செயல்பட்டு வரும் எம்.எஸ். தோனி ஒரு சிறந்த ஐபிஎல் கேப்டன் என்பதை தாண்டி பயிற்சியாளராகவும் செயல்படும் திறமையை கொண்டிருப்பதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்தியூ ஹைடன் கூறியுள்ளார்.
இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இது பற்றி விவாதிப்பதற்கு ஒன்றுமில்லை. இது ஒரு வெளிப்படையான தேர்வு என்று நான் நினைக்கிறேன். இது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்கள் மத்தியில் ஒருமனதாக இருக்கும். நிச்சயமாக ஹிட்மேன் என்றழைக்கப்படும் ரோஹித் சர்மா அத்தகைய கேப்டன். எனவே இது ஒரு கடினமான தேர்வாகும்”
“ஆனால் நான் தைரியமாக இருக்கப் போகிறேன். அதாவது தோனியை கேப்டனாகவும் பயிற்சியாளராகவும் தேர்வு செய்யப் போகிறேன். அவர் 2008இல் கேப்டனாக துவங்கினார். அந்த சமயத்தில் ஷேன் வார்னே கேப்டனாகவும் பயிற்சியாளராகவும் ராஜஸ்தான் அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். அந்த வகையில் தோனியும் ஒரு பயிற்சியாளராக இருக்க முடியும் என்று நான் உணர்கிறேன்” என கூறினார். அதே நிகழ்ச்சியில் பேசிய மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி இது பற்றி கூறியது பின்வருமாறு.
இதையும் படிங்க: 65வதாக வந்தா என்ன பண்றது.. ஆர்சிபி அணியில் சஹால் கழற்றி விடப்பட்டது ஏன்? மைக் ஹெசன் விளக்கம்
“என்னை பொறுத்த வரை எம்எஸ் தோனி. ஏனெனில் அவர் சராசரியான அல்லது சுமாரான அணிகளை வைத்தே கோப்பையை வென்றார். அது ஒரு அணியை எப்படி வெற்றிகரமாக மாற்றக்கூடிய திறமையை கேப்டன் கொண்டுள்ளார் என்பதை எனக்கு சொல்கிறது. மும்பை அணிக்காக ரோகித் சர்மா அபார கேப்டனாக செயல்பட்டார். இருப்பினும் ஐபிஎல் தொடங்கியது முதலே மும்பை எப்போதும் நல்ல வீரர்களை கொண்ட சிறந்த அணியாக இருந்தது” என்று கூறினார்.