தல தோனியின் 10 வருட ஆல் டைம் மாஸ் டி20 சரித்திர சாதனையை தகர்த்த இங்கிலாந்து வீரர் டாம் கரண் – விவரம் இதோ

Tom Curran
- Advertisement -

இங்கிலாந்தில் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வரும் பிரபலமான 100 பந்துகளை கொண்ட தொடரான ஹண்ட்ரட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி ஆகஸ்ட் 27ஆம் தேதி நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இத்தொடரின் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அசத்திய ஓவல் இன்விசிபில்ஸ் மற்றும் மான்செஸ்டர் ஒரிஜினல் ஆகிய அணிகள் மோதிய மாபெரும் இறுதி போட்டி லண்டனில் இருக்கும் புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற மான்செஸ்டர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஓவல் அணி 100 பந்துகளின் முடிவில் 161/5 ரன்கள் எடுத்து அசத்தியது.

அந்த அணிக்கு ஜேசன் ராய் 0, வில் ஜாக்ஸ் 14, பால் ஸ்டர்லிங் 5, சாம் கரண் 0, சாம் பில்லிங்ஸ் 10 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர். அதனால் 34/5 என மெகா வீழ்ச்சியை சந்தித்த அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் ஜோடி சேர்ந்த நியூஸிலாந்து வீரர் ஜிம்மி நீசம் மற்றும் இங்கிலாந்தின் டாம் கரன் ஆகியோர் சரவெடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக கடைசி கட்ட ஓவர்களில் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தி கடைசி வரை அவுட்டாகாமல் வெளுத்து வாங்கிய அந்த ஜோடி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தது.

- Advertisement -

தோனியின் சாதனை தகர்ப்பு:
அதில் ஜிம்மி நீசம் 7 பவுண்டரி 1 சிக்ஸருடன் 57* (33) ரன்களும் டாம் கரண் 4 பவுண்டரி 5 சிக்ஸருடன் 67* (34) ரன்களும் எடுக்க மான்செஸ்டர் சார்பில் அதிகபட்சமாக ரிச்சர்ட் க்லீசன் 2 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 162 ரன்களை துரத்திய மான்செஸ்டர் அணிக்கு பில் சால்ட் 25 (16) கேப்டன் ஜோஸ் பட்லர் 11 (15) மேக்ஸ் ஹோல்டன் 37 (25) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நல்ல துவக்கத்தை பெற்றாலும் பெரிய ரன்களை எடுக்க தவறினர்.

அப்போது மிடில் ஆர்டரில் நங்கூரமாக நிற்க வேண்டிய வெயின் மேட்சென் 4, லாரி எவன்ஸ் 1, பால் வால்டர் 7 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். அதனால் வீழ்ச்சியை சந்தித்த அந்த அணிக்கு இறுதியில் ஜமி ஓவர்டன் 28* (19) ரன்களும் டாம் ஹர்ட்லி 16* (8) ரன்களும் எடுத்த போதிலும் 100 பந்துகளில் 147/6 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதன் காரணமாக 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்ற ஓவல் அணி சார்பில் அதிகபட்சமாக வில் ஜேக்ஸ் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

மேலும் சர்வதேச அளவில் ஐபிஎல், பிக்பேஷ் போன்ற டி20 தொடர்களின் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ள இந்த தொடரின் மாபெரும் ஃபைனலில் 7வது இடத்தில் களமிறங்கி 67* (34) ரன்கள் குவித்த டாம் கரண் ஆட்டநாயகன் விருதை வென்றார். அதன் வாயிலாக ஒரு டி20 தொடரின் மாபெரும் இறுதி போட்டியில் நம்பர் 7வது இடத்தில் களமிறங்கி அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீரர் என்ற இந்தியாவின் ஜாம்பவான் எம்எஸ் தோனியின் ஆல் டைம் சாதனையும் டாம் கரன் உடைத்துள்ளார்.

இதையும் படிங்க:2019 இருந்த ரோஹித்தா நான் மாறப்போறேன். அடுத்த 2 மாசம் என்னோட டார்கெட் இதுதான் – ரோஹித் சர்மா எடுத்துள்ள அதிரடி முடிவு

இதற்கு முன் கடந்த 2013 ஐபிஎல் தொடரில் மும்பைக்கு எதிரான ஃபைனலில் தோனி 63 (45) ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். அவரை தொடர்ந்து 2020இல் கொழும்புவில் நடைபெற்ற உள்ளூர் டி20 தொடரில் கொழும்பு அணிக்காக வணிந்து ஹஸரங்கா சிலாவ் அணிக்கு எதிராக 60* (34) ரன்கள் அடித்து 3வது இடத்தில் இருக்கிறார்.

Advertisement