இந்திய அணி நிர்வாகத்தால் ஆஸ்திரேலிய தொடருடன் ரிட்டையராக போறேன்னு என் மனைவிகிட்ட சொன்னேன் – அஸ்வின் வேதனை

Ravichandran Ashwin.jpeg
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் படுதோல்வியை சந்தித்த இந்தியா 2013க்குப்பின் தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் தோல்வியை சந்தித்தது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. இத்தனைக்கும் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக இருந்தும் டாஸ் அதிர்ஷ்டத்தை சரியாக பயன்படுத்தாமல் பேட்டிங், பவுலிங் ஆகிய அனைத்து துறைகளிலும் சொதப்பிய இந்தியாவின் தோல்விக்கு நம்பர் ஒன் பவுலராக இருக்கும் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின் கழற்றி விடப்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது.

Ashwin

- Advertisement -

குறிப்பாக இங்கிலாந்தில் இருக்கும் இதர மைதானங்களை காட்டிலும் ஓவல் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் அவர் விளையாட வேண்டும் என ஜாம்பவான் சச்சின் கேட்டுக் கொண்டார். அதை விட ஏற்கனவே அதிக இடது கை பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கி உலக சாதனை படைத்துள்ள அஸ்வினை ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையில் 5 இடது கை வீரர்கள் இருந்தும் தேர்வு செய்யாமல் இந்தியா தவறு செய்து விட்டதாக ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாக் போன்ற ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களே ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

வேதனையுடன் அஸ்வின்:
மேலும் ஆரம்ப காலங்களில் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் மட்டும் அசத்திய அவர் தற்போது வெளிநாடுகளிலும் அனுபவத்தால் முன்னேறி சிறப்பாக செயல்பட்டு 2021, 2023 ஆகிய அடுத்தடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலராக சாதனை படைத்துள்ளார். இருப்பினும் வெளிநாடுகளில் சரிப்பட்டு வர மாட்டார் என்ற கோணத்தில் தொடர்ந்து இந்திய அணி நிர்வாகம் அவரை குறைத்து மதிப்பிட்டு வருகிறது. இந்நிலையில் அப்படி இந்திய அணி நிர்வாகத்துடன் வாய்ப்புக்காக போராடுவதை விட 36 வயதாவதால் முழங்கால் வலியுடன் அதிகமாக போராடுவதாக அஸ்வின் கூறியுள்ளார்.

Ashwin 2

அதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சமீபத்தில் நடந்த 2023 பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடருடன் ஓய்வு பெறப்போகிறேன் என்று தனது மனைவியிடம் தெரிவித்ததாக கூறும் அவர் அதிலிருந்து மீள்வதற்காக பவுலிங் ஆக்சனை மாற்ற முயற்சித்ததாக பின்னணியை பகிர்ந்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த டிசம்பரில் நடந்த வங்கதேச தொடருக்கு பின் நாடு திரும்பியதும் ஆஸ்திரேலிய தொடர் தான் என்னுடைய கடைசி தொடராக இருக்கும் என என்னுடைய மனைவியிடம் தெரிவித்தேன். குறிப்பாக முழங்காலில் பிரச்சனை இருப்பதால் என்னுடைய பவுலிங் ஆக்சனை மாற்றப் போவதாக அவரிடம் கூறினேன்”

- Advertisement -

“ஏனெனில் தற்போதைய ஆக்ஷனில் லேண்டிங் செய்யும் போது என்னுடைய முழங்காலில் நிறைய பாரம் ஏற்படுகிறது. வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலேயே அந்த வலி ஆரம்பித்தது. எனவே இதை எப்படி நான் சமாளிக்க போகிறேன் என்று நினைத்தேன். ஏனெனில் இந்த ஆக்சனை வைத்து தான் நான் கடந்த 3 – 4 வருடங்களாக சிறப்பாக வீசினேன். அதனால் அதை மாற்றுவது முட்டாள்தனமான முடிவாக இருக்கும் என்று நினைத்தேன். இருப்பினும் முழங்காலில் அதிக பாரம் ஏற்படுவதால் 2013/14 காலகட்டத்தில் பின்பற்றிய ஆக்சனை மீண்டும் கொண்டு வருவதற்கான நேரம் வந்து விட்டதாக கருதினேன்”

Ashwin

“அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் வலி நிவாரணிகளை எடுத்துக்கொண்டு விளையாடினேன். ஆனால் முதல் 3 – 4 ஓவர்களில் நான் ஒரு பவுலர் தானா என்று யோசிக்கும் அளவுக்கு சுமாராக செயல்பட்டேன். இருப்பினும் போட்டியின் விழிப்புணர்வால் நேரம் செல்ல செல்ல சிறப்பாக செயல்பட்டேன். இந்த 36 வயதில் நான் சாதித்துள்ளதற்காக பெருமைப்படுகிறேன். எனவே ஒருவேளை நான் ஆக்சனை மாற்றினால் அது என்னுடைய கேரியருக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதை வாழ்க்கையில் பெரிய சவாலாக நினைக்கிறேன்”

இதையும் படிங்க:2023-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை பைனலில் இந்த 2 அணிகள் தான் மோதும் – மிஸ்பா உல் ஹக் கருத்து

“ஏனெனில் தற்போதைய இந்திய அணியில் பெரும்பாலான வீரர்களுக்கு பாதுகாப்பான இடங்கள் இல்லை. அங்கே வீரர்கள் வித்தியாசமாக முயற்சித்து தோல்வியை சந்திப்பதை விரும்பவில்லை. அதனால் அதே ஆக்சனுடன் இன்னும் 4 போட்டிகளில் விளையாடி 15 – 16 விக்கெட்டுகளை எடுப்பது எனக்கு எளிது. ஆனால் அது எனக்கு மனதளவிலான திருப்தியை கொடுக்காது” என்று கூறினார்.

Advertisement