தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் ஜூலை 24ஆம் தேதி திருநெல்வேலியில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் கம்பெனி மைதானத்தில் 23வது போட்டி நடைபெற்றது. இரவு 7.15 மணிக்கு நடைபெற்ற அந்தப் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற நெல்லை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய திருப்பூர் அணிக்கு முதல் பந்திலேயே அமித் சாத்விக் கோல்டன் டக் அவுட்டானார். இருப்பினும் அடுத்ததாக வந்த ராதாகிருஷ்ணன் அதிரடியாக விளையாடிய நிலையில் எதிர்புறம் மற்றொரு துவக்க வீரர் துஷார் ரஹீஜா வெளுத்து வாங்கினார். அந்த வகையில் இரண்டாவது விக்கெட்டுக்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் தூஷர் ரஹீஜா 41 (13) ரன்கள் விளாசி அவுட்டானார்.
நடராஜன் அசத்தல்:
அவருடன் சேர்ந்து விளையாடிய ராதாகிருஷ்ணன் அரை சதமடித்து 50 (35) ரன்கள் குவித்து அவுட்டானார். அவர்களைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் பாலச்சந்தர் அனிருத் 14, கேப்டன் சாய் கிஷோர் 2 ரன்னில் அவுட்டானாலும் முகமது அலி 35 (29), கணேஷ் 36 (25) ரன்கள் எடுத்தனர். அதனால் 20 ஓவரில் திருப்பூர் 189/8 ரன்கள் எடுத்த நிலையில் நெல்லை சார்பில் அதிகபட்சமாக சிலம்பரசன் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
அதைத் தொடர்ந்து 190 ரன்களை துரத்திய நெல்லைக்கு முதல் ஓவரிலேயே புவனேஸ்வரன் வேகத்தில் அஜித் குருசாமி டக் அவுட்டானார். அடுத்ததாக வந்த நிதீஷ் ராஜகோபாலை 1 ரன்னில் நடராஜன் அவுட்டாக்கினார். போதாகுறைக்கு அதற்கடுத்ததாக வந்த அர்ஜுன் குமார் 6 ரன்னில் சாய் கிஷோர் சுழலில் போல்ட்டானார்.
இருப்பினும் மறுபுறம் கேப்டன் அருண் கார்த்திக் நங்கூரமாகவும் அதிரடியாகவும் விளையாடி 51 (36) ரன்கள் குவித்து சவாலை கொடுத்த போது நடராஜன் அவுட்டாக்கினார். ஆனால் மிடில் ஆர்டரில் ஜோடி சேர்ந்த ரித்திக் ஈஸ்வரன் மற்றும் சோனு யாதவ் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். குறிப்பாக 5வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி நெல்லையை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தது.
அதனால் கடைசி 3 ஓவரில் அந்த அணிக்கு 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் திருப்பூரின் வெற்றி கேள்விக்குறியானது. ஆனால் அப்போது 18வது ஓவரை வீசிய நடராஜன் 40 (23) ரன்கள் விளாசி அச்சுறுத்திய சோனு யாதவை அவுட்டாக்கி திருப்பு முனையை உண்டாக்கினார். அதை அப்படியே பயன்படுத்திய ராமலிங்கம் 19வது ஓவரில் ரித்திக் ஈஸ்வரனை 59 (35) ரன்களில் காலி செய்தார்.
இதையும் படிங்க: 2023 உ.கோ ஃபைனல் பிட்ச்சை ரோஹித் – டிராவிட் மாத்தல.. ஆஸிக்கு அது கிடைச்சுது.. விக்ரம் ரத்தோர் பதிலடி
இறுதியில் கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்ட போது 15 ரன்களை கொடுத்த நடராஜன் 1 விக்கெட்டை எடுத்தார். அதனால் 20 ஓவரில் நெல்லையை 184/9 ரன்களுக்கு கட்டுப்படுத்திய திருப்பூர் 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. திருப்பூர் அணிக்கு அதிகபட்சமாக நடராஜன் 4, ராமலிங்கம் ரோஹித் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள். இதையும் சேர்த்து 6 போட்டிகளில் 3வது வெற்றியை பதிவு செய்த திருப்பூர் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறிய நிலையில் நெல்லை 6வது இடத்திற்கு சரிந்தது.



