ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரது தலைமையில் ஒரு வழியாக இந்தியா வென்று சாதனை படைத்தது. ஏனெனில் 2022 டி20 உலகக் கோப்பையில் அவர்களுடைய தலைமையில் தோல்வியை சந்தித்த இந்தியா 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் படுதோல்வியை சந்தித்தது. இருப்பினும் 2023 உலகக் கோப்பையில் சொந்த மண்ணில் எதிரணிகளை இந்தியா துவம்சம் செய்தது.
குறிப்பாக காலம் காலமாக சவாலை கொடுத்து வந்த நியூசிலாந்தை முதல் முறையாக செமி ஃபைனலில் தோற்கடித்த இந்தியா தொடர்ந்து 10 வெற்றிகளுடன் மிரட்டலான ஃபார்மில் ஃபைனலுக்கு சென்றது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மாவை தவிர்த்து மற்ற வீரர்கள் அதிரடியாக விளையாடாமல் தோல்விக்கு காரணமானவர்கள்.
பிட்ச் மாற்றப்படவில்லை:
அதனால் 2011க்குப்பின் சொந்த மண்ணில் கோப்பையை வெல்வதற்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை தவற விட்டது கோடிக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது. முன்னதாக அப்போட்டி நடைபெற்ற அஹமதாபாத் பிட்ச்சை தங்களுக்கு சாதகமாக சுழலுக்கு கைகொடுக்கும் வகையில் அமைத்ததே தோல்விக்கு காரணம் என்று முகமது ஃகைப், ஹர்பஜன் சிங் போன்ற முன்னாள் இந்திய வீரர்களே விமர்சித்தனர்.
குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரின் வழிகாட்டுதலில் பிட்ச் தயாரிக்கப்பட்டதாக முகமது ஃகைப் தெரிவித்தார். அதனால் பிட்ச்சின் நிறம் மாறியதை தாமே நேரில் பார்த்ததாக முகமது கைஃப் கூறியிருந்தார். இந்நிலையில் 2023 உலகக் கோப்பை ஃபைனல் பிட்ச்சை மாற்றியமைக்கவில்லை என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
அப்போட்டியில் இந்தியாவின் தோல்விக்கான காரணம் பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “பிட்ச் வித்தியாசமாக இருந்ததாக சில கதைகளை நான் கேள்விப்பட்டேன். அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஃபைனலில் போட்டி நடைபெற நடைபெற பிட்ச் முன்னேறியது. உண்மையில் நேரம் செல்ல செல்ல அது ஸ்லோவாகும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்”
இதையும் படிங்க: இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு? பயப்படாம அந்த உண்மையை சொல்லுங்க.. அகர்கரை சாடிய ஸ்ரீகாந்த்
“ஆனால் அது நடைபெறவில்லை. அது ஏன் ஸ்லோவாகவில்லை? ஆம் அப்போட்டியில் நாங்கள் பேட்டிங்கில் நாங்கள் கொஞ்சம் அதிக ரன்கள் எடுத்திருக்க வேண்டும். அன்றைய நாளில் அப்படி நடந்திருக்கலாம் இப்படி விளையாடியிருக்க என்று என்ன நாம் வேண்டுமானாலும் பேசலாம். உண்மையில் உலகக் கோப்பை வெல்ல உங்களுக்கு அதிர்ஷ்டமும் கொஞ்சம் தேவை. அந்த அதிர்ஷ்டம் எங்களை விட ஆஸ்திரேலியாவுக்கு அதிகமாக இருந்தது. அதை பயன்படுத்தி எங்களை விட அவர்கள் கொஞ்சம் நன்றாக விளையாடியதாலேயே வெற்றி பெற்றார்கள்” என்று கூறினார்.