சொந்த வீடு கூட இல்ல, ஐபிஎல் சம்பளம் வந்தபின் தாய் தந்தைக்கு புதிய வீடு வாங்கணும் – இளம்வீரர் நெகிழ்ச்சி

Mi
- Advertisement -

உலகப்புகழ் பெற்ற ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மும்பை நகரில் கோலாகலமாகத் தொடங்கிய மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று துவங்கிய இந்த தொடர் வெற்றிகரமாக முதல் வாரத்தை எட்டியுள்ள நிலையில் இதுவரை நடைபெற்ற 10 போட்டிகளில் பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. இப்படி ஆரம்பத்திலேயே சூடுபிடித்துள்ள இந்தத் தொடர் வரும் மே 29-ஆம் தேதி வரை 2 மாதங்கள் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது.

IPL 2022 (2)

- Advertisement -

அசத்தும் இளம் வீரர்கள்:
ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் தொடரில் பல தரமான வீரர்கள் உலகிற்கு வெளிச்சத்திற்கு வருவார்கள். அந்த வகையில் இந்த வருடம் 10 போட்டிகள் மட்டுமே நடைபெற்று முடிந்துள்ள நிலையில் ஆயுஷ் படோனி, லலித் யாதவ், திலக் வர்மா போன்ற நல்ல தரமான வீரர்கள் தங்களின் அபார திறமையால் அனைவரின் கவனத்தையும் எடுத்து வருகின்றனர். இதில் குறிப்பாக லக்னோ அணிக்காக விளையாடும் இளம் வீரர் ஆயுஷ் படோனி 22 வயதிலேயே மைதானத்தின் நாலா புறங்களிலும் அதிரடியாக விளையாடி வருவதால் இந்தியாவின் இளம் ஏபி டிவில்லியர்ஸ் என பெயர் வாங்க தொடங்கியுள்ளார். அதேபோல் மும்பை அணிக்காக முதல் 2 போட்டிகளில் அசத்திய மற்றொரு இளம் வீரர் திலக் வர்மா அந்த அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

அசத்தும் திலக் வர்மா:
தற்போது 19 வயது மட்டுமே நிரம்பிய திலக் வர்மா ஹைதராபாத் நகரை சேர்ந்தவர். சமீபத்தில் நடந்த ஐசிசி அண்டர்-19 உலக கோப்பை 2022 தொடரில் கோப்பையை வென்ற இந்திய அணியில் அவர் இடம் பிடித்து இருந்த போதிலும் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. இருப்பினும் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்திய காரணத்தால் இந்த வருடத்துக்கான மெகா ஏலத்தில் 1.7 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு மும்பை இந்தியன்ஸ் அணி அவரை போட்டி போட்டு வாங்கியது. அந்த நம்பிக்கையை தற்போது காப்பாற்ற தொடங்கியுள்ள அவர் இந்த வருடம் பங்கேற்ற முதல் போட்டியில் 15 பந்துகளில் 22 ரன்களும் 2-வது போட்டியில் மும்பை தடுமாறிய வேளையில் வெறும் 33 பந்துகளில் 5 சிக்சர்கள் உட்பட 61 ரன்கள் விளாசி அசத்தினார்.

Tilak Varma

இப்படி திறமையால் உயரத் தொடங்கியுள்ள திலக் வர்மா தமது குடும்பத்திற்கு சொந்த வீடு கூட இல்லை என தனது இயல்பு வாழ்க்கையின் பின்னணியை பகிர்ந்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு.”பொருளாதார ரீதியில் மோசமான நிலையில் இருந்த எங்கள் குடும்பத்தில் நான் வளர்ந்தேன். எனது தந்தையின் மிகக் குறைவான சம்பளம் எனது கிரிக்கெட் பொருட்களை வாங்குவதற்கும் எனது தம்பியின் படிப்பு செலவுக்கும் போதவில்லை. இருப்பினும் கடந்த சில வருடங்களாக நான் விளையாடும் கிரிக்கெட் போட்டிகளில் கிடைக்கும் சம்பளம் மற்றும் ஒருசில குறைந்த ஸ்பான்சர்ஷிப் தொகை வாயிலாக எனது கிரிக்கெட் செலவுகளை நானே பார்த்துக்கொள்கிறேன். எங்களுக்கு இன்னும் சொந்த வீடு கிடையாது எனவே இந்த ஐபிஎல் தொடரில் எவ்வளவு சம்பாதித்தாலும் அதை வைத்து முதலில் எனது தாய் தந்தைக்கு ஒரு வீடு வாங்குவேன். இதில் கிடைக்கும் பணம் எனது எஞ்சிய வாழ்நாளில் நல்ல நிலையில் கிரிக்கெட் விளையாட உதவும்” என நெகிழ்ச்சி பொங்க கூறினார்.

- Advertisement -

சாதித்து காட்டிய ஐபிஎல்:
இன்று உலகின் நம்பர் ஒன் டி20 தொடராக விஸ்வரூபம் எடுத்து நிற்கும் ஐபிஎல் தொடர் முதல் முறையாக இளம் வீரர்களை கண்டறிந்து இந்த உலகிற்கு காட்டுவதற்காக தோற்றுவிக்கப்பட்டது. சொல்லப் போனால் “திறமைக்கு வாய்ப்பு” என்பதே ஐபிஎல் தொடரின் தாரக மந்திரமாகும். அந்த வகையில் தரமான வீரர்களை கண்டறியும் ஐபிஎல் அவர்களின் வாழ்வில் ஏழ்மையை போக்கி ஒளி விளக்கேற்றி வளத்தை அள்ளிக் கொடுக்கும் ஒரு பொன்னான தருணமாகவும் இருந்து வருகிறது. சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக் தெருவில் நடந்து கொண்டிருந்த கிரிக்கெட் வீரர்களை கூட இந்த ஐபிஎல் தொடர் நல்ல நிலைமைக்கு கொண்டுவந்துள்ள கதைகளை பார்த்துள்ளோம்.

tilak varma 1

அந்த வகையில் ஏழ்மையிலும் திறமை நிறைந்த திலக் வர்மாவை கண்டறிந்த ஐபிஎல் அவருக்கு வாய்ப்பைக் கொடுத்து அவரின் வாழ்க்கையையும் வளப்படுத்தி உள்ளதால் தனது தோற்றுவிப்புக்கான லட்சியத்தை ஐபிஎல் எட்டி சாதித்துக் காட்டி விட்டது என்றே கூறலாம். இதற்காக நாம் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திற்கும் சிறிய நன்றியை செலுத்த வேண்டும். இதுபற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. ” இந்த வருடத்தின் ஐபிஎல் ஏலம் நடைபெற்ற போது நான் எனது பயிற்சியாளருடன் வீடியோ காலில் இருந்தேன். அந்த நாளில் என்னை வாங்கத் தொடங்கிய போது எனது பயிற்சியாளர் மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டார்.

இதையும் படிங்க : அவமானம்! அடுத்தடுத்த தோல்விகளால் பெரிய அவமானத்தை சந்தித்த சென்னை – என்ன காரணம்?

அதன்பின் இந்த செய்தி பற்றி எனது தாய் தந்தையிடம் தெரிவித்த போது அவர்களும் ஆனந்தக்கண்ணீர் விட்டனர். குறிப்பாக எனது அம்மா ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் உணர்ச்சியில் வாயடைத்துப் போனார்” எனக்கூறி திலக் வர்மா தமது வாழ்க்கையையும் தனது குடும்பத்தினரையும் சந்தோஷப்படுத்திய ஐபிஎல் தொடருக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

Advertisement