
அகமதாபாத் நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 30-வது லீக் ஆட்டத்தில் விளையாடியிருந்த மும்பை இந்தியன்ஸ் அணியானது குஜராத் டைட்டன்ஸ் அணியை அவர்களது சொந்த மண்ணில் 99 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரின் முதல் 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை அணி இரண்டு வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியின் போது முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 199 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை சேசிங் செய்யும் போது மும்பை அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 15.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 100 ரன்களை மட்டுமே குவித்தது.
அதன்காரணமாக 99 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக ஐந்தாவது வீரராக களமிறங்கிய திலக் வர்மா 45 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர் என 101 ரன்கள் குவித்து ஐபிஎல் போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
அவரது இந்த அற்புதமான ஆட்டம் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. மேலும் அவர் அடித்த இந்த சதத்தின் மூலம் முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரரான சனத் ஜெயசூர்யாவின் மாபெரும் சாதனை ஒன்றினை சமன் செய்துள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது சி.எஸ்.கே அணிக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது சனத் ஜெயசூர்யா 45 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.
இதையும் படிங்க : 5 ஆட்டமா நான் நெனச்சது நடக்கல.. தனது சதத்திற்கு பின்னால் இருக்கும் சீக்ரெட் குறித்து – திலக் வர்மா பேச்சு
இதுவே மும்பை இந்தியன்ஸ் வீரரால் அடிக்கப்பட்ட அதிவேக சதமாக இருந்து வந்தது. இவ்வேளையில் 19 ஆண்டுகள் கடந்த பின்னர் தற்போது திலக் வர்மாவும் 45 பந்துகளில் சதம் அடித்து அவரது இந்த சாதனையை சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.