குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 30-வது லீக் ஆட்டத்தில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது அந்த அணியை அவர்களது சொந்த மைதானத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்தது.
குஜராத் அணிக்கெதிரான சதம் குறித்து பேசிய : திலக் வர்மா
பின்னர் தொடர்ந்து 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணி மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 15.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 100 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 99 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது.
இந்த போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக திலக் வர்மா 45 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர் என 101 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாகவே மும்பை அணி வெற்றி பெற்றதால் அவருக்கு இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய திலக் வர்மா கூறுகையில் :
உண்மையிலேயே முதல் சதம் என்பது எப்போதுமே ஸ்பெஷலான ஒன்று. இந்த சதம் எனக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் வேளையில் எங்களது அணிக்கும் இது மிக முக்கியமானதாக மாறியுள்ளது. தேவையான நேரத்தில் இந்த சதம் வந்துள்ளதால் மகிழ்ச்சி அடைகிறேன். இனிவரும் ஒவ்வொரு போட்டிகளும் எங்களுக்கு மிகவும் முக்கியம் என்பதால் இந்த வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஐந்து போட்டிகளாக நான் நிலைத்து நின்று விளையாட விரும்பினேன். ஆனால் அது நடக்காமல் போனது. எனவே இந்த போட்டியில் எவ்வளவு நேரம் களத்தில் நிற்க முடியுமோ நிற்க வேண்டும் என்பதை யோசித்து விளையாடினேன். முதல் 20 பந்துகள் பொறுமையாக விளையாடினேன். அதன்பிறகு என்னுடைய இயல்பான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அடித்து விளையாடினேன்.
இதையும் படிங்க : ருதுராஜ் கெய்க்வாடுக்கு பதிலாக சி.எஸ்.கே அணியின் கேப்டனாக அவரை மாற்றுங்க – பத்ரிநாத் கருத்து
இந்த போட்டியில் எங்களது அணி சற்று அழுத்தத்தை சந்தித்த வேளையில் சூழலுக்கு ஏற்றவாறு விளையாட வேண்டும் என்று அடிப்படையான ஷாட்டுகளை விளையாடினேன். இறுதியில் நல்ல முடிவும் கிடைத்தது என திலக் வர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.



