நம்பலானாலும் அதான் நெசம், இந்தியாவுல அந்த மாதிரி ஒரு பவுலர் வரலாற்றிலேயே இல்ல – அஹமத் சேஷாத் பேட்டி

Virat Kohli Ahmed Shehzad
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழும் இந்தியா எப்போதுமே சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் விராட் கோலி, சுப்மன் கில் என உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களை உருவாக்கும் தொழிற்சாலையாகவே இருந்து வருகிறது. இருப்பினும் பவுலிங் துறையில் தரமான வீரர்களை உருவாக்குவதில் இந்தியா தடுமாறுகிறது என்றால் மிகையாகாது. குறிப்பாக அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், ரவிச்சந்திரன், அஸ்வின் ரவீந்திர ஜடேஜா என ஸ்பின்னர்களுக்கு பஞ்சமில்லை என்றாலும் எதிரணிகளை தெறிக்க விடக்கூடிய வேகத்தில் வீசும் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்தியாவுக்கு அரிதாகவே கிடைக்கின்றனர்.

சொல்லப்போனால் இந்திய வரலாற்றில் கபில் தேவ் மற்றும் ஜஹீர் கான் என அனல் பறக்கும் வேகத்தில் வீசிய பவுலர்கள் வெறும் கைவிட்டு எண்ணக்கூடிய அளவுக்கு மட்டுமே இருக்கிறார்கள். அந்த இருவரை தவிர்த்து பெரும்பாலனர்வர்கள் 120 – 130 கி.மீ வேகத்தில் மட்டுமே வீசுபவர்களாக இருக்கும் நிலையில் நவீன கிரிக்கெட்டில் எதிரணிகளை தெறிக்க விடும் அளவுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள ஜஸ்பிரித் பும்ரா சில சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்தாலும் அடிக்கடி காயத்தை சந்தித்து வருபவராக இருக்கிறார்.

- Advertisement -

இந்தியாவின் குறை:
அதற்கு இயற்கையாகவே பெரும்பாலான இளம் வீரர்கள் சச்சின் போல வரவேண்டும் என்று விரும்புகிறார்களே தவிர கபில் தேவ் போல வரவேண்டும் என்று நினைக்காதது ஒரு காரணமாகும். அதை விட சிறப்பாக செயல்படும் பவுலர்களுக்கும் தொடர் வாய்ப்புகள் கொடுக்காமல் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் கழற்றி விடுவது மற்றொரு காரணமாகும். அதாவது ஒரு பேட்ஸ்மேன் சொதப்பலாக செயல்பட்டாலும் 10 போட்டிகளில் வாய்ப்பு பெரும் நிலையில் பவுலர்கள் மட்டும் ஓரிரு போட்டிகளில் ரன்களை வாரி வழங்கினாலே கழற்றி விடப்படுகிறார்கள். இதனுடைய தாக்கம் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்தது என்றே சொல்லலாம்.

அதாவது ஆஸ்திரேலிய அணியில் ஜோஸ் ஹேசல்வுட் போன்ற தரமான பவுலர் காயமடைந்ததும் அவரது இடத்தில் உள்ளே வந்த ஸ்காட் போலண்ட் அற்புதமான தாக்கத்தை ஏற்படுத்தி இந்தியாவை தோற்கடிக்க முக்கிய பங்காற்றினார். அந்த வகையில் இந்திய கிரிக்கெட்டில் எதிரணிகளை அச்சுறுத்தும் வேகத்தில் வீசும் பவுலர்கள் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை என பாகிஸ்தான் வீரர் அகமது சேஷாத் கூறியுள்ளார். இதைக் கிண்டலடிப்பதற்காக சொல்லவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவர்களை மரியாதை குறைவாக எதுவும் சொல்லவில்லை. ஆனால் எதிரணிக்கு அச்சுறுத்தலை கொடுக்கும் அளவுக்கு இந்தியாவில் பவுலர்கள் இல்லை. குறிப்பாக எதிரணி பேட்ஸ்மேன்கள் தைரியமாக எதிர்கொள்ள பயப்படும் அளவுக்கு அவர்களிடம் எந்த பந்து வீச்சாளர்களும் இல்லை. அவர்களிடம் பும்ரா, ஜடேஜா, அஸ்வின் போன்ற நல்ல பவுலர்கள் இருக்கின்றனர். இருப்பினும் அவர்கள் எதிர்கொள்வதற்கு பயத்தை கொடுக்க கூடியவர்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் அதே சமயம் அவர்களுடைய பேட்ஸ்மேன்கள் மிகவும் ஆபத்தானவர்களாக இருக்கின்றனர்”

“அதே போல நான் எதிர்கொண்டவர்களில் சோயப் அக்தரை தவிர்த்து யாரும் அச்சுறுத்தியதில்லை. குறிப்பாக பாகிஸ்தான் அணியில் நான் புதிதாக விளையாடிய போது அவர் ஜாம்பவானை போல் இருந்தார். பழைய பந்தை ஸ்விங் செய்து அவர் வீசும் 6 – 8 பந்துகளுக்கு மேல் என்னால் தாக்கு பிடிக்க முடியாது. அவரிடம் 2 முக்கியமான திறமைகள் இருக்கின்றன. ஒன்று அவர் எப்போதும் வலைப்பயிற்சியில் கூட நோபால் பந்துகளை வீசுவதில்லை. அதேபோல வலை பயிற்சியில் பேட்ஸ்மேன்கள் காயமடைந்து விடுவார்கள் என்பதால் அவர் தேவையற்ற பவுன்சர்களை வீசமாட்டார்” என்று கூறினார்.

இதையும் படிங்க:போனா போகட்டும்னு விடுறேன், ஆசிய கோப்பை விவகாரத்தில் இந்தியாவை எச்சரித்த – புதிய பாக் சேர்மேன்

அந்த நிலையில் அண்டை நாடான பாகிஸ்தானில் ஆரம்ப காலம் முதலே இம்ரான் கான், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், சோயப் அக்தர், முகமத் அமீர் போன்ற தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் தற்போது ஷாஹீன் அப்ரிடி, ஹாரீஸ் ரவூப் போன்றவர்கள் இருக்கின்றனர். அவர்களும் சில சமயங்களில் சொதப்புவார்கள் என்றாலும் அவர்களுக்கு எதிராக தான் 2017 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2021 டி20 உலக கோப்பையில் இந்தியா தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement