ஆசிய கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லை பிரச்சனை காரணமாக கடந்த 10 வருடங்களாக இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து விட்டு ஆசிய மற்றும் ஐசிசி உலக கோப்பைகளில் மட்டும் விளையாடி வருகின்றன. இருப்பினும் அந்த வரிசையில் வரும் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெறும் 2023 ஆசியக் கோப்பையில் பாதுகாப்பு காரணங்களால் இந்தியா பங்கேற்காது என்று அறிவித்த பிசிசிஐ செயலாளர் மற்றும் ஆசிய கிரிக்கெட் தலைவர் ஜெய் ஷா அத்தொடரில் பொதுவான இடத்தில் நடத்துவதற்கு தேவையான அழுத்தம் கொடுப்போம் என்று தெரிவித்தார். அதனால் அதிருப்தியடைந்த பாகிஸ்தான் வாரியம் எங்கள் நாட்டுக்கு வராமல் போனால் உங்களது நாட்டில் நடைபெறும் 2023 உலக கோப்பையை நாங்களும் புறக்கணிப்போம் என்று பதிலடி கொடுத்தது.
அப்போதைய தலைவராக இருந்த ரமீஷ் ராஜா பதவி விலகிய பின் முன்னாள் தலைவர் நஜாம் சேதி பொறுப்பேற்று தொடர்ந்து உலக கோப்பையை புறக்கணிப்போம் என்று இந்தியாவுக்கு எச்சரிக்கைகளை கொடுத்து வந்தார். அந்த நிலைமையில் பாகிஸ்தான் பங்கேற்கும் 4 லீக் போட்டிகளை அந்நாட்டிலேயே நடத்துவதற்கு அனுமதி கொடுத்துள்ள ஆசிய கவுன்சில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மற்றும் ஃபைனல் உட்பட எஞ்சிய 2023 ஆசிய கோப்பை போட்டிகள் இலங்கை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
புதிய தலைவர்:
அதனால் பிரச்சனை முடிந்ததாக பார்க்கப்பட்டாலும் அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் போட்டியையும் சென்னையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் போட்டியையும் வேறு மைதானத்திற்கு மாற்றினால் தான் உலகக் கோப்பையில் பங்கேற்போம் என்று பாகிஸ்தான் கோரிக்கை வைத்தது. இருப்பினும் அதை ஐசிசி மறுத்து விட்ட நிலையில் தற்போது பாகிஸ்தான் வாரியத்தின் புதிய தலைவராக ஜாகா அஸ்ரப் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
இந்நிலையில் 2023 ஆசிய கோப்பையின் பெரும்பாலான போட்டிகளை இலங்கையில் நடத்தும் வகையில் அறிவித்துள்ள ஆசிய கவுன்சிலின் முடிவு நியாயமற்றது என்று விமர்சித்துள்ள அவர் தாம் தலைவராக இருந்தால் நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும் என்று கூறியுள்ளார். இருப்பினும் முந்தைய தலைவர் அனுமதியுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டு விட்டதால் தம்மால் எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டதாக கூறும் அவர் வருங்காலங்களில் இந்தியாவுக்கு எதிரான முடிவுகளில் கராராக நடந்து கொள்ளப் போவதாக எச்சரித்துள்ளார். இது பற்றி இஸ்லாமாபாத் நகரில் அவர் பேசியது பின்வருமாறு.
“முதன்மை போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானுக்கு வெளியே நடக்கிறது. குறிப்பாக நேபால் மற்றும் பூடான் போன்ற அணிகள் மட்டுமே பாகிஸ்தானில் விளையாடும் என்பது எங்கள் நாட்டு ரசிகர்களுக்கு நியாயமற்ற முடிவாகும். இந்த சமயத்தில் பாகிஸ்தான் வாரியத்தின் பொறுப்பில் இருந்த முந்தைய தலைவர் என்ன முடிவு எடுத்தார்கள் என்பது எனக்கு தெரியாது என்பதால் அதைப் பற்றி நான் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. ஒருவேளை இந்த குறைந்த நேரத்தில் அதில் சிறந்த முடிவுகளை எடுக்க முடிந்தால் அதை பாகிஸ்தானின் நலனுக்காக நான் நிச்சயம் செய்வேன்”
“என்னை பொறுத்த வரை இந்த மாடல் பாகிஸ்தானுக்கு எந்த விதத்திலும் உதவ போவதில்லை என்பதால் நான் அதை விரும்பவில்லை. குறிப்பாக இத்தொடரை நடத்துவதற்கான அனுமதியை பெற்ற பாகிஸ்தான் அதை முழுவதுமாக தங்கள் நாட்டில் நடத்தும் சூழ்நிலையை பெற்றிருக்க வேண்டும். அதை செய்யாமல் பாகிஸ்தானில் வெறும் 4 போட்டிகளை நடத்தி விட்டு எஞ்சியவற்றை இலங்கையில் நடத்துவது எங்கள் நாட்டு ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தாது. ஆனால் இது பற்றி ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டு விட்டதால் அதை நாம் பின்பற்ற வேண்டியுள்ளது”
இதையும் படிங்க:TNPL 2023 : மழையுடன் சேர்த்து சேலத்துக்கும் அல்வா கொடுத்த திருநெல்வேலி – எக்ஸ்ட்ரா இலக்கை தில்லாக எட்டியது எப்படி?
“எனவே நான் யார் எடுத்த முடிவையும் அடுத்து எதிர்க்க போகவில்லை. ஆனால் வருங்காலங்களில் இது போன்ற சமயங்களில் நான் நம்முடைய நாட்டுக்கு சாதகமாக முடிவுகளை எடுப்பதற்கு துணை நிற்பேன்” என்று கூறினார். அதாவது பாதியில் வந்ததால் போனால் போகட்டும் என்று விடுவதாக தெரிவிக்கும் அவர் வரும் காலங்களில் இது போன்ற முடிவுகளில் கண்டிப்பாக நடந்து கொள்ள இருப்பதாக கூறியுள்ளார்.



