TNPL 2023 : மழையுடன் சேர்த்து சேலத்துக்கும் அல்வா கொடுத்த திருநெல்வேலி – எக்ஸ்ட்ரா இலக்கை தில்லாக எட்டியது எப்படி?

TNPL 13
- Advertisement -

தமிழகத்தில் நடைபெற்று வரும் 2023 டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஜூலை 22ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு திண்டுக்கல்லில் இருக்கும் என்பிஆர் காலேஜ் மைதானத்தில் நடைபெற்ற 13வது லீக் போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற நெல்லை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய சேலத்திற்கு அமித் ஷாத்விக் ஆரம்பத்திலேயே 2 (3) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் அடுத்து வந்த கௌசிக் காந்தி மற்றொரு தொடக்க வீரர் கவினுடன் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

அதில் 11 ஓவர்கள் வரை நிலைத்த நின்று 2வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை செய்த அந்த ஜோடியில் ஒருபுறம் தடுமாற்றமாகவே செயல்பட்ட கவின் 13 (20) ரன்களை எடுத்து கடைசி வரை அதிரடியை துவக்காமல் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தி சென்றார். இருப்பினும் மறுபுறம் சற்று சிறப்பாக செயல்பட்ட கௌஷிக் காந்தி 5 பவுண்டரி 1 சிக்சருடன் 51 (43) ரன்கள் விளாசி அவுட்டான நிலையில் அடுத்து வந்த மான் பாப்ஃனா அதிரடியாக ஒரு பவுண்டரி 2 சிக்சருடன் 19 (8) ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அதற்கிடையே அபிஷேக் 12* (13) ரன்களும் அட்னன் கான் 10* (9) ரன்களும் எடுத்து தடுமாறிக் கொண்டிருந்த வேளையில் மழை வந்து சுமார் ஒரு மணி நேரம் தடுத்ததால் முதல் இன்னிங்ஸ் முடிவதாக நடுவர்கள் அறிவித்தனர். அதனால் 16 ஓவரில் சேலம் வெறும் 115/4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் நெல்லை சார்பில் அதிகபட்சமாக லக்சய் ஜெயின் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதைத்தொடர்ந்து அதே 16 ஓவரில் 129 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற டிஎல்எஸ் விதிமுறைப்படி புதிய இலக்கை துரத்திய நெல்லைக்கு அபிஷேக் டன்வர் வீசிய முதல் ஓவரிலேயே அருண் கார்த்திக் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அந்த நிலையில் வந்த அஜித்தேஷ் குருசாமி அதிரடியாக விளையாட முயற்சித்த போதிலும் எதிர்ப்புறம் தடுமாறிய மற்றொரு தொடக்க வீரர் ஸ்ரீ நிரஞ்சன் 14 (17) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார்.

- Advertisement -

போதாக்குறைக்கு அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் சிறப்பாக செயல்பட்ட அஜித்தேஷ் குருசாமி 5 பவுண்டரி 1 சிஸ்சருடன் 39 (31) ரன்களில் அவுட்டாகி செல்ல அடுத்ததாக வந்து நிதானமாக செயல்பட்டு கொண்டிருந்த ரித்திக் ஈஸ்வரனும் 18 (18) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார். அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் அடுத்து வந்த சோனு யாதவ் அதிரடியாக விளையாட முயற்சித்து 8 (4) ரன்களில் அவுட்டாக மற்றொரு வீரர் லக்ஷ்மேசா சூரியபிரகாஷ் தலா பவுண்டரி சிக்ஸரை பறக்க விட்டு வெற்றிக்கு போராடினார்.

அதனால் கடைசி 2 ஓவர்களில் அந்த அணிக்கு 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தொடர்ந்து அதிரடியாக செயல்பட்ட சூரியபிரகாஷ் கடைசி வரை அவுட்டாகாமல் சேலம் பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு 2 பவுண்டரி 3 சிக்சருடன் 34* (14) ரன்கள் எடுத்து சூப்பர் பினிஷிங் கொடுத்தார். கூடவே சுகேந்திரன் 11* (9) ரன்கள் எடுத்ததால் 15.4 ஓவரிலேயே 129/5 ரன்கள் எடுத்த நெல்லை 5 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது. மறுபுறம் மழை வருவதற்கு முன்பாகவே பேட்டிங்கில் சுமாராக செயல்பட்ட சேலம் எக்ஸ்ட்ரா இலக்கை நிர்ணயிக்கும் வாய்ப்பை பெற்றாலும் பந்து வீச்சில் அதிகபட்சமாக அபிஷேக் டன்வர் 2 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை.

இதையும் படிங்க:IND vs WI : வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவங்க 2 பேரும் விளையாடுவாங்க – மூத்த அதிகாரி வெளியிட்ட தகவல்

அந்த மழையால் நிர்ணயிக்கப்பட்ட எக்ஸ்ட்ரா இலக்கையும் சேர்த்து வெற்றிகரமாக சேசிங் செய்து அல்வா போன்ற வெற்றியை சுவைத்த நெல்லை இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் 3வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் ரன் ரேட் அடிப்படையில் 3வது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் 3 போட்டிகளில் 2வது தோல்வியை பதிவு செய்த சேலம் புள்ளி பட்டியலில் 5வது இடத்திற்கு சரிந்தது.

Advertisement