
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், கேப்டனுமான ரோகித் சர்மா கடந்த 2007-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 59 டெஸ்ட் போட்டிகள், 265 ஒருநாள் போட்டிகள் மற்றும் 159 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அது தவிர்த்து ஐபிஎல் தொடரிலும் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் அவர் இதுவரை 257 போட்டியில் விளையாடியது மட்டுமின்றி ஐந்து முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கோப்பையை வென்று சாதனை நிகழ்த்தியுள்ளார்.
கடந்த 2007-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த அவர் 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாகவும் இந்திய அணியில் இடம் பெற்று வந்தார். ஆனால் கடைசி நேரத்தில் உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மாவின் பெயர் நீக்கப்பட்டது.
அந்த நீக்கத்திற்கான சரியான காரணம் எதுவும் அப்போது கூறப்படவில்லை. இந்நிலையில் தற்போது 13 ஆண்டுகள் கழித்து அந்த உலகக்கோப்பை தொடரின் வீரர்கள் தேர்வின் போது என்ன நடந்தது? என்பது குறித்து தேர்வுக்குழு நிர்வாகிகளில் ஒருவரான ராஜா வெங்கட் தற்போது அதற்கு பின்னால் இருந்த விடயங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : நாங்கள் 2011-ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை தொடர்கான அணித்தேர்வில் அமர்ந்து பேசும்போது ரோகித் சர்மா குறித்தும் விவாதித்தோம். அவர் நிச்சயம் அந்த உலகக் கோப்பை தொடரில் இடம் பிடிக்கக்கூடிய வீரராக தான் இருந்தார். ஆனால் அந்த நேரத்தில் நாங்கள் அனைவரும் சேர்ந்து முதல் 14 வீரர்களை தேர்ந்தெடுத்தோம்.
இறுதியாக 15-வது வீரராக ரோகித் சர்மாவின் பெயரை தான் கூறினோம். ஆனால் அப்போதைய கேப்டன் தோனி ரோகித் சர்மா இந்த அணிக்கு தேவை இல்லை என்றும் அவருக்கு பதிலாக பியூஸ் சாவ்லா தான் சரியான ஆப்ஷனாக இருப்பார் என்று தேர்வுக்குழுவினரிடம் கூறினார். அதன் பின்னர் பயிற்சியாளரான கேரி கிரிஷ்டனும் தோனியின் அந்த முடிவு தான் சிறந்த தேர்வு என்று ஆமோதித்துள்ளார்.
இதையும் படிங்க : ரோஹித் சர்மா இதை செய்தா மட்டும் போதும்.. ஏலத்தில் எடுக்க நாங்க தயாராக இருக்கிறோம் – ஜான்டி ரோட்ஸ்
அவர்கள் இருவரின் வேண்டுகோளின் படி தான் ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு பியூஸ் சாவ்லாவை தேர்வு செய்தோம். தோனி மற்றும் கேரி கிறிஸ்டன் கேட்டுக்கொண்டதால் தான் ரோகித் சர்மாவை நீக்க வேண்டியதாகி விட்டது. இல்லையென்றால் நிச்சயம் ரோகித் சர்மாவிற்கு அந்த தொடரில் இடம் பிடித்திருக்கும் என ராஜா வெங்கட் கூறியது குறிப்பிடத்தக்கது.