3 விக்கெட் விழுந்ததும் உள்ளே வந்த ஜடேஜா.. பேட்டிங் வரிசையில் கொடுக்கப்பட்ட ப்ரமோஷன் – காரணம் என்ன?

Jadeja
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக ராஜ்கோட் நகரில் பிப்ரவரி 15-ஆம் தேதியான இன்று துவங்கிய மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணியானது இன்னிங்சின் ஆரம்பத்திலேயே அடுத்த அடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த வகையில் பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் அதிரடியாக விளையாடலாம் என்று இன்னிங்சை துவங்கிய இந்திய அணியானது போட்டியின் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது.

குறிப்பாக துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும், மூன்றாவது வீரராக களமிறங்கிய சுப்மன் கில் (0) ரன் எதுவும் எடுக்காமலும், நான்காவது வீரராக களமிறங்கிய ரஜத் பட்டிதார் 5 ரன்களிலும் ஆட்டமிழக்க இந்திய அணி 33 ரன்களுக்கு எல்லாம் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது அடுத்த வீரராக 5 ஆவது இடத்தில் சர்ஃபராஸ் கான் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் யாரும் எதிர்பாரா வகையில் 5 ஆவது வீரராக ரவீந்திர ஜடேஜா களத்திற்கு வந்தது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் இந்த போட்டியில் அறிமுகமான பேட்ஸ்மேன்களான சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜுரேல் ஆகியோர் ஓய்வறையில் இருந்தும் ஜடேஜா முன்கூட்டியே வந்தது ஏன்? என்ற கேள்வி எழுந்தது. அதற்கு பதிலளிக்கும் விடயமாக சில காரணங்கள் இருப்பதை நாம் பதிவில் பார்க்கலாம்.

அந்த வகையில் ரோகித் சர்மா ஏற்கனவே வலது கை பேட்ஸ்மேனாக களத்தில் இருக்கும் போது ஜடேஜா இடது கை வீரராக உள்ளே வந்தால் அது நன்றாக இருக்கும் என்று இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம். அதேபோன்று ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்து வெளியேறியதும் களத்திற்குள் வந்த வலதுகை பேட்ஸ்மேன்களான கில் மற்றும் பட்டிதார் ஆகியோர் வந்த வேகத்திலேயே நடையை கட்டினார். அதோடு இருபுறமும் வலது கை ஆட்டக்காரர்கள் இருப்பதால் இங்கிலாந்து வீரர்களும் எந்தவித பிரச்சினையும் இன்றி பந்து வீசினர்.

- Advertisement -

இந்த திட்டத்தை உடைக்கத்தான் முன்கூட்டியே ஜடேஜா களமிறக்க பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. ஒருபுறம் ரோகித் சர்மா இருக்க மற்றொரு புறம் இடதுகை வீரரான ஜடேஜா இருந்தால் அது இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் லைன் மற்றும் லெந்தை மாற்றும் வகையில் அமையும். அதேபோன்று தற்போதைய இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் மட்டுமே அனுபவ வீரர்கள் என்பதால் அவர்கள் இருவரும் சேர்ந்து பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைக்க இது ஒரு வழியாகவும் இருக்கும் என்பதனால் முன்கூட்டியே ஜடேஜாவை பேட்டிங்கிற்கு அனுப்பியிருக்கலாம் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : 227 ரன்ஸ்.. 9 விக்கெட்.. நியூஸிலாந்துக்கு தொல்லை கொடுக்கும் இளம் தெ.ஆ அணி.. வெற்றியை அள்ளப்போவது யார்?

ஒரு வகையில் இந்த பிரமோஷன் நல்லதாக இருந்தாலும் ரோகித் சர்மா அல்லது ஜடேஜா ஆகிய இருவரில் ஒருவர் ஆட்டமிழந்தால் கூட அனுபவம் இல்லாத பின் வரிசை ஒரேடியாக சரிவை சந்திக்கவும் வாய்ப்பிருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பிடம் 33 ரன்களுக்கு எல்லாம் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்திய அணி தற்போது ரோகித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகியோரது சிறப்பான (100 ரன்கள்*) பார்ட்னர்ஷிப் காரணமாக நல்ல நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது.

Advertisement